சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள்

 ஜீன் 25



வட நாட்டு அரசியல் தளத்தை புரட்டிப் போட்ட


சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள்


”ஆயிரம் ஆண்டு பழமை நிறைந்த முறையை எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்திடும்போது, நாங்கள் சிக்கலுக்கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.”


இது, 1990-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி, அன்றைய பிரதமர் வி.பி.சிங், தனது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது நடந்த விவாதத்தில் மக்களைவையில் கூறியவை.


அரசியலில் நேர்மை, சமுதாய ஒற்றுமையில் அக்கறை, மதசார்பின்மை கொள்கை, சமுக நீதி – இதனைக் காப்பாற்ற அதிக விலை கொடுத்தவர் வி.பி.சிங்.


1986-87-ல் நிதி அமைச்சராக இருந்தபோது, வரி ஏய்ப்பு செய்த அம்பானி நிறுவனம் மீதும், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு நெருக்கமாக இருந்த அமிதாப் பச்சன் ஆகியோர் மீதும் துணிந்து நடவடிக்கை எடுத்தவர். அதன் காரணமாக நிதி அமைச்சர் பதவியில் இருந்து  பாதுகாப்புத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.


இன்று, பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதற்கு முன்னர் உயர் ஜாதியினரும்தான் முதல்வர் என்ற நிலை மாறி இன்று எல்லோரும்

 முதல்வர் என்ற நிலை மாறியது எப்படி?


ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அதாவலே போன்ற விளிம்பு நிலை சமுதாயத்தினர் இன்று அரசியல் கட்சி உருவாக்கி, ஆட்சி பீடத்தில் பங்கு பெறுவதும், உதித் ராஜ் போன்ற இந்திய வருவாய் துறையின் முன்னாள் அதிகாரி, பாஜக நாடாளுமன்ற வேட்பாளராகவே புது தில்லியில் போட்டியிட்டதும், இதற்கு முன்பு நினைத்து பார்த்திட முடிந்ததா?


இந்த அரசியல் மாற்றமெல்லாம் எப்போது நடந்தது? காங்கிரசிலிருந்து வி.பி.சிங் வெளியேறி, ஜன்மோர்ச்சா அமைப்பை தொடங்கி, பின்னர் ஜனதா தளம் எனும் கூட்டமைப்பை துவங்கி, தேர்தலில் வெற்றி பெற்று 1990-ல் பிரதமர் ஆனதற்கு பின்புதானே.


தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் முதன்மையானது, ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்றுவேன் என கூறியவாறு, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணையை 1990 ஆகஸ்டு 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.


எதிர்பார்த்தவாறே, உயர் ஜாதியினரும் கடுமையான எதிர்ப்பை சாலைகளிலும், ஊடகங்களிலும் தெரிவித்தனர். கட்சியில் தன் செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதற்காக, வி.பி.சிங் நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம் சாற்றினர்.


இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள், 16.6.1989-ல் புது தில்லியில் வி.பி.சிங் பேசிய போதும் சரி, பின்னர், 18.9.1989-ல் சென்னையில் பேசியபோதும், மண்டல் அறிக்கையை தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என்று வி.பி.சிங் சொன்னதை, வசதியாக மறந்து அல்லது மறைத்து தங்களது எதிர்ப்பை ஆக்ரோசமாகக் காட்டினர்.


நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சூத்திர மக்களின் உரிமை சாசனமாம் மண்டல் பரிந்துரையை 1980 முதல் முடக்கி வைத்ததை வெளியில் கொண்டு வந்தவர் வி.பி.சிங்.


இதற்காக தனிப் பெருமை எதையும் வி.பி.சிங் கொண்டாடவில்லை. மாறாக, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், லோகியா ஆகியோரது கனவை தனது அரசு நனவாக்கியதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


இன்று மக்களவையில் பெரியார் வாழ்க என்ற முழக்கத்துடன், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றார்கள் என்றால், அதற்கு முன்னோடியாக 1990-லேயே, நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரின் பெயரை முழங்கியவர் வி.பி.சிங்.


அதுமட்டுமல்ல; பின்னர் 1996-ல் அய்க்கிய முன்னணி ஆட்சி அமைத்தபோது, தனக்கு அளிக்கப்பட்ட பிரதமர் வாய்ப்பை ஏற்க மறுத்து, தேவகவுடா பிரதமராகும்வரை, புது தில்லியில் நுழையாமல் தவிர்த்தவர்; மீண்டும் 1997-ல் தேவகவுடாவிற்குப் பிறகு, ஐ.கே.குஜ்ரால் பிரதமராக வழிவகுத்தவரும் வி.பி.சிங் தான்.


தகவல் அறியும் சட்டம், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு அடிகோலியவர்களான அருணா ராய், நிகில் தேவ் ஆகியோர், வி.பி.சிங் மறைவை ஒட்டி விடுத்த இரங்கலுரையில், வி.பி.சிங் வரலாறு, மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்த போராடியதோடு முடிந்துவிட வில்லை; ஏழை மக்களின் பக்கமும், நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அவர் போராடியது எங்களுக்கு ஊக்கம் அளித்தது; இந்த சட்டங்கள் நிறைவேற வழிவகுத்தது என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள்.


தனது இறுதி நாள்வரை ஏழை மக்களின் உரிமைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குமாகவே தனது வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டவர். அரசியலில் நேர்மை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, மதசார்பின்மை, சமுக நீதி ஆகியவற்றில் உறுதியான செயல்பாடு என போராடிய ஒரு மாமனிதரை,  ஊடகங்களும் என்றைக்காவது பாராட்டியதுண்டா? 


இதைவிட மிக கொடுமை; வி.பி.சிங் அவர்களாலே அடையாளம் காணப்பட்டு இன்றளவும் அரசியல் செய்யும் லாலு பிரசாத், நிதிஸ் குமார், முலாயம்சிங், சரத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் போன்றோர், வி.பி.சிங் பற்றி எந்த மூச்சும் விடாமல் இருப்பதுதான்.


ஆனால், சமுக நீதிக்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் நாடு, என்றும் அவரது நினைவை, சமுக நீதி உணர்வை போற்றுகிறது என்றால், காரணம் இது பெரியார் மண். வி.பி.சிங் பதவி இழந்த நிலையில், அவரை தமிழ் நாட்டிற்கு அழைத்து, மாநிலம் முழுவதும் பிரச்சார பயண ஏற்பாட்டை செய்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். அவரை பல்வேறு மாநாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற செய்து, வி.பி.சிங் அவர்களை சமுக நீதிக் காவலர் என மக்கள் மன்றத்தில் அடையாளப்படுத்தியவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


அதனால்தான், தன் வாழ் நாள் இறுதிவரையிலும், பெரியார் இயக்கத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் அளவற்ற அன்பைச் செலுத்தினார் வி.பி.சிங்.


இந்த நிலையில், மத்திய அரசின் மக்கள் விரோத, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளை எதிர்க்க, தந்தை பெரியாரின் தத்துவம் ஒன்றுதான் தீர்வு என பிற மாநிலங்கள் எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், தமிழகத்தில் மக்கள் தந்த தீர்ப்பு, இத்தகைய எண்ணத்தை வட மாநிலங்களில் ஏற்படுத்தி உள்ளது.


தந்தை பெரியாரின் சமுக நீதி, மதசார்பின்மை தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பும் கடைமையும், பெரியார் இயக்கத்திற்கும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளது.


வி.பி.சிங் எந்த தத்துவத்திற்காக வாழ்ந்தாரோ, எந்த கொள்கைக்காக பிரதமர் பதவியை இழந்தாரோ, அந்த சமுக நீதி, மதசார்பின்மை கொள்கையை நிறைவேற்ற வி.பி.சிங் பிறந்த நாளில் உறுதி  ஏற்போம். அதுவே, வி.பி.சிங் அவர்களுக்கு நாம் அளிக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி.


வாழ்க வி.பி.சிங்; வெல்க சமூக நீதி.

பகிர்வு



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி