கண்ணியம் மிக்க காயிதே மில்லத்

 கண்ணியம் மிக்க காயிதே மில்லத் - முஸ்லீம்களின் நலனுக்காக போராடினார் என்பதைவிட, இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காகவே பாடுபட்டார் என்றே சொல்லலாம்!வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வெளியேறும் "புதுக்கல்லூரி"யை உருவாக்கியவர்..!


இவர் சாதாரணமாக பேசினால்கூட குரான் வசனத்தை மேற்கோள் காட்டிதான் பேசுவார்..!


இன்றைக்கு நெய்வேலியில் இருந்து நமக்கு மின்சாரம் கிடைத்து வருகிறது என்றால் அதற்கு இந்த புண்ணியவான், சட்டமன்றத்தில் எடுத்து வைத்த வாதம்தான் காரணம்!


இன்று முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினராவது உயர் கல்வி பெறுகிறார்கள் என்றால், அதற்கு சத்தான விதையை பதியம் போட்டதே, காயிதே மில்லத் என்ற தங்க மனசுக்காரன் தான்..!


அரசியல் படோடாபம் இல்லாத - அதிகார துஷ்பிரயோகம் இல்லாத - யதார்த்த விரும்பி காயிதே..!


மேல்சபை, சட்டசபை, லோக் சபா என பல்வேறு ஆட்சி பீடங்களில் பதவிகளையும் வகித்தாலும், இவருக்கென்று சொந்தமாக ஒரு கார் கூட இருந்தது கிடையாது.. தனக்கு வியாபாரத்தில் வந்த பணத்தைகூட, ஏழைகளுக்காகவே செலவிட்டவர்.


இவர் வீடு குரோம்பேட்டையில் இருந்தது.. அது ரொம்பவும் சின்ன வீடு.. யாராவது வந்தால், உட்கார வைக்ககூட வசதி இருக்காது.. குரோம்பேட்டையில் இருந்து எலக்ட்ரிக் ரயில் ஏறி, பீச் ஸ்டேஷனில் இறங்கி, அதுக்கப்பறம் ஒரு ரிக்‌ஷாவில் ஏறி மண்ணடியில் உள்ள கட்சி ஆபீசுக்கு செல்வாராம்.!


எப்படியாவது இவருக்கு ஒரு காரை வாங்கி தந்துவிட வேண்டும் என்று நிறைய பேர் முயன்றனர்..  கேரள கட்சிக்காரர்கள் சிலர், ஒரு காரை வாங்கி அந்த சாவியையும் இவர் கையிலேயே தந்தார்கள்.. வேண்டாவெறுப்பாக அந்த சாவியை வாங்கி,  அங்கிருக்கும் இஸ்லாமிய கல்லூரிக்கு அந்த காரை தந்துவிட்டுதான், ஊர் வந்து சேர்ந்தார்.


ஒருமுறை ஆபீசில் தன் பொறுப்பாளரிடம், ஒரு கவரையும், 2 அணாவையும் தந்து, "ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி போஸ்ட் பண்ணிடுங்க" என்று சொன்னார்.. அந்த பொறுப்பாளரோ, "2 அணா எதுக்கு? ஆபீஸ் செலவிலேயே அனுப்பிடலாமே, ஸ்டாம்ப்தான் இருக்கே" என்று கேட்டார். அதற்கு காயிதே, "இது என் சகோதரருக்கு எழுதியிருக்கிற லெட்டர்.. இதுக்கு ஆபீஸ் பணத்தை செலவழிக்க கூடாது" என்றார்.


அப்போதும் அந்த பொறுப்பாளர் விடவில்லை, "உங்க சகோதரரும் கட்சி பொறுப்பில்தானே இருக்கிறார்.. அதனால் கட்சி பணத்தை செலவு செய்வதில் என்ன தப்பு?"  என்று கேட்டார். உடனே காயிதே, 'நான் ஒன்னும் இந்த லட்டரில் கட்சி விஷயத்தை பத்தி எழுதலையே.. குடும்ப விஷயத்தை தானே எழுதியிருக்கேன்.. அதனால, நான் குடுத்த அந்த 2 அணாவில் ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி அனுப்புங்கள்" என்று கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாகவே சொன்னாராம்.


தஞ்சை மாவட்டம் நிர்வாக காரணமாக அன்று, இரண்டாக பிரிக்கப்பட நேர்ந்தது.. இந்துக்களின் புனிதத்தலமான திருவாரூரும் - முஸ்லிம்களின் புனிதத்தலமான நாகூரும் - கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான வேளாங்கன்னியும் ஒரே மாவட்டத்தில் ஒன்றாக இருந்தன.. 


இதற்கு யாருடைய பெயரை சூட்டலாம் என தமிழக அரசு சிந்தித்தபோது, சட்டென வந்த பெயர் காயிதேதான். இதற்கு காரணம், சாதி - சமயங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதால்தான், "நாகை காயிதே மில்லத் மாவட்டம்" என்று பெயரிடப்பட்டது..!


1972-ம் ஆண்டு.. காயிதே மில்லத் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.. கலைஞருக்கு தகவல் பறக்கிறது.. வெளியூர் செல்லவிருந்தவர், உடனடியாக அதை ரத்துவிட்டு ஸ்டான்லி மருத்துவமனை விரைகிறார்..!


மயக்கநிலையில், கண்மூடி படுத்திருந்த காயிதே மில்லத்திடம், அருகில் குனிந்து மெல்லிய குரலில் "அய்யா, நான் கருணாநிதி வந்திருக்கிறேன்"  என்கிறார். மெல்ல கண்களை திறந்து, கலைஞரின் கையை பிடித்துக் கொண்டார் காயிதே மில்லத்..!


"முஸ்லீம் சமுதாயத்திற்குத் தாங்கள் செய்த உதவிகளுக்கெல்லாம் என்னுடைய நன்றி" என்று பலவீனமான குரலில் சொன்னதுமே, கலைஞர் கண்ணிலிருந்து கண்ணீர், தாரை தாரையாக கொட்டியது.. ஆனால், அதற்குள் மீண்டும் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார் காயிதே. அதற்கு பிறகு மீளவேயில்லை...!


காயிதே மில்லத் சடலத்தை கண்டு, தேம்பி தேம்பி அழுத பெரியார், "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர்... முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்" என்று அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் கேட்கும்படி சத்தமாகவே சொன்னார்..!


இவர் இறுதி ஊர்வலத்தில் 3 மணி நேரம் நடந்தே சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார் எம்ஜிஆர்...!


சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” என பெயரை சூட்டினார் கருணாநிதி.. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத்தின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் மறைந்த ஜெயலலிதா.


இதற்கெல்லாம் ஒரே காரணம், காயிதே மில்லத் ஒரு பிரிவுக்கு மட்டுமே சொந்தமில்லை என்பதுதான்...!


தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே துணிவுக்கு தூண் போன்றவர் காயிதே மில்லத்..!


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இதயவேந்தன்..! 


கடைசிவரை, நாகரீக மாயையில் விழுந்துவிடாமல், எளிமையுடன் வாழ்ந்து ஜன சமூகத்துக்கு உயிரூட்டியவர்..!


எனினும், வரலாறு கண்டெடுத்த இந்த நல்முத்துவை, தமிழ்ச்சமூகம் நன்றியுடன் நினைத்து பார்க்கிறதா என்பதே ஆதங்க கேள்வி..!


- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

Hemavandana

பகிர்வு
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,