தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம்

 ஜூன் 29,

தமிழின் சிறந்த மொழியியல் அறிஞரான வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் நினைவு நாள் இன்று.




இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர். வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்றவர் நெல்லை இந்துக்கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். ஐக்கிய அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் மொழியியலில் பெற்றார். இவர் சில காலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர். மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர். ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது இணைவேந்தராகவும் விளங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்தப் பக்க பலமாக இருந்தவர். இவர் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. திராவிடமொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர். ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.

இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகியன முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,