காயிதே மில்லத் பிறந்த தினம் இன்று

 ஜூன் 5,

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பெரும் தலைவர் காயிதே மில்லத் பிறந்த தினம் இன்று


முகமது இஸ்மாயில் என்பதுதான் அவரது இயற்பெயர். ஆனால், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்’ என்று இதற்குப் பொருள். அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளமாக அமைந்தது. இன்று முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தி னராவது அடிப்படைக் கல்வி முடித்து உயர் கல்வி பெறுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் காயிதே மில்லத். திருநெல்வேலி பேட்டையில் 1896 ஜுன் 5-ம் தேதி பிறந்த `காயிதெமில்லத்’ எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் தமது 14-வது வயதிலேயே பால்ய முஸ்லிம் சங்கத்தை தொடங்கி பொது நல சேவையாற்றியவர்.

1920 ஜூலை 20, 21 தேதிகளில் நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் `பூரண சுதந்திரம்’ கோரும் தீர்மானம் நிறைவேற இராஜாஜிக்கு பெரும் ஒத்துழைப்பு அளித்தவர். கிலாபத், ஒத்துழையாமை இயக்கங்களில் தீவிரமாக பங்கு கொண்ட காயிதெ மில்லத், 1937-ல் `அகில இந்திய முஸ்லிம் லீகில்’ உறுப்பினராக சேர்ந்தார்.

1938 மதராஸ் ஜில்லா முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காயிதெமில்லத் 1945-ல் மதராஸ் சட்டசபைக்கு தனித் தொகுதி யிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய விடுதலைக்குப் பின் 1948 மார்ச் 10 அன்று முஸ்லிம் லீகை தொடரச் செய்யும் துணிச்சலான முடிவெடுத்து ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகி’ற்கு தலைவரானார்.

1948 ஜூலை 20-ம் தேதி அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காயிதெமில்லத் 5-.11.-1948 முதல் 26.-11.-1949 வரை அதில் அங்கம் வகித்து இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்கு அரசியல் சாசன பாதுகாப்பை பெற்றுத்தந்தார்.

8.-11.-1948-ல் அரசியல் நிர்ணய சபையில் காயிதெ மில்லத் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி செய்த வாதம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

மத நல்லிணக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர். முக்கியமாக மதப் பதற்றம் விளைவிக்கக் கூடிய தருணங்கள் உருவாகும்போது, யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசி பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே சுமுகத் தீர்வு கண்டுவிடுவார். தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி வரை எல்லாத் தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள்.

இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தவர். 'இஸ்லாம் என் மதம்; தமிழ் என் தாய் மொழி' என்று பிரகடனப்படுத்தியவர். மாநில மொழிகளின் உரிமைக்காகவும், மாநிலங்களின் உரிமைக்காகவும் போராடியவர் காயிதே மில்லத். மத நல்லிணக்கத்துக்கான இன்முகம், மாநில உரிமைகளுக்கான முழக்கம், தேர்ந்த தேச பக்தி என்று காயிதே மில்லத்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவானது. கல்லூரிகளைத் தோற்றுவித்த காயிதே மில்லத்திடமிருந்து முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. முஸ்லிம் சமுதாயத்தின் ஏற்றத்துக்கு வழிவகுக்கும் 

பாடங்கள் அவை!


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி