ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்
இலங்கையைப் பொறுத்தவரை இன்றைய தினம் (15/7/2022) ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்றால் அது மிகையே இல்லை.
ஆமாம், கொடுங்கோல் ஆட்சிக்கெதிரான போராட்டம் இன,மத பேதமில்லாமல் முன்னெடுக்கப்பட்டு சுமார் நூறு நாட்களைக் கடந்தபின் பதவியிழந்த நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தியோகப் பதவி விலகலோடு நிறைவு பெற்றிருக்கிறது.
போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு, கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, செயலகம், பிரதமரின் இல்லம், செயலகம் என்பன 'மக்கள் அருங்காட்சியகம்' எனப் பெயரிடப்பட்டதுடன், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டு லடசக்கணக்கான மக்கள் பார்வையிட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.
பதவியிழந்த தப்பியோடிய ஜனாதிபதியின் பதவி விலகலோடு போராட்டக்காரர்கள் நேற்று மாலை இந்த இடங்களை சுத்தம் செய்து மீளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தது சிறப்பு. இன்று நாட்டின் பல பாகங்களிலும் போராட்ட வெற்றி மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டதுடன், பட்டாசு வெடிக்கப்பட்டும், பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மக்களால் பாற்சோறு வழங்கப்பட்டு மக்கள் மகிழ்ந்ததும் நிகழ்ந்திருக்கிறது.
இந்தவேளையில் 2009 நடுப்பகுதியில் தமீழிழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததோடு, லட்சக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தும், காணாமல் ஆக்கப்பட்டும் பரிதவித்து நின்றபோது தென்னிலங்கையில் ராஜபக்சக்களின் அடாவடித்தமான வெற்றியும் இதே போல் கொண்டாடப்பட்டது நெஞ்சை நெருடுகின்றது. அதே ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டமும், அதே முறையில் கொண்டாடப்படுவதுதான் இறைவனின் திருவிளையாடல்.
முறையற்ற சர்வாதிகாரப் போக்கு எந்த நாட்டில் நடந்தாலும் இதே கதிதான். 'பசி வரப் பத்தும் பறந்து போம்' என்பதற்கிணங்க மக்கள் வெகுண்டு, திரண்டெழும்போது அவர்களைப் புயலும், நெருப்பும் கூடக் கட்டுப்படுத்த முடியாது என்பதற்கு இலங்கை நிகழ்வும் ஒரு உதாரணமாகி வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது.
எப்போதும் ராஜபக்சக்களைக் காப்பாற்றி வருபவரும், பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல வக்கில்லாமல், தன் சொந்தத் தொகுதியையே இழந்து படுதோல்வியடைந்து, போனஸாகக் கிடைத்த ஒரு ஆசனத்தால் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தவரும், கோட்டாபயவினால் பிரதமராக ஆக்கப்பட்டவருமான ரணில் விக்ரமசிங்க, சட்ட விதிகளின்படி தற்காலிக பதில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார்.
வரும் 20ம் திகதி பதில் ஜனாதிபதி பாராளுமன்ற அங்கத்தவர்களால் பெரும்பான்மையைப் பெற்று ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவார். பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் கோட்டாபயவைப் போலவே ரணிலும் பதவி விலக வேண்டுமென்பதே (ராஜபக்சக்களின் கட்சியும் இரண்டுபட்டிருந்தாலும், தங்களின் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களுக்கிருக்கும் பல சிக்கல்களை சந்திக்கப் பயந்தும், அதிலிருந்து தப்பிக்கவும், பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவுமே ரணிலை ஒரு சாரார் ஆதரிக்கின்றனர்) மக்களின் பல குழுக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
இதற்குச் செவி சாய்த்து நாகரீகமாக, பண்பாட்டோடு ரணில் ஒதுங்கிக் கொள்வதே கண்ணியமான அரசியல். ஆனால் ராஜபக்சக்களின் பண பலத்தால் பல உறுப்பினர்களை விலைக்கு வாங்க ரணில் முற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
நேற்று கைப்பற்றப்பட்ட இடங்களை மீள ஒப்படைக்கும் போது போராட்டக்காரர்கள் ரணிலுக்கு விடுத்த எச்சரிக்கை மிகக் கடுமையானது.
"கோட்டாபயவைப் போலவே ரணிலும் பதவி விலகியே ஆக வேண்டும். மீறிக் குள்ள நரித் தந்திரங்களாலும், தற்காலிக பதவி பலத்தாலும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றால், இதுவரை வந்தது அலைகளே, இனி வரப் போவது #சுனாமி என்பதை நினைவில் கொள்ளட்டும்!" என்பதாகும்.
ஆக, ரணில் 'கண்ணியமாக வழிவிடுவாரா அல்லது கோட்டாபயவைப் போல அவரும் நாட்டை விட்டுத் தப்பி ஓடுவாரா' என்பதை அடுத்த வாரம் தீர்மானிக்கும்.
"நடக்கும் பாதை எவ்விதமோ
நாளைய பொழுதும் அவ்விதமே" - இது ராஜபக்சக்களுக்கு நடந்தது.
"புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ" - இது
ரணிலுக்கு நடக்கவிருப்பது.
#தாய்_மண்ணே_வணக்கம்
#நல்லதே_நடக்கட்டும்
Loganadan Ps
(colombo.srilanka)
Comments