விக்ரம்_என்_பார்வையில்/ திரை விமர்சனம் ./P.S.லோகநாதன்

 #விக்ரம்_என்_பார்வையில்கமல் என்ற கலைஞன் என்னைவிட மூன்றே வயது இளையவர். 1971/72ல்  'அரங்கேற்றம்', பிறகு 'சொல்லத்தான் நினைக்கிறேன், 'அபூர்வ ராகங்கள்' முதல் அன்றைய 'விக்ரம்' தொடங்கி இன்றைய 'விக்ரம்' வரை இந்த அபூர்வ கலைஞனின் நடிப்பாற்றலுடன் கூடிய விஸ்வ ரூபங்கள் பலதடவைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியிருப்பது ஒன்றும் புதிதல்ல.

எனது இளைய, ஆரம்ப வாலிப வயதில் என்னை தனது நடிப்பின் மூலம் பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு உட்படுத்திவர் அமரர் நடிப்புலக மாமேதை நடிகர் திலகம் அவர்களே.

என்றாலும் என் வயதையொத்து சமகாலத்தில் என்னோடு பயணம் செய்து வரும் கமல் காலத்துக்குக் காலம் தனது மெருகேறி வந்த அசாத்திய நடிப்புத் திறமையாலும், காலத்துக்கேற்ற புதிய பரிமாணங்களாலும் என்னை, என் பலவிதமான உணர்ச்சிகளை கலைநயத்தால் சோதிப்பவர் என்றால் மிகையாகாது. 


அவரின் நடிப்பைப் பற்றி, அவரின் படங்களோடு விலாவரியாக விமர்சிப்பது தொடர் கட்டுரையாக ஆகிவிடும் என்பதால் இன்றைய 'விக்ரம்' பற்றி மட்டும் சொல்ல/பதிவு செய்ய விரும்புகிறேன்.


இடைவேளைவரை 'எங்கப்பா இந்த மனுஷன்?' என அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். முதல் நடனக் காட்சியில் சிறிது நேரம், தொடர்ந்த FLASH BACK காட்சிகளில் சற்று நேரம் எனப் போய்க் கொண்டிருந்தபோதே அவரின் 67 வயதிற்கான இன்றைய அதே ஒப்பனை இல்லாத தோற்றத்தைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தவன் கடைசிக் காட்சி வரை அயரவில்லை.

அந்த நாளைய ஹாலிவூட்டின் அந்தனி குயீன், மார்லன் பிராண்டோ முதல் சார்ல்டன் ஹெஸ்டன் வரை வயதான தோற்ற நடிப்பிலும், க்ளின்ட்  ஈஸ்ட்வூட்டின் மிக இயல்பான சண்டைக்காட்சிகளிலும் கமலைப் பார்த்தேன்.

பேரனைத் தொந்தரவு செய்யாமல் மகனை இழந்த சோகத்தைக் காட்டுவது கமலின் தனி முத்திரை. 


"டேய் தம்பி" எனப் பேரனை அழைக்கும் கமல் "ஏய் கண்ணா/கன்னுகுட்டி" என நான் என் பேரப்பிள்ளைகளை அழைப்பதைப் போல இருந்த காட்சிகள் என்னை நெகிழவும், கலங்கவும் வைத்தன. பேரப்பிள்ளைகளிடம்

இருக்கும் பரிவின் இயல்பான உச்சகட்ட வெளிப்பாடு கமலின் தனி முத்திரை.


இதைத் தவிர கண்களில் தெரியும் கோபாக்கினி, காட்சிகளுக்கேற்ப பேசும் வசனங்களில் அநேகமாக நவரச உணர்ச்சிகளையும், இயல்பான நடிப்போடு வெளிப்படுத்தும் விதம் எல்லாமே கமலுக்குக் கைவந்த கலை. 


மற்றைய நடிகர்களைப் பொறுத்தவரை வில்லனாக வரும் விஜய் சேதுபதி, 'அமர்' (நஸ்ரியாவின் கணவர்), அந்த ரகசிய காவல்துறைப் பெண்மணி, காவல்துறை உயரதிகாரி உட்பட வில்லன் கூட்ட நடிகர்கள் வரை மிரட்டுகிறார்கள் என்றால் மிகையில்லை. இறுதியில் ஒரே காட்சியில் வரும் 'சூர்யா' வரை அனைவருமே பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாகச் செய்திருக்கிறார்கள்.


இசை அனிருத் - படத்தின் பிரம்மாண்டத்திற்குத் துணை சேர்க்கிறது. காட்சி அமைப்பு, படப்பிடிப்பு இவை எல்லாமே மேல் நாட்டுப் படங்களைப் பார்க்கும் உணர்வைத் தருவது மன நிறைவும், நமக்குப் பெருமையுமே.


பிரதானமாக கதை அந்த போதைப் பொருள் கொள்கலனைச் சுற்றிச் சுற்றியே சென்றாலும், 

அதன் பின்விளைவுகள், அதனால் சமுதாயத்திற்கும், இளைய தலைமுறைக்கும் ஏற்படக்கூடிய  தாக்கம்  என்பனவற்றையும் அழகாக, தெளிவாக சொல்லும் முக்கியமான தகவல்/செய்தி வரவேற்கத்தக்கது.


மொத்தத்தில் ' ஏமாற்றவில்லை, நிறைவைத் தந்தார். படமும் திருப்தியளித்தது


ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், ஒரு கலைஞனான.......,

#கமல்_நான்_எப்போதும்

உங்கள்_ரசிகன்.

Loganathan. P.S.( Srilnaka)Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,