நாடோடி மன்னன்
ஒருபக்கம் புகழ் வந்து குவிந்தாலும் இன்னொரு பக்கம் அவமானங்களையும் சந்தித்தார் எம்ஜிஆர் எனபதுதான் அதிர்ச்சியான விஷயம். அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் தயாரிப்பாளர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுதந்திரத்திற்கும் எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது கடைசியில் இந்த மோதல் எம் ஜி ஆரின் படத்தையோ பெயரையோ போடாமல் வெறும் பானுமதியை மட்டுமே பிரதானப்படுத்தி அலிபாபாவும் 40 திருடர்கள் ரிலீஸ் விளம்பரம் பத்திரிகைகளில் வெளியாகும் அளவுக்கு போனது. படத்தின் ஹீரோவின் பெயரே இல்லாமல் வெளியான முதல் விளம்பரம் அதுவாகக்கூட இருக்கலாம்.. இப்படி நொந்துபோனதால்தான், இனி பெரிய கம்பெனிகளில் நடிப்பதில்லை என்று எம்ஜிஆர் தீர்மானித்தார்.
தொடர்ந்து வெற்றிப் படங்கள் அமைந்து பொருளாதார ஏற்றம் பெற்ற நிலையில் தனது கனவுப்படமான நாடோடி மன்னன் படத்தை தொடங்கினார்..
தமிழில் பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர் பெற்ற ஜெமினி நிறுவனத்திற்கு நிகராக நாடோடி மன்னனை உருவாக்கினார் தன்னிடமிருந்த பணம் போக, வேண்டப்பட்ட இடங்களிலெல்லாம் கைநீட்டி கடன் வாங்கி இந்த படத்தை எடுத்தார். நடிப்பு இயக்கம் தயாரிப்பு என மூன்றையும் தன் தலைமீது சுமந்து கொண்டார்..
படப்பிடிப்பு நடந்த நாட்களில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பணம் தண்ணீராக பாய்ந்தது.. மூன்று கதாநாயகிகள், ஏகப்பட்ட பாத்திரங்கள், பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் பாடலாசிரியர்கள், ஏகப்பட்ட அரங்க அமைப்புகள்..
பிரமாண்டம் என்ற பெயரில் என்ன செய்வதென்றே தெரியாமல் எம்ஜிஆர் பைத்தியக்காரத்தனமாக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பலரும் விமர்சித்தனர். அவ்வளவு ஏன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பானுமதி போன்ற நடிகைகளுக்கும் அந்த எண்ணம் தலைதூக்கியது, எதிர்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் எம்ஜிஆர் வைத்த ஒரே பதில், இந்த படம் ஓடினால் நான் மன்னன் இல்லையென்றால் நாடோடி.
1958 ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது நாடோடிமன்னன். மூன்றே முக்கால் மணி நேரம் போடும் படத்தில் சரோஜாதேவி தோன்றும் கடைசி ஒன்றேகால் மணி நேரம் முழுவதும் வண்ணப்படம்.
ஒரு ஆணும் பெண்ணும் திமுக கொடியை தாங்கியபடி எம் ஜி ஆர் பிக்சர்ஸ் இலச்சினை திரையில் தோன்றியது. தானிருந்த கட்சியின் கொடியையே படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த முதல் ஆள் எம்ஜிஆர் தான்.. அதுவும் எப்போது? வசூல் சக்ரவர்த்தியாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்த பிறகு.
- ஏழுமலை வெங்கடேசன்
நன்றி: பத்திரிக்கை.காம்
Comments