எத்தனையோ பேரின் காதல் இழப்புக்கு மருந்தாக அமைந்ததும் ஏ.எல்.ராகவனின் குரல்...!




காதலுக்கும் காதல் தோல்விக்குமான இலக்கணங்கள், இன்றைக்கு எப்படியோ. ஆனால் அறுபதுகளில், அதுதான் காதல் கீதம். காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்தப் பாடல்தான் வேதம். வார்த்தைகளை நசுக்காமல், மென்மையாய் உச்சரிப்புகளைக் குழைந்து கொடுத்த குரல்தான் தெய்வாம்ச அசரீரிக்குரல். அந்தக் குரல், காதல் தோல்விக்கு மருந்துபோட்டது. ‘சரி சரி... நல்லா இரு’ என்று பிரிந்தவர்களை வாழ்த்தியது. அந்தப் பாட்டு... ‘எங்கிருந்தாலும் வாழ்க!’. குரலுக்குச் சொந்தக்காரர்... ஏ.எல்.ராகவன். இப்போது குரல் மட்டுமே நமக்குச் சொந்தமாக இருக்கிறது. அவர் இதே (ஜூன்19ம் தேதி).தினத்தில்தான் 2020ல் காலமானார்🥲


நடிகர் நாகேஷுக்கு இவருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்பதால், நாகேஷுக்குப் பல பாடல்களைப் பாடியுள்ளார். எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டைக் கொடுத்தவர். மேடைகளில் ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடி இவர்தான். எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்க்கெஸ்ட்ரா குழுவை உருவாக்கியவர். பாடகர் மட்டுமன்றி 'அலைகள்', 'அகல்யா' என்ற இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் ஏ.எல்.ராகவன் நடித்துள்ளார்.


கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் திரை இசைப் பாடல்களை ஒரு காலத்தில் வெண்கலக் குரலோன்கள், அதிரடி சக்கரவர்த்திகள், வன்குரலாளர்கள் கட்டியாண்டபோது, பாடலை அப்படியே கைத்தாங்கலாகக் கவிஞரிடமிருந்தும், இசை அமைப்பாளரிடமிருந்தும் பக்குவமாக ஒரு பட்டுத்துணியில் வாங்கி, மயிலிறகால் வருடிக் கொடுத்து, வலிக்காத பூ முத்தங்களாகக் கொடுத்து மென்மையாகக் காற்றில் பரவ விட்டவராகவும், இளநகை பூத்த முகத்தினராகவும் தனி முத்திரை பதித்தவரிந்த ஏ.எல்.ராகவன். ஒரு பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதுபோல், அல்லது சாஃப்டி ஐஸ்க்ரீம் ருசிப்பதுபோல் மட்டுமல்ல, குழந்தைகள் மாதிரி குடை ராட்டினத்தில் சுற்றுவது போல, சடுகுடு ஆடுவது போல, ஏன் சுற்றி வளைப்பானேன், எல்.ஆர்.ஈஸ்வரி, 'குபுகுபு நான் எஞ்சின்' என்று குரல் கொடுத்தால் பதிலுக்கு 'டக டக டக டக நான் வண்டி' (மோட்டார் சுந்தரம் பிள்ளை) என பதில் கொடுப்பது போல தனித்துவமாக ஒலித்த குரல் ராகவனுடையது. 


ஏ.ஏல்.ராகவனின் மனைவி எம்.என்.ராஜம். காதல் மணம் புரிந்துகொண்டனர். பழம்பெரும் நடிகை. இவரும் சிரித்தமுகத்துக்குச் சொந்தக்காரர்.


இயக்குநர் ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில், காதலியை அவள் கணவருடன் பார்ப்பார் காதலன். அந்தக் காதலன், கதையின் படி மருத்துவர். அவருக்கான பாடலும், காதலின் வலிக்கு மருந்து போட்டது.


அந்த மருந்துக்குரலில் இருந்து...


எங்கிருந்தாலும் வாழ்க - உன்

இதயம் அமைதியில் வாழ்க!

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்

இளமை அழகைப் பார்த்திருந்தாலும்

சென்ற நாளை நினைத்திருந்தாலும்

திருமகளே நீ வாழ்க...

எனும் வரிகள்... காற்றுக்கும் வலிக்காமல்... அலை அலையாக நம் செவிகளில் வந்திறங்கும்.


அந்தப் பாடலில்... வாழ்க... வாழ்க... வாழ்க... என்று குழைந்து வாழ்த்துவார்.


எத்தனையோ பேரின் காதல் இழப்புக்கு மருந்தாக அமைந்ததும் ஏ.எல்.ராகவனின் குரல்...!


அப்பேர்பட்டவர் காலமான தினத்தில் நினைவஞ்சலி.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி