Powered By Blogger

Wednesday, June 8, 2022

எதார்த்தத்துக்கு நெருக்கமாக எந்த கதாபாத்திரத்திலும் சாதிக்கக்கூடியவர் ரேவதி.

.ஒரு அருமையான நடிகையாக தனது திறன்களை வெளிப்படுத்துவதற்கேற்ற படங்கள் அதிகம் அவருக்கு அமையவில்லை என்பதே எனது வருத்தம். மறுபடியும் படத்திற்குப் பிறகு பிரியங்கா, அவதாரம் போன்ற சில படங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக அவருக்கு படங்கள் அமையவில்லை. அவரது சிறந்த படங்கள் என மண்வாசனை, புதுமைப்பெண், மௌனராகம், புன்னகை மன்னன், மறுபடியும் ஆகிய திரைப்படங்களைச் சொல்லலாம். பின்னால் வந்த அரங்கேற்ற வேளை படத்தையும் குறிப்பிட வேண்டும். தேவர் மகனைச் சொல்லியே ஆகவேண்டும். தேவர் மகனில் விளக்கெண்ணெய் தேய்த்த அருக்காணியாக மதுரை மண்ணின் எளிமையான பெண்ணாக சோபித்திருப்பார் ரேவதி. அந்தப் படத்தில் அவர் பேசும் பேச்சு எங்கள் ஊர் பெண் பேசுவது போலவே இருக்கும். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே அரிவாள் மீசையும் வெள்ளையும் சொள்ளையுமாக கமல் பக்கத்தில் அமர்ந்திருக்க முகத்தில் அச்சம், வெட்கத்தைத் தேக்கிவைத்துக் கொண்டு ரேவதி உட்கார்ந்திருப்பார். பெரிய பண்ணையார் வீட்டில் திடீரென்று மருமகளாகி விட்ட ஏழைப்பெண்ணின் தவிப்பை வேறு யாராவது இத்தனை அழகாக வெளிப்படுத்தியிருக்க முடியுமா? தெரியவில்லை. இஞ்சி இடுப்பழகா என்ற அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் ரேவதியின் நாணம் ததும்பும் முகம் நமது கண்ணில் வந்துபோகும்.


ஆனால் தமிழில் அவர் நடித்த படங்கள் பலவற்றில், மிகையான ஒப்பனைகளில் கதாநாயகனின் ஆளுமை நிழலுக்குள் சிக்கியவராக நாம் அவரை வீணடித்திருக்கிறோம். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை ஒரு தேர்ந்த நடிகையை ஏற்கச்செய்யும் போது அவருக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். அந்த விபத்து ரேவதிக்கும் நடந்துள்ளது.

இந்திய நடிகைகளில் நான் ரசித்த ஷோபா, அர்ச்சனா, ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல் ஆகியோர் வரிசையில் எதார்த்தத்துக்கு நெருக்கமாக எந்த கதாபாத்திரத்திலும் சாதிக்கக்கூடியவர் ரேவதி. மறுபடியும் படத்தில் அவரின் கதாபாத்திரம் துளசி. துளசியைப் போன்றே அபூர்வமான நடிகை ரேவதி.

தென்மேற்குப் பருவக்காற்று ரிலீசுக்கு சற்றுமுன்பு எடிட்டிங் ஸ்டுடியோ ஒன்றுக்குப் போயிருந்தேன். அந்த அலுவலகத்தின் கீழ்தளத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ரேவதி உள்ளே வருகிறார். எனக்குள் சிறு பெண்ணாக தியேட்டரில் வணக்கம் சொன்ன அந்த ரேவதி வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போனார். புதுமைப்பெண் படத்தில் ஆவேசமாகப் பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போகும் பெண்ணும், மறுபடியும் திரைப்படத்தில் துயரத்தோடு பாண்டி பஜாரில் நல்லதோர் வீணை செய்தே பாடல் பின்னணியில் நடந்துபோவாரே அந்த துளசியும் அடுக்கடுக்காக வந்துபோனார்கள். அங்கே அமர்ந்திருந்தவர்களுக்கு ரேவதியைத் தெரியவில்லை. அவர்களில் சிலர் கால் மேல் கால்போட்டு அமர்ந்திருந்தனர். நான் நீங்கள் உட்காருங்கள் என்று இடம் கொடுத்துவிட்டு நின்றேன். அவர் தேங்ஸ் என்று சொல்லி உட்கார்ந்தார். அவர் எனது கையில் கட்டியிருக்கும் கருப்புக்கயிறைக் கூர்ந்து பார்த்தார். அது ஏன் என்று தெரியவில்லை.

- சீனு ராமசாமி (directorcheenuramasamy@yahoo.in)

நன்றி: கீற்று.காம்


No comments: