நான் வணங்கும் பராசக்தியே

 நான் வணங்கும் பராசக்தியே

*


என் காதில்  விழுந்த காந்தக் குரலே


என் கண்முன் மலர்ந்த

குறளோவியமே


என் நெஞ்சம் நிறைந்த

சங்கத் தமிழே


நாளும் நான் வணங்கும் பராசக்தியே


நம் மொழி செம்மொழி என உலகை உணரவைக்க 

அசராது போராடிய அறிஞனே 


வசனத்தில் வரலாறு படைத்தவனே

வரலாற்றை வசனத்தில் வடித்தவனே


கலைத் தாயின் செல்லப் பிள்ளையே


கலைஞரே


என் ஆசானே


தாள் பணிந்து வணங்குகிறேன் உன்னை

*

உன் திரை வசனங்கள் கேட்டே 

தமிழ் படித்தவன் நான்


அந்தச்  சொற்கள் தந்த

அருள் மூலமே

வசனம் எழுதக் கற்றவன் நான்.


ஆம்

என்னிடம் இருப்பது

உன்னிடம் 

கடன் வாங்கிய

தமிழே.

*

சரித்திரத்தைத் தலைகீழாக மாற்றிய

விசித்திரமே


கடலில் இருந்து கரையை நோக்கி   வீசுவதுதான் 

புயலின் வழக்கம்.


காவிரிக் 

கரையில் இருந்து புறப்பட்டுக்

கடலை நோக்கி

வீசிய புயல் நீ

கடற்கரையில் நிரந்தரமாக

மையம் கொண்ட புயல் நீ.


இடுப்பில் கட்டிய துண்டைத் 

தோள் மீது போடவைத்து

ஓர் இனத்தை நிமிர வைத்த 

இயக்கத்தின் தலைவன் நீ .

*

அடக்குமுறை கண்டு

அஞ்சாத சிங்கம் நீ


நீ சாமியைப் பார்த்தும்

வணங்கியதில்லை

மிசாவைப் பார்த்தும்

மிரண்டதில்லை.

*

மூன்றெழுத்தின் மகிமை சொன்ன 

நான்கெழுத்து மந்திரமே...


உன் பேனா கவிதையும் எழுதியது

உத்தரவும் போட்டது


இப்படி ஒரு பேனா

இன்னொருவரிடம்

இருந்ததுண்டோ?

*

வள்ளுவரை 

அய்யன் என்று அழைத்தவனே


கடவுள் என ஒருவர் தேவைதான் என்றால்

என் அய்யனை வணங்குங்கள் 

அவன் வழிகாட்டுவான்

எனத் தழுதழுத்தவனே...


குறளோவியம் எழுதியும் வள்ளுவர் கோட்டம் கட்டியும் 

அய்யன் வள்ளுவனை நீ அன்றாடம் போற்றினாய்..ன


பின் அது போதாது என்று

வான்புகழ் வள்ளுவருக்கு 

வான் தொடும் சிலை அமைத்து

இந்தப் பேரண்டத்தையே அவர் கோவிலாக்கினாய்.

*

அய்யன் மீதும்

அண்ணன் மீதும்

நீ கொண்ட காதல்

பக்தியை விடப் பரவசமானது.

*

ஐந்து தலைமுறைகளின்

நேரடித் தமிழாசிரியர் நீ


இனி வரும் 

தமிழ்ப் பிள்ளைகளுக்கு

அஞ்சல் வழிப் பாடம் நடத்தும் 

அழியாத உன் இலக்கியங்கள்.

*

தமிழ்ப் பகைவரை எல்லை தாண்டித் துரத்தியவனே


இப்போதும்

எல்லைச் சாமியாய்

கடற்கரையில்

குடிகொண்டுவிட்டாய்.

*

தாயின் இதயத் துடிப்பைக்

கேட்டு

பாதுகாப்பை உணரும் குழந்தையைப் போல்

கரகரத்த உன் குரல் கேட்டுக் 

கவலையற்று இருந்தோம் இதுவரை.


'உயிரினும் மேலான என் அன்பு உடன்பிறப்பே...' எனும் உன் குரலின்

எதிரொலி 

கோட்டையில் ஒலிப்பது கேட்டு 

ஆனந்தம் அடைகிறோம் இன்று.

*

பிருந்தா சாரதி/ திரைப்பட வசனகர்த்தா

*

#HBDKalaignar99

#kalaingarforever

#கலைஞர் #Kalaignar


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,