. கே.வி. மகாதேவன்

 


துள்ளல் பாடல்களின் துடிப்பான நாயகி எல்.ஆர். ஈஸ்வரி. 'நல்ல இடத்து சம்பந்தம்' மூலம் அவரை பாடகியாக்கிய கே.வி. மகாதேவன், தனது இசையில், ஈஸ்வரியை பல வெற்றிப்பாடல்களைப் பாடவைத்து பெருமை சேர்த்தார். துள்ளல் பாட்டுப் பாடகியை, பரீட்சார்த்த முறையில் மெல்லிய இசையுடன் கூடிய பாடலைப் பாடவைத்தும் வெற்றி பெற்றார். ஈஸ்வரியின் மெல்லிய ரீங்காரத்துடன் ஒலிக்கும் இந்த பாடல், இரவில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு வானம் பார்க்கிற அழகு. சிந்தையை குளிர வைக்கும் சித்திரை மாதத்து நிலவு.

வார்த்தைகள் வலம்வரும் பாதையை கண்ணீர் அடைத்துக்கொள்ள, நீளமான நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே முடிகிறது. பள்ளி, கல்லூரியின் கடைசி நாள். தொட்டணைத்தூரும் மணற்கேணி போல, தோண்டத்தோண்ட Bore Well தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது. Bore Well போல இந்த Farewell பாடல் கண்ணீரால் நனைக்கிறது. கே.வி. மகாதேவன் இசையில் வெளிவந்த இந்த பாடல், இன்றுவரை கல்லூரி வாழ்வின் கடைசி நாள் தேசியகீதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் ரத்தத்திலகம் படத்தில் வரும் 'பசுமை நிறைந்த நினைவுகளே... பாடிப் பறந்த பறவைகளே' என்ற பாடல்.
கவியரசர் கண்ணதாசன் கற்பனையில் உதித்த கடினமான, ஆனால் கவிநயம் மிக்க வரிகளைக் கூட, தனது இசைக்குக் கட்டுப்படுத்தி வைத்தவர் கே.வி. மகாதேவன். அடுத்தவர் அழுக்கை வெளுத்து, தனது அடிவயிற்றைக் குளிரவைத்துக் கொள்கிறார்கள் சலவைத் தொழிலாளர்கள், சமுதாயத்தின் அழுக்கை அடித்துத் துவைத்து தூய்மைப்படுத்தும் முற்போக்காளர்களைப் போல. சலவைத் தொழிலாளர்களின் சலசலக்கும் இசையில், மாமா கே.வி. மகாதேவனின் மந்திரப் பாடல் இது.
தெலுங்கில் பல படங்களில் ஜொலித்த மகாதவனின் இசை, சங்கராபரணத்தில் அவரை சாதனை நாயகனாக்கியது.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில், முக்கியமான இடத்தைப் பிடித்த தில்லானா மோகனாம்பாளுக்கு மகாதேவன் தான் இசை. நாதத்தோடு இணைந்த நளினமான இசை, ரசிகர்களை நலம்தானா? எனக் கேட்க வைத்தது.
காவியமா நெஞ்சின் ஓவியமா, சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா, உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல, ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, பாட்டு ஒரே பாட்டு, கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு, அமுதும் தேனும் எதற்கு, ஆகா நம் ஆசை நிறைவேறுமா, நடக்கும் என்பார் நடக்காது, ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், மணமகளே மருமகளே வாவா, கள்ளமலர் சிரிப்பிலே, கண்களின் அழைப்பிலே, மன்னவன் வந்தானடி,
எண்ணிரண்டு 16 வயது, சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, ஏரிக்கரையினிலே போறவளே, மாமா, மாமா போன்ற பாடல்களை தமிழ் ரசிகர்கள் மறக்கத்தான் முடியுமா? மாமாவின் பாடல்கள் இருக்கும்போது, அமுதும் தேனும் எதற்கு?
திரு. கே.வி. மகாதேவனின் திரையிசை சாதனையை, ஒருசில மணி நேரத்திற்குள் சொல்வதென்பது, வானத்தை வானவில்லுக்குள் அடைப்பது போன்றதாகும். வெற்றிகள் அவரை சுற்றிவளைத்த போதும், எதற்கும் வளையாத இசை நேர்மை அவரிடம் இருந்தது. எந்த வெற்றியைும் அவரை கர்வம் அடையச் செய்யவில்லை. கே.வி. மகாதேவனின் சாதனைகளைச் சொல்ல 'ஒரு நாள் போதுமா'.
லாரன்ஸ் விஜயன்
மூத்த பத்திரிகையாளர்
நன்றி: இந்து தமிழ் திசை


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி