நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் -
*
*நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் - ஜூன் 12, 1932*
தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர்.
இவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.
பத்மினியும் சகோதரி லலிதாவும் 1948-ம் ஆண்டு இருவரும் நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு அறிமுகம் ஆனார்கள். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் அறிமுகம் ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார் பத்மினி. பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். இப்படத்தின் சிறப்பு அம்சமாக, லலிதா-பத்மினியின் நடனங்கள் அமைந்தன.
சுமார் 30 ஆண்டுகளாக திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இவர், தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். 250 படங்களுக்கு மேல் நடித்தார்.
1952-ல், “பராசக்தி” தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த “பணம்” என்ற படத்திலும் சிவாஜி கணேசன் நடித்து வந்தார். இந்த படத்தின் கதாநாயகி பத்மினி. “பராசக்தி” வெளிவந்த சில நாட்களுக்குப்பின் “பணம்” வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி-பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.
சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர்.
1954-ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர். 1955 ஆகஸ்டில் வெளிவந்த “மங்கையர் திலகம்” பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும். இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக – அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார். ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் “மங்கையர் திலகம்”.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, கதாநாயகிகளில் பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.
ஜெமினிகணேசனுடன் பத்மினி இணைந்து நடித்த படங்களில் “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, “மீண்ட சொர்க்கம்” ஆகியவை முக்கியமானவை. வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனம், பிரமிப்பாக இருக்கும். எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் “மதுரை வீரன்” முக்கியமானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்ற பத்மினி, சிறந்த நடிகை விருது, கலைமாமணி விருது, சிறந்த பரதநாட்டியக் கலைஞர் விருது, பிரிம் பேர் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
1961-ம் ஆண்டு அவர் டாக்டர் கே.டி.ராமச்சந்திரனை மணந்த பின் பட உலகில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும், அமெரிக்காவில் தங்கி இருந்தபோது, நாட்டிய பள்ளி நடத்தி வந்தார். கணவரின் மறைவுக்கு பிறகு சில படங்களில் நடித்தார்.
தன் மகனுடன் அமெரிக்காவில் வசித்து வந்த பத்மினி, 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பத்மினி, 2006-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி காலமானார்.
அனந்தகிருஷ்ணன்
Comments