விநாயகனே... வினை தீர்ப்பவனே
"விநாயகனே... வினை தீர்ப்பவனே" என்ற வெண்கல குரலில்தான் அன்றைய பெரும்பாலான கிராமங்களே விடிந்தன... கோழிகள் கூவின.. சீர்காழி கோவிந்தராஜன் பாட்டை கேட்டதும், அந்த பிள்ளையாரே வினை தீர்க்க கிளம்பிவிடுவார் என்று சொல்வார்கள்!
சின்ன வயசில், இவர் குடியிருந்த தெருமுனை வீட்டில், ஒருத்தர் தூக்கு போட்டு செத்துட்டாராம்.. அவர் பேய் மாதிரி தெருவில் நடமாடுகிறார் என்று பயந்து மக்கள் பட்ட பகலிலேயே வெளியே வராமல் இருந்திருக்கிறார்கள்..!
ஆனால் சீர்காழிக்கோ, அந்த தெருவை கடந்து தினமும் 10 முறையாவது சென்றாக வேண்டிய நிலைமை.. அதனால் ஒவ்வொரு முறையும், தெருவில் போகும்போதும், வரும்போதும் சத்தமாக பாடிக் கொண்டே போவாராம்.. பயம் இல்லாமல் இருப்பதற்காக, இவர் கத்தி கத்தி பாடினாலும், அதுதான் அவரது செழிப்பான குரல் வளத்திற்கு நல்ல பயற்சியை ஆழமாக பதியமிட்டு இருக்கிறது..!
சுத்தமான தமிழ் உச்சரிப்பும், ஹை பிச்சில் பாடுவதும், உணர்ச்சி காட்டக்கூடிய பாங்கும்தான் இவரை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது... அதாவது கே.பி சுந்தரம்பாளுக்கு அடுத்து, ஸ்பீக்கரே தேவையில்லை என்று சொல்லத்தகுந்த கம்பீர குரல் அது!
"கந்தன் கருணை" படத்தில் வரும், "அறுபடை வீடு கொண்ட திருமுருகா" என்ற பாட்டு ரொம்ப கஷ்டமானது.. ஏழரை நிமிஷ பாட்டு... மிக்சிங், டிராக் இப்படி எதுவுமே இல்லாத அந்த காலத்தில், எல்லா ஆர்க்கெஸ்ட்ராவும் ஒரே நேரத்தில் வாசிக்க, ஒரே டேக்கில் பாடி முடித்தார் சிம்ம குரலோன்.
"அகத்தியர்" படத்தில், குறுமுனி அகத்தியராக தோன்றி நடித்து உயிரூட்டினார்.. இன்றும்கூட சில கிராமங்களில் சீர்காழியைதான் அகத்தியராக நினைத்து கொண்டு, வணங்குபவர்களும் உண்டு!
"உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாட்டில், உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சிவாஜியின் நடிப்புக்கும், கண்ணதாசன் வரிகளுக்கும் நடுவில் ஒரு இணைப்பு பாலமாக இருந்தது இந்த எட்டுக்கட்டைக்கு சொந்தக்காரரின் குரல்தான்..!
ஆனால் ஏனோ, பக்தி பாடல்கள் அளவுக்கு சினிமாவில் உச்சத்தை அடைய முடியவில்லை.. அதற்கு காரணம், பெரும்பாலான படங்கள் அப்போது காதலை மையப்படுத்தி வந்தன.. சீர்காழி குரலோ கம்பீரம் நிறைந்தது..
அதனால் இவர் லவ் பாட்டு பாடினால்கூட அதுவும் கம்பீரமாகவே இருக்கவும், எடுபடாமல் போய்விட்டது. எனினும், தத்துவம், பக்தி, உருக்கம், சோகத்தை சொல்ல, இவரை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது.
இவர், பக்தி பாடல்களால் லட்சக்கணக்கான மக்கள் முருக பக்தர்களாகவும், அம்பாள் பக்தர்களாகவும் மாறியிருக்கிறார்கள் என்பதை மறுக்காமல் நாம் ஏற்க வேண்டும்.. இவர் பாட்டு பாடினாலே, கோயிலுக்குள் இருக்கும் மயில் அகவுமாம்.. பெண்கள் சாமியாடுவார்களாம்.
மத ரீதியான வேறுபாடில்லாமல் தர்காவிலும், பல கிறிஸ்தவ பாடல்களையும் இவர் பாடியதை நினைவுகூர்ந்தாக வேண்டும்.. இவரது "தேவன் கோயில் மணியோசை" பாட்டை கேட்டு விட்டு, லதா மங்கேஷ்கருக்கு புல்லரித்து விட்டதாம்.
பொதுவாக, ஏழரை மணி நேரம் விடாமல் கச்சேரி செய்வார்.. பேசிய சம்பள தொகையை விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா, பணம் தந்தாலும், அதை வாங்காமல், "முருகன் கோயிலுக்கு தந்துடுங்க" என்று சொல்லிடுவாராம்.
தன் இசைக்குழுவில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும், வீடுகள் கட்டி கொடுத்து, பாத்திரங்களை வாங்கி போட்டு, சகல வசதிகளையும் செய்து தந்திருக்கிறார்.
ஆனால், இப்படிப்பட்ட இசை மேதையை, ஒருகட்டத்தில் சங்கீத சபாக்கள் நிராகரித்தன.. ஆனாலும் திராவிடர் கழக மேடைகள் சீர்காழியை வாரிஅணைத்து கொண்டது..! அதிலும் எம்ஜிஆர், இவரை ஆஸ்தான பாடகராக்கியதுடன், சபாக்களின் புறக்கணிப்புகளுக்கு நெத்தியடி பதிலடி தந்தார்..!
தமிழில் பாடுகின்றார் என்ற ஒற்றை காரணத்துக்காகவே, சபாக்களில் இசை நிகழ்ச்சி நடத்த தடைவிதித்து மேல்தட்டுவர்க்கம்.. தெலுங்கு கீர்த்தனைகளை பாடினால் மட்டுமே சபாக்களில் பாட அனுமதி இருந்தது.. இப்படி ஒரு சூழ்ச்சியை முறித்து போட்டதே நம் தந்தை பெரியார் தான்..
சீர்காழியை அழைத்து, தனது பகுத்தறிவு மேடைகளில் பக்திப்பாடல்களை பாடசொன்னார்.. இதை கேட்டதும் விக்கித்து போய்விட்டார் சீர்காழி.. "நான் பக்தி பாடல்களை பாடுபவன், என்னை போய் உங்கள் மேடையில் பாட சொல்கிறீர்களே" என்று கேட்டார்.
அதற்கு பெரியார், "அதனாலென்ன, பக்தி பாடல்களையே திராவிட மேடைகளிலும் பாடுங்கள்" என்றார்.. இதையடுத்து, நெற்றியில் சந்தனம், விபூதி பட்டையோடு பக்தி பாடல்களை பாடி நிகழ்ச்சியை துவங்குவார் சீர்காழி.. அவர் பாடி முடித்ததுமே, அதே மேடையில் கடவுள் இல்லை என்று பேச்சை தொடங்குவார் பெரியார்.
இதை பார்த்ததும் சபாக்கள் நடுநடுங்கிவிட்டன.. பெரியார் செய்யும் இந்த செயல் சமூகத்தில் வேறு சிக்கலை உண்டாக்கும் என பயந்தன.. அதற்கு பிறகுதான் சீர்காழியை சபாக்களில் பாடவே அனுமதித்தது.
தன் இறுதி ஊர்வலத்தில் சீர்காழிதான், இரங்கற்பா பாட வேண்டும் என்று, கண்ணதாசன் விரும்பி கேட்டுக்கொண்ட அளவுக்கு, சக கலைஞர்களின் இதயத்துக்கு நெருக்கமானவர்.
1988-ல் ஒருநாள் நடுராத்திரி 1 மணிக்கு "முருகா.. உலகம் வாழ்க" என்று தெளிவான உச்சரிப்புடன் பிரார்த்தித்தவாறே சீர்காழி உயிர் பிரிந்தது..!
உயிர் பிரியும் தறுவாயில், இவரை தவிர வேறு யாருமே இப்படி சொன்னதாக நான் கேள்விப்பட்டதில்லை.. அதிலும் தன் ரத்த பந்தம் உடனிருக்கும் சூழலில், உலகம் பற்றிய சிந்தனை, சீர்காழி என்ற மாமனிதருக்கு மட்டுமே வரும்... அப்போது சீர்காழி வயசு வெறும் 55 தான்!
வாடாத பாசத்துடன், உருக வைக்கும் குரல் வளத்துடன், ஒவ்வொரு பாட்டையுமே தனது உயிர் பாட்டாக நினைத்து பாடினார் சீர்காழி..!
வாழ்வின் உயரத்தை சொல்லவும், வாழ்க்கையின் துயரத்தை சொல்லவும் இவர் குரலே நமக்கு போதுமானது.
இசையின் கனத்தை சினிமாவுக்கு அளித்து, அதன் மதிப்பை கூட்டியவர் சீர்காழி கோவிந்தராஜன்... ஆண்மை மிக்க இந்த குரலுக்கு என்றும் அழிவில்லை.. காற்றை போல.. கடலை போல..!
- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்
பகிர்வு
Comments