Monday, June 6, 2022

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

 தன் தந்தையின் நண்பர் திரு. சங்கர சாஸ்திரியின் இசையில் மிஸ்டர், சம்பத் இந்தித் திரைப்படத்தில் பாடினார் பி.பி.எஸ். தொடர்ந்து ‘ஜாதகம்’ எனும் தமிழ்ப் படத்தில் பாட வாய்ப்பும் அமைந்தது. முறையான இசைப் பயிற்சி இல்லாததினால் இடைவெளி நேர, சில ஆண்டுகள் கழித்து ஜி. ராமநாதன் இசையில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ஜெமினி கணேசனுக்காக ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ பாடலைச் சுசிலாவுடன் சேர்ந்து பாடினார். பின் வெளிவந்த ‘அடுத்த வீட்டுப் பெண்’ திரைப்படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’, ‘வனிதா மணியே’ பாடல்களும், ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ‘காற்று வெளியிடை கண்ணம்மா ..’ பாடலும் பி.பி.எஸ்க்கு தமிழ் திரையிசையுலகில் ஒரு சிறந்த அறிமுகமாக அமைந்தன.ஆந்திரப் பிரதேசம், காக்கிநாடாவில் பிறந்த பி.பி.எஸ்ஸின் தமிழ் உச்சரிப்பும், மென்மையும், அக்காலத்தில் உச்சஸ்தாயியில் பாடி வந்தவர்கள் இடையே அவ்வளவாக எடுபடவில்லை. 1956 களில் தெலுங்குத் திரைப்படங்களில் சில பாடல்களைப் பாடினார். கண்டசாலாவின் குரலுக்கு எதிரே இவரது குரல் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

அறுபதுகளின் தொடக்கத்தில் சமூகப் படங்கள் வரத் தொடங்க மெல்லிசை பாடல்கள் பிரபலமடையத் தொடங்கியது. அப்போது தான் பி.பி.எஸ்ஸை ஜெமினி கனேசனுக்காகப் பாட வைத்தனர் மெல்லிசை மன்னர்கள். பின்னர் இவர்களது கூட்டணியில் பல பாடல்கள் இமாலய வெற்றியடையத் துவங்கின. பீம்சிங்கின் இயக்கத்தில் வெளியான ”பா” வரிசைப் படங்களும், ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான பல படங்களும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

எம்.பி. ஸ்ரீனிவாஸ் இசையில் பி.பி.எஸ். பாடிய “தென்னங்கீற்று சோலையிலே” கேட்டவுடன் மனம் லேசாகிப் போவதை உணர்வீர்கள். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் இவர் பாடிய பாடல்கள் பல சாகாவரம் பெற்றவை.

காலங்களில் அவள் வசந்தம் (பாவமன்னிப்பு), நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (நெஞ்சில் ஓர் ஆலயம்), விஸ்வநாதன் வேலை வேண்டும் (காதலிக்க நேரமில்லை) பொன் என்பேன் (போலிஸ்காரன் மகள்), ரோஜா மலரே ராஜகுமாரி (வீரத்திருமகன்), மயக்கமா கலக்கமா (சுமைதாங்கி) போன்ற பாடல்கள் மிகக் குறிப்பிடத்தக்கவை. கே.வி. மகாதேவன் இசையிலும் பல பாடல்கள் பாடியுள்ளார் பி..பி.எஸ். அவற்றில் “பார்த்தேன் .. சிரித்தேன் (வீர அபிமன்யு), எந்த ஊர் என்றவனே (காட்டு ரோஜா) போன்றவை மனித இனம் இருக்கும் வரை அழியாதவை.

கன்னடப் படங்களில் நடிகர் ராஜ்குமாருக்கு பல பாடல்களை (ஏறத்தாழ இருநூறு பாடல்கள்) பாடியுள்ளார் பி.பி.எஸ். ராஜ்குமார் “நான் சரீரம் .. பி.பி.எஸ். சாரீரம்” எனத் தனது வெற்றிகளில் அவருக்குப் பங்களித்தார். ஒரு முறை சிங்கப்பூர் சென்றிருந்த பி.பி.எஸ்.திரும்பத் தாமதமானதால், பாடல் ஒலிப்பதிவில் பி.பி.எஸ்ஸுக்கு ‘ட்ராக்’ பாடினார் ராஜ்குமார். இசையமைப்பாளர், பி.பி.எஸ் திரும்பியவுடன் அவரை அழைத்து அப்பாடலைப் பாடச் சொல்ல, ராஜ்குமார் பாடியதைக் கேட்டு வியந்த பி.பி.எஸ். அந்தப் பாடல் ராஜ்குமார் குரலிலேயே வெளியாக வேண்டும் என அடம் பிடிக்க, அப்பாடல் மிகப் பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு தனது சொந்தக் குரலிலேயே தன் பாடல்களைப் பாடிவந்தார் ராஜ்குமார்.

தனது தாயார் இறந்த அன்றுகூட அந்த விஷயத்தைத் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தெரிவிக்காமல் பதிவுத்தளத்துக்குச் சென்று பாடலைப் பாடிக் கொடுத்தவர் பி.பி.எஸ். அந்தளவுக்கு அவரிடம் இசை பக்தி நிறைந்திருந்தது.

எண்பதுகளுக்குப் பின்னர் அவரைத் தமிழ்த் திரையுலகமும், இசையுலகமும் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாத பி.பி.எஸ். ஹிந்துஸ்தானி, கஜல் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் காட்டத் துவங்கினார். எட்டு மொழிகளில் பாட / பாடல் எழுதத் தெரிந்தவர் பி.பி.எஸ். எட்டு மொழிகளிலும் மிகச் சிறந்த புலமை கொண்ட பி.பி.எஸ். நொடிப்பொழுதில் பாடல் புனையும் திறமை கொண்டவர்.

சட்டைப்பையில் பல வண்ணப் பேனாக்களும், பட்டு அங்கவஸ்த்திரம் அல்லது தலைப்பாகையும் இவரது முத்திரைகள். சென்னை இராதாகிருஷ்ணன் சாலையிலிருந்த வுட்லனண்ட்ஸ் திறந்தவெளி உணவகம் அவரின் மறுவீடு போன்றது. தொடர்ந்து 46 ஆண்டுகள் அங்கு வருவதைப் பழக்கமாகக் கொண்டிருந்த பி.பி.எஸ் ஏப்ரல் 2008ல் அது இடிக்கப்பட்ட பின் பல நாட்கள் வெளியில் செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

எண்ணற்ற பாடல்களைத் தந்த பி.பி.எஸ்ஸுக்கு மக்களும், திரையிசை உலகமும் போதிய மதிப்பையும் கெளரவத்தையும் அளிக்கத் தவறியது. கலைமாமணி பட்டத்தைத் தவிரத் தமிழக அரசும், இந்திய அரசும் அவரைப் பெருமைப் படுத்த வில்லை. சாதனையாளர் விருது வழங்கும் பல ஊடகங்களும் அவரை மறந்து விட்டன. கன்னடத் திரையுலகம் சார்பில் அவருக்கு இசைவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெற இருந்த நிலையில், ஏப்ரல் பதினாலாம் தேதி பி.பி.எஸ் இறந்து விட்டார்.

நன்றி: பனிப்பூக்கள்.காம் 


No comments: