இசைப் பற்றி இனிதாய் ஒரு தொகுப்பு

 உலக இசை நாள் இன்று :
  இசைப் பற்றி இனிதாய்   ஒரு தொகுப்பு  


 "செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை "


 திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப நமது செவிக்கு இன்பம் தருவது இசை.


 பாட்டும்,  இசையும் ரசனையுள்ள ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இரண்டறக் கலந்தது. 


 இனிய பாடல்கள், செவி வழியே உட்புகுந்து இனிதாய் இதயத்தை வருடுவது


 ஒவ்வொரு பாட்டின் பின்னணியில், இனிமையான இசைக்கருவிகளின் பயன்பாட்டால், அந்த இசைக்கலைஞனின் வாசிப்பினால் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன. 


 இசைக் கருவிகளில், நாதஸ்வரம், புல்லாங்குழல்,  ஆர்மோனியம், பியானோ, டி ரம்பட்,, கீபோர்டு,  பியானோ, சாக்சபோன் போன்ற பல்வேறு  கருவிகள் காற்றினை உள்வாங்கி இனிய ஒலி எழுப்பும் கருவிகளும்


 யாழ், வீணை, தம்புரா வயலின்,  கிடார் போன்ற பல்வேறு நரம்பு கருவிகளும்


 மிருதங்கம், கஞ்சிரா, தபேலா, பேங்குஸ், டிரம்ஸ் போன்ற தோல் கருவிகளும். 


 கடம் போன்ற மண்பாண்ட கருவிகளும் பின்னணி இசையில்  சேர்ந்து கேட்பவரை மகிழவும் மயங்கவும் வைக்கிறது.


 சிவபெருமானிடம் உடுக்கை யாகவும். கலைவாணியிடம் வீணையாகவும்.

 கீதை சொன்ன கண்ணனிடத்தில் புல்லாங்குழலாகவும்   தில்லை நடராஜனின் கால்களில், சலங்கை யாகவும் இவைகள் அமைந்துள்ளன.


 கிராமத்து இசைக் கருவிகளாக பறை,  முரசு, தாரை. தப்பட்டை, கைச்சிலம்பு போன்ற பல்வேறு இசைக்கருவிகளும், இசைக் கலைஞர்களால் வாசிக்கும்போது, உள்மனதில் ஒரு உணர்வினை தூண்டுகின்றன.


 நாதஸ்வரம் வாசிப்பினால் காரைக்குடி அருணாசலம், திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மதுரை எம்.பி. என் சேதுராமன் எம்.பி. என் பொன்னுசாமி  போன்றவர்களும். மிருதங்கம்  வாசிப்பினால், பாலக்காடு மணி ஐயர். வளையப்பட்டி சுப்பிரமணியம் போன்றவர்களும், வீணை வாசிப்பில் காயத்ரி அவர்களும், வயலின் வாசிப்பில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களும், கடம் வாசிப்பில் விக்கு  விநாயகம் அவர்களும்,, தபேலா வாசிப்பில் ஜாகிர் உசேன் அவர்களும், சாக்சபோன் வாசிப்பில் கத்ரி கோபால்நாத் அவர்களும், மேண்டலின் வாசிப்பில் சீனிவாசன் அவர்களும் இப்படி பல கலைஞர்கள், தாங்கள் வாசிக்கும் இசைக் கருவிகளால் தனித்தன்மை பெற்றுள்ளனர்.


 நாம் காலை எழுந்தவுடன். பக்தி மனத்துடன் கேட்கும், அருணாச்சலேஸ்வரா  என ஒலிக்கும்

 சிவபெருமான் பாடல்கள், பிள்ளையார் சுப்ரபாதம், வெங்கடேஸ்வர சுப்ரபாதம்,  கிருஷ்ணகானம்,  அபிராமி அந்தாதி, கந்த சஷ்டி கவசம். தேவாரம் திருவாசகம், போன்ற பக்தி பாடல்களின் பின்னணி இசையும்

 கேட்கும்போது மனதை உருக வைக்கின்றன.


 திரைப்பட பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால், சீர்காழி கோவிந்தராஜன், டி எம் சௌந்தரராஜன்,. பி பி ஸ்ரீனிவாஸ், ஏ எம். ராஜா, கே. ஜே. ஜேசுதாஸ், எஸ் பி பாலசுப்ரமணியம் ஹரிஹரன், பி.சுசீலா, வாணி ஜெயராம், எஸ் ஜானகி, சித்ரா போன்ற பல்வேறு பாடகர்களின் பாடல்களிலே வரும் பின்னணியில்,  (BGM)இசை அமைப்பாளர்களின் கை வண்ணத்தினால், கேட்க கேட்க பேரானந்தத்தை தந்து  நம்மை மகிழ்விக்கிறது.


 இசைக்கருவிகள் ஒவ்வொன்றும். வெவ்வேறு ஒலிகளை எழுப்பி நம்மை நெகிழ வைக்கிறது.


 நாயன்மார்களும், ஆழ்வார்களும், பக்தியால் கடவுளைப்பற்றி பாட்டெழுதி, தேவாரம் திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம் தந்துள்ளனர்.


   கண்ணதாசன், வாலி போன்ற பல்வேறு படைப்பாளிகள், திரைப்பட காட்சிக்கு ஏற்றபடி. தத்துவம், காதல், ஜனரங்கம் மற்றும் சோகப் பாடல்கள் எழுதி நம்மை கேட்கும்படி வசீகர படுத்தியுள்ளனர் என்பது நிதர்சன உண்மையே.

தமிழ் திரையுலகில் ஜி ராமநாதன், எஸ்எம் சுப்பையா நாயுடு, திரை இசைத் திலகம் கே.வி மகாதேவன்( இன்று இவரின் நினைவு நாள் ) மெல்லிசை மன்னர்கள், எம்எஸ் விஸ்வநாதன் டி.கே ராமமூர்த்தி  தக்ஷிணாமூர்த்தி, குன்னக்குடி வைத்தியநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் இசை மீது நாட்டம் கொண்டு மக்களால் வசீகரிக்க பட்டவர்கள்.


எனக்குள் ஒரு சின்ன ஆசை. இசைக்கருவிகள் தொடர்புறுத்தி  ஒரு பாடல் எழுதினால், எப்படி இருக்கும்


 எழுதிவிட்டேன், உங்கள்  கனிவான பார்வைக்கு 


 "விரல்களின் பதிவினை எதிர் கொள்ளும் கருவி


 வெளியிடும் ஒலிகளில் கொட்டும் தேனருவி


 செவிகளின் கேட்கும் கானமதை  தழுவி


 சிந்தனை வியக்கும்      இரசிப்பால் மருவி


 ஆர்மோனியம் இங்கே மெட்டமைக்கும் பெட்டியே 


 ஆனந்த பாட்டுக்கள் அடங்கிடும் சக்தியே


 மொழி உணரவில்லை இசைக்கருவி தன்னுள்ளே


 முகமலர்ந்து ரம்மியம் சுகம் காணும் மனதுள்ளே


 கானகத்தில் பிறந்த மூங்கிலில் துளையே 


 கானமதை  தந்து

 களித்திடும் குழலிசையே 


 வீணையின் நரம்பின் ஸ்வரங்களின் கீதமே


 விந்தையோடு அமைந்த பேரின்ப நாதமே


 தபேலா தந்திடும் தனித்தன்மையான ஒலியே 


 கைத்தட்டும்  கடத்தில்

 கேட்பதும் மெல்லொலியே 


 மேள தாளமும் மங்கலம் சேர்க்குமே


 நாதஸ்வரமும் கலந்து நம்மையும் ஈர்க்குமே


 வயலின் கொணர்ந்த ஓசையும் சுவையே 


 வையத்தில் ஒலிக்கும் ஆலயமணி  ஓசையே


 வாசிக்க கருவியில் வருமின்ப ஊற்றே 


 வாழ்வில் அமையும் இசைப்பவருக்கு பாராட்டே"


 நன்றி வணக்கம் முருக.சண்முகம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,