"சிவப்பு சூரியன்" ஜோதிபாசு.
"சிவப்பு சூரியன்" ஜோதிபாசு.. பிறந்தநாள்..!
--
நல்ல வசதியான குடும்பம்.. இவர் அப்பா ஒரு டாக்டர்.. மகனை லண்டனில் படிக்க வைத்தார்.. சட்டம் படித்த இந்த மகனால், லட்சக்கணக்கில் சம்பாதித்திருக்க முடியும்.. ஆனால் "உழைப்பாளிகள் நல்லா இருக்கணும்" என்பதற்காகவே கம்யூனிஸ்ட் ஆனவர் ஜோதிபாசு..!
"நீங்க இந்தியா திரும்பி வந்ததும், காங்கிரசில் சேர்ந்துடுவீங்கதானே" என்று நேரு கேட்டதற்கு, "நான் சோஷலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்" என்று நேருவின் முகத்தை பார்த்து, திடமாக பதில் சொன்னவர் ஜோதிபாசு..!
1977 முதல், 2000ம் ஆண்டு வரை இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து 23 வருஷம் மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் ஜோதிபாசு.. இந்தியாவில் யாருமே இவ்வளவு நீண்ட காலம் முதல்வராக இருந்ததே கிடையாது. அதுவும் தொடர்ந்து 23 வருஷம் பதவியில் இருந்தது கிடையாது..!
முதல்வராக இவர் பொறுப்பேற்றபோது, மேற்கு வங்க மாநிலம் ஒன்றும், அமைதி ததும்பும் பூமியாக காணப்படவில்லை.. 2 முக்கிய பிரச்சனைகள் அந்த மாநிலத்தை அப்போது கவ்வியிருந்தது..!
ஒன்று, கடுமையான உணவு பஞ்சம், மற்றொன்று அநாயசயமாக நடந்த மத கலவரமும், படுகொலைகளும்..!
இந்த 2 பிரச்சனைகளையும் கையாள்வதற்கு சாதுர்யமும், நுணுக்கமும், அவசியம்.. இதில் நேரடியாக பங்கேற்று பணியாற்றியவர் ஜோதிபாசு..!
1996-ம் ஆண்டு... இந்த தேசத்தின் பிரதமர் பொறுப்பு தானாக ஜோதிபாசுவை தேடி வந்தது.. ஆனால் "கூட்டணி ஆட்சிக்கு தலைமை ஏற்பதில்லை" என்ற கட்சியின் தீர்மானத்திற்காக, அந்த பொறுப்பை தியாகம் செய்தார்..!
"ஜோதிபாசு பிரதமராகியிருந்தால் இந்தியாவின் நிலை வெகுவாக மாறியிருக்கும்... பிரதமர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக மாறியிருந்திருப்பார்" என்று ஒருமுறை முலாயம் சிங் யாதவ் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது...!
இந்த நிகழ்வு நடக்கும்போது, என் அப்பா டெல்லியில்தான் இருந்தார்.. ஜோதிபாசு பிரதமர் இல்லை என்பதை கேட்டு அதிர்ந்து போனவர், ஜோதிபாசுவிடமே இதை பற்றி நேரிடையாக கேட்டு விட்டாராம்..!
"என்ன இருந்தாலும் பிரதமர் பதவியை கட்சி நிராகரித்திருக்க கூடாது.. உங்களுக்கு அந்த பதவி தந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே" என்று அப்பா கேட்டிருக்கிறார்...!
அதற்கு ஜோதிபாசு, "பிரதமர் பதவியை விட கட்சி மிகவும் பெரிது.. பதவி என்பது இன்னைக்கு வரும், போகும்.. ஆனால் கட்சி அப்படி இல்லை.. என்றென்றும் நிலைத்து நிற்க கூடியது.. வரலாற்றுக்கு கட்சி மிகவும் தேவையானது.. அதனால் அத்தகைய கட்சி மேற்கொண்ட முடிவை நான் ஏற்பதுதான் என் கடமை" என்று பதிலளித்தாராம்...!
எந்த உலக நாடுகளிலுமே, பிரதமர் பதவியை ஏற்குமாறு, ஆளும் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒருமனதாக கேட்டு கொண்டதாக சரித்திரமே இல்லை.. ஆனால் ஜோதிபாசுவை கேட்டு கொண்டனர் என்றால், அந்த அளவிற்கு அனைத்து கட்சியினரும் இவர் மீது மரியாதை வைத்திருந்தனர்.. அப்படி ஒரு நல்லியல்பு இந்த மாமனிதனிடம் இயல்பாகவே விரவி கிடந்தது..!
ஒருமுறை இவரிடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, "உங்களை போல திறமையாக ஆட்சி நடத்த ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன்" என்று கேட்டாராம்.. !
அதற்கு ஜோதிபாசு, "நீங்க இப்படி பாஜககாரர்களை நம்பியிருக்கும்போது எப்படி நல்ல ஆட்சி நடத்த முடியும்?" என்று தடாலடியாக திருப்பி கேட்டுள்ளார். (இந்த பதில், இன்றும் பொருந்துகிறது என்பது ஆச்சர்யம் தான்)
அதேபோல, சென்னை அரசினர் விருந்தினர் மாளிகையில் ஒருமுறை ஜோதிபாசுவுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்திருக்கிறது.. அதில் என் அப்பாவும் கலந்து கொண்டதுடன், அந்த நிகழ்வை பற்றி என்னிடம் பலமுறை சிலாகித்து சொல்லி உள்ளார்.
அதாவது, பேட்டி முடிந்ததும் அனைவருக்கும் டீ, காபி, தரப்பட்டுள்ளது.. வழக்கமாக கட்சி தலைவர்கள் பேட்டிகளை முடித்துவிட்டு, "எல்லாரும் டீ, ஸ்னாக்ஸ் சாப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்கள்..!
ஆனால் ஜோதிபாசு அப்படி செய்யவில்லையாம்.. "எல்லாரும் சாப்பிடுங்க" என்று சொல்லி அங்கேயே உட்கார்ந்து விட்டாராம்...!
கடைசி நபர் டீ குடித்து முடிக்கும்வரை உட்கார்ந்திருந்தவர், "எல்லாரும் டீ சாப்பிட்டீங்களா? நான் போகலாமா" என்று அனுமதி கேட்டபோது, என் அப்பா உட்பட அனைத்து செய்தியாளர்களும் விக்கித்து, திகைத்து நின்றார்களாம்..!
தமிழ்நாட்டில் பிறந்த எத்தனையோ குழந்தைகளுக்கு "ஜோதிபாசு" என்ற பெயரை சூட்டும் அளவுக்கு வெகுஜன மக்களின் மனசை எளிமையாலேயே ஈர்த்ததே இவரது மகத்தான வெற்றி..!
மிக எளிமையானவர்.. தன் துணியை தானே துவைத்து கொள்வார்.. இவரை யாரும் பாதுகாக்கவில்லை.. மக்கள் தான் இவரை பாதுகாத்தனர்..!
முதல்வரான பிறகும்கூட, சைக்கிளில் ஏறி கடைகளுக்கு போய், மீனும் காய்கறியும் வாங்கி வருவதை அவர் நிறுத்தவில்லை...
ஒரே ஒரு மெய்க்காப்பாளனை மட்டும் கடைசிவரை வைத்து கொண்டவர்.. அதிகாரிகள் நியமனத்தை கூட, தலைமை செயலாளர் முடிவுக்கே விட்டுவிட்டவர்..!
ஜோதிபாசு மிதமிஞ்சிய மனிதநேயர்.. ஆழ்ந்த கட்சியின் விசுவாசி.. இவர் மட்டும் அன்று பிரதமராக பதவி வகித்திருந்தால், உலக அரங்கில் இந்தியாவின் முகம் இன்று வேறு விதமாய் பரிணமித்திருக்கும்.. மத சார்பற்ற இந்தியாவையும் இன்று முன்னெடுத்து செல்ல நிச்சயம் அடிக்கோலி இருக்கும்..!
இன்றைய தேசத்தின் நிலைமையை பார்க்கும்போது, ஜோதிபாசுவை தவறவிட்டதை ஒரு "வரலாற்று பிழை" என்றே நான் அடித்து சொல்வேன்..!
எத்தனை எத்தனையோ தியாகங்களை இந்த நாடு கண்டும், கடந்தும் வந்திருக்கிறது.. ஆனால் ஜோதிபாசுவின் தியாகம் அளப்பரியது..!
மரணத்திற்கு பின்னும், உலகிற்கு தான் பயன்பட வேண்டும் என்று, முழு உடல்தானம் செய்த "ரியல் காம்ரேட்" இவர்தான்..!
இவரது மூளை இன்றும் கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் பத்திரப்படுத்தப்பட்டு, பாடமாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது..!
இந்தியாவின் மாவோவாக, என் மனதில், கம்பீரமாக இன்றும் உயர்ந்து நிற்கிறார், சிவப்பு துண்டும், கண்ணாடியும் அணிந்த இந்த எளிய மனிதர்..!
- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்
Hemavandana
Comments