நெஞ்சில் தாலாட்டுகிறோம்
ஒவ்வொரு நாளும் பிறப்பவன்
*
காதுகளை உதடுகளாக மாற்றிக்
காற்றை ருசிக்க வைத்த
ரசவாதி
பாமரர்க்கும் புரியும்படி
வேதாந்தம் உரைத்த
தத்துவவாதி
பலாப் பழத் தமிழைப்
பஞ்சு மிட்டாயாக
எளிமை செய்த
இலக்கியவாதி
சதுரங்க விளையாட்டின்
சதிகள் புரியாமல்
அப்பாவியாய்
ஆட்டத்தில் திகைத்து நின்ற
அரசியல்வாதி
கண்ணனைப் பாடிக் களிப்பேறிக் களிப்பேறி
ஆண் ஆண்டாளாய் ஆன
ஆன்மீகவாதி
வாதி பிரதிவாதி
இருவருமே தானாகி
வாழ்க்கையை விசாரணை செய்த நியாயவாதி
போருக்கு அழைத்த
துன்பங்களை எல்லாம்
புன்னகையால்
மண்டியிடவைத்த
யதார்த்தவாதி
மிதவாதி தீவிரவாதி
பயங்கரவாதி எல்லோருக்குமே
உன் பாடல்கள் கேட்டால்
இதயம் கசியும்.
காலங்கள் தேசங்கள் எத்தனைக் கடந்தாலும்
உன் மேல் நாங்கள் கொண்ட
காதல் மட்டும்
தேயாமல் பெருகும்.
கவியரசே
உனக்குப் பிறந்த நாள்
மட்டும்தான் உண்டு
ஒவ்வொரு நாளும் பிறப்பவன் நீ
காற்றில் உன் கானம் பிறக்கிறது
அதைக் காதில் ஏந்தித் தாலாட்டுகிறோம்
காகிதத்தில் உன் கவிதை
பிறக்கிறது
அதைக் கண்ணில் வாங்கி
நெஞ்சில் தாலாட்டுகிறோம்
ஒலிப்பேழையில்
உன் குரல் மலர்கிறது
அதன் நறுமணத்தை
மனதால் உணர்கிறோம்
மறப்பதே இல்லை என்பதால் உன்னை
நினைப்பதும் இல்லை.
காலை எழுந்து
உன் புத்தகப் பட்டியலைத்தான் படித்தேன்.
மலைத்துப் போய் நிற்கிறேன்
உன் காலைத் தொட்டு வணங்குவதைத் தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை.
வாழ்ந்த
ஒவ்வொரு நாளையும்
படைப்பியக்கியமாய்
ஆக்கிய உன் பேராற்றல்
பிரமிக்க வைக்கிறது.
பெருங்கவிஞனே
உன் பிறந்த நாளில்
உன் உன் பாடல் ஒன்றைக் கேட்கிறேன்
உன் நிழலில் கூட
உன் அனுபவத்தின் சாரம் உண்டு என்று சொல்லியிருக்கிறாயே....
இன்று
உன் நூல்களின்
சில பக்கங்களைத்
தடவிப் பார்ப்பேன்
இணையத்தில் உன் குரல்
எங்காவது இருக்கும்
அதைத் தேடிச் சென்று கேட்பேன்
'அலையிலாடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்'
இரண்டு வரிகளில்
உன்னைப் போல்
காவியம் எழுதிவிட முடியுமா ?
காற்றைப் போல் எளிமையானவனே
நீ காற்றாகவே ஆகிவிட்டாய்
எமக்குள் எப்போதும் வாழ்கிறாய்.
*#கவிஞர் #கவியரசு #கண்ணதாசன்
- பிருந்தா சாரதி
*
Comments