சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
வரலாற்றில் இன்று ஜூன் 18, 1954 சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை துவக்கி வைக்கப்பட்டது . அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. புண்ணியகோடி முதலியார் என்பவர் தானமாக அளித்த நிலத்தில், இந்தியப் பெண்கள் சங்கத்திடமிருந்து பெற்ற ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியைக் கொண்டு இந்த மருத்துவமனையை உருவாக்கினார் அவர்.
1952 -ம் ஆண்டு, அக்டோபர் 10- ம் தேதி அப்போதைய பிரதமர் நேரு இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 12 படுக்கைகளுடன், அடையாறு கெனால் பேங்க் சாலையில் 1954- ம் ஆண்டு ஜூன் 18 - ம் தேதி முதல் இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. தற்போது 535 படுக்கைகளுடனும், பல்வேறு நவீன வசதிகளுடனும் செயல்பட்டு வருகிறது. வருடத்துக்குச் சராசரியாக 1.41 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். ஆண்டுதோறும் 15 ஆயிரம் புதிய நோயாளிகள் இந்த மையத்துக்குச் சிகிச்சை பெற வருகிறார்கள். 1974 - ம் ஆண்டு, இந்த மருத்துவமனையைப் புற்றுநோய் ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான மண்டல மையமாக மத்திய அரசு அறிவித்தது.
தெற்காசியாவின் முதல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் இதுதான். கதிரியக்கப் புற்றுநோய் மருத்துவத் துறையும் (Radiation oncology department) , குழந்தைகளுக்கான புற்றுநோய்த்துறையும் (Pediatri oncology department) இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் ஏற்படுத்தப்பட்டது.
அதிநவீன எக்ஸ்ரே மெஷின்கள், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள், 3D, 4D வசதி கொண்ட அல்ட்ராசோனிக் மெஷின்கள், எனப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான நவீன வசதிகள் அனைத்தும் இங்குள்ளன. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய, `டிஜிட்டல் மெமேகிராபி' ( Digital Mammography ) வசதியும் இருக்கின்றன. புற்றுநோய் பற்றிய உயர் மருத்துவப் படிப்புகளான Doctorate of Medicine in Medical Oncology, M.Ch. (Surgical Oncology), Master of Chirurgiae in Surgical Oncolog ஆகிய படிப்புகள் தெற்காசியாவிலேயே இங்குதான் முதன்முதலில் கொண்டுவரப்பட்டன. ஆண்டுதோறும் 80 மாணவர்கள் இங்கு ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments