சிலேடை வாக்கியங்களை அமைப்பதில் நா. காமராசன் கெட்டிக்காரர்

 ஒரே சொல்லை இருபொருள்படும்படிக் கையாள்வதைச் சிலேடை என்பார்கள். அப்படிப்பட்ட சிலேடை வாக்கியங்களை அமைப்பதில் நா. காமராசன் கெட்டிக்காரர். நா. காமராசனை நான் தேடிப் படிக்கத் தூண்டியவையே அவருடைய சிலேடை வரிகளில் எனக்கேற்பட்ட ஆர்வம்தான்.


வஞ்சிக் கோமான் விழிகள் சந்திக்கின்ற வஞ்சிக்கோ மான்விழிகள் / தன்னிழலைத் தண்ணீரில் விழவைக்காமல் தண்ணிழலை வளர்க்கின்ற மண்டபம் / நிலையான தண்மையுள்ள எழிலே வாழ்வின் நிலையாமைத் தன்மையுள்ள நிழலே / வஞ்சியாளும் சேரமன்னர் வஞ்சியாது இவ்வஞ்சியாளைச் சேர்ந்த மன்னர் / வெஞ்சமரில் வேல்மன்னர் வாள்மன்னர் என் வேல்விழியில் வாழ்மன்னர் / கொஞ்சுகின்ற மலரிதழ்மேல் அரும்பு மீசை கொண்ட மன்னர் கொடையருளில் கொண்டல் மன்னர் - இவையெல்லாம் சிறுவயதில் என்னை உடனே ஈர்த்து நின்றன. பிற்காலத்தில் சிலேடைப் பயன்பாடுகள் வழக்கொழிந்துவிட்டாலும் அது தரும் சுவைக்கென்று ஒரு தனி மதிப்பு என்றும் இருக்கவே செய்யும். சிலேடைகள் தற்காலக் கவிதைகளில் காணப்படாமைக்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது அது புலமையைக் கொண்டு விளையாடும் ஆட்டமாக இருக்கிறது என்பதைத்தான். தற்காலக் கவிஞர்களுக்கு மொழிப்புலமையோடு எந்த ஒட்டுறவும் இல்லை. புழக்கத்தில் உள்ள சிலவாயிரம் சொற்களைக் கொண்டு இங்கே பலருக்கும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் குறைபட்டுக் கூறுவீர்களேயானால் நவீனம் என்ற குத்தை விட்டு உங்களைப் படுக்கப்போட்டுவிடுவார்கள்.
தொட்டில் குழந்தைக்கு ஒரு தாலாட்டுப்பாடல் வடிவில் அவர் எழுதிய கவிதை ஒன்று.
தொட்டில் துணி முரடோ இல்லை இவன்
தோளெலும்பும் பூதானோ
ஆரோ எவரோ நீ
அடிவயிற்றுப் புதையலோ
உன் உதையெல்லாம் ஒத்தடமோ
உமிழ்நீர் இளநீரோ
புதுக்கவிதையில் நாட்டுப்புறப் பாடல் அமைப்பில் முதலில் எழுதிப் பார்த்தவரும் அவரே.
அழகு என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அவர் பட்டியல் ஒன்றைப் போட்டு எழுதிய வரிகள் இவை. இந்தக் கவிதை பிற்பாடு எப்படிப்பட்ட திரைப்பாடலானது என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மங்கைக்குக் கண்ணழகு ! துள்ளுகின்ற
மானுக்குப் பேரழகு வெள்ளைப்புள்ளி !
செங்கதிர்க்குப் பேரழகு ஒளிநெருப்பு !
சேய்மீன்கள் தானழகு பொய்கைத் தாய்க்கு !
சங்கிற்கு நிறமழகு ! தேய்ந்துபோகும்
சந்தனந்தான் மார்பிற்கு அழகு ! நல்ல
தங்கநகை கழுத்திற்கு அழகு ! என்றன்
தம்பிக்கோ தனியழகு குழந்தைப் பேச்சு !
- கவிஞர் மகுடேஸ்வரன்


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,