ஆங்கிலவழிக் கல்விதான் படிக்கிறேன்!’ - மாநிலத்திலேயே தமிழில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி துர்கா

 ஆங்கிலவழிக் கல்விதான் படிக்கிறேன்!’ - மாநிலத்திலேயே தமிழில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி துர்கா



தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா, 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாநிலத்திலேயே தமிழில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி இவர்தான்.

ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்ணும், கணிதத்தில் 87 மதிப்பெண்ணும், அறிவியலில் 79 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 86 மதிப்பெண்ணும் என மொத்தம் 448 மதிப்பெண் பெற்றுள்ளார்.

துர்காவின் தந்தை செல்வகுமார், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். துர்காவை பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மாணவி துர்காவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது குறித்து மாணவி துர்காவிற்கு வாழ்த்துகளைச் சொல்லிப் பேசினோம். “நம்மளோட தாய்மொழி தமிழ்தான். நான் இங்கிலீஷ் மீடியம்ல படிச்சாலும் என்னோட விருப்பப் பாடம் தமிழ்தான்.

பொதுவா இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிற மாணவர்கள் தமிழ் பாடத்துல அதிக ஈடுபாடு இல்லாம இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. எங்க ஸ்கூல்ல தமிழ் பாடத்துல ஸ்டூடன்ட்ஸ் மார்க் குறைஞ்சுடக்கூடாதுன்னு தமிழுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. வாசிப்பு பயிற்சி, எழுத்துப் பயிற்சி, மனப்பாட பயிற்சிதான் முக்கியமானது. தமிழ்ல உரைநடையை விட செய்யுள், இலக்கணப் பகுதிகள் கடினமா இருக்கும்னு நிறைய மாணவர்கள் நினைக்கிறாங்க. பக்திப்பாடல், சினிமாப் பாடல்களை மனசுக்குள்ள பதிய வச்சுட்டு வாய்குள்ள முணுமுணுக்குற மாதிரி செய்யுள்கள்ல உள்ள மனப்பாடப் பாடல்களை மனசுக்குள்ள பதிய வெச்சாலே போதும்.

இங்கிலீஷ் கிராமர் மாதிரியேதான் தமிழ் இலக்கணமும். எல்லா பாடம் மாதிரி, தமிழ் பாடத்துலயும் எங்க டீச்சர் ஒவ்வொரு பகுதிக்கும் ரெண்டு, மூணு தேர்வு வைப்பாங்க. அதுல பிழையானதைச் சுட்டிக்காட்டி திரும்பத் திரும்ப எழுத வைப்பாங்க. ’முகத்துல புள்ளி வராம பார்த்துக்கிற மாதிரி, மனப்பாடப் பாடல்களை எழுதித் திருத்தும் போது சிவப்பு நிற சுழி இல்லாம பார்த்துக்கணும்’னு எங்க டீச்சர் அடிக்கடி சொல்லுவாங்க.

தமிழைப் பொறுத்தவரை வரிவரியா தெளிவா வாசிச்சிக்கணும், வாசிச்சதை பொருள் புரிஞ்சு பிழையில்லாம எழுதிப் பார்க்கணும். பிழையே இல்லேங்கிற நிலை வர்ற வரைக்கும் திரும்பத் திரும்ப எழுதிப் பழகணும். தமிழ்ங்கிறது வெறும் மதிப்பெண்ணுக்கானது மட்டுமில்ல. டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகள்ல தமிழ் பாடத்துக்கும் முக்கியத்துவம் இருக்கு. பலரும் போட்டித் தேர்வுல தமிழ்பாடத் தயாரிப்புல திணறிப் போறாங்க. அதனால, தமிழை நல்லா படிச்சா வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்கும்.

என்னோட இந்த சாதனைக்கு தமிழ் ஆசிரியை, தலைமை ஆசிரியை, நண்பர்கள், அம்மா, அப்பா எல்லாரும்தான் காரணம். எனக்கு விவசாயம்னா ரொம்ப பிடிக்கும். பன்னிரண்டாம் வகுப்புல கணித அறிவியல் குரூப் எடுத்து, அதுலயும் நல்ல மார்க் வாங்கி, பி.எஸ்.சி அக்ரி படிக்கலாம்னு முடிவெடுத்துருக்கேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

நன்றி: விகடன் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,