சுவாமி விபுலாநந்தர்
ஜூலை 19 இன்று சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947) நினைவு நாள் கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.இவர் ஈழத்திருநாட்டில் பிறந்த அறிஞர்களில் இன்றும் அழியாப்புகழுடன் திகழ்பவர். இவர் இளமையில் இருந்தே கல்வியை ஆர்வத்துடன் கற்று வந்தார். கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். 1912ம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற தகுதி கிடைக்கப் பெற்றதும் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக சேவையில் அமர்ந்தார்.. 1920ம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழக பட்டதாரியானார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கலைஞர், ஆராய்ச்சியாளர், கல்லூரி அதிபர், பல்கலைக்கழகப் பேராசிரியர், ஆங்கில தமிழ்ச் சஞ்சிகைகளின் ஆசிரியர் எனப் பல துறைகளில் தம்மை ஈடுபடுத்தி சிறப்பாக தமது கடமையை ஆற்றினார். இவர் இந்தியா சென்று சமய, தமிழ் துறைகளில் நன்கு கற்று அங்கும் பல தொண்டுகள் ஆற்றியுள்ளார். 1924ம் ஆண்டு பாரதத்தில் உள்ள இராமகிருஷ்ண மடத்தில் துறவாகிய போது விபுலாநந்தர் என்னும் நாமம் சூட்டப்பெற்றார். அடிகளார் தமது ஐம்பத்தைந்தாவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அதாவது பத்தொன்பதாம் திகதி, ஆடி மாதம், 1947ம் ஆண்டு (19.07.1947) இவரது உயிர் பிரிந்தது. அடிகளாரின் சமாதி மட்டக்களப்பு சிவாநந்த வி;த்தியாலய வளவில் அமைந்துள்ளது. இவரது நினைவாக மட்டக்களப்பில் நிறுவப்பட்ட விபுலாநந்தர் மணி மண்டபம், விபுலாநந்தர் இசைக்கல்லூரி என்பன இன்றும் மிக கம்பீரமாக காட்சியளிக்கின்றன
Comments