என் ‘உயிரின் உயிரே’ பிரிந்துவிட்டது”
என் ‘உயிரின் உயிரே’ பிரிந்துவிட்டது” - கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம்.
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியின்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்னையால், சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
54 வயதான கேகே என்றழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், இந்திய சினிமா துறையில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகராகத் தடம் பதித்தவர்.
90-களில் தலைமுறையினரால் பெரிதும் கொண்டாடப்பட்ட பல்வேறு பாடல்களை அவர் பாடியுள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர், இசைத் துறையில் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமலே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காளி, குஜராத்தி மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார்.
கேகே 1968, ஆகஸ்ட் 23-ஆம் தேதியன்று, சி.எஸ்.மேனன் மற்றும் குன்னத் குனகவள்ளி ஆகியோருக்குப் பிறந்தார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு குறைந்த காலகட்டத்திற்கு மார்க்கெட்டிங் அசோசியேட்டாக பணியாற்றியவர், இசைத் துறையில் ஈடுபடுவதற்காக மும்பைக்கு இடம் பெயர்ந்தார்.
1996-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 1997-ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் பிரபல பாடலான ஸ்டிராபெர்ரி கண்ணே என்ற பாடல் முதல், காதல் வளர்த்தேன், உயிரின் உயிரே, காதலிக்கும் ஆசை இல்லை, அப்படி போடு எனப் பல பிரபல பாடல்களைப் பாடியவர், தமிழ் திரைப்படங்களில் இதுவரை அவர் சுமார் 66 பாடல்களைப் பாடியுள்ளார்.
Comments