அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) பிறந்த தினம்
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும், சமூக சேவகியுமான அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) பிறந்த தினம் இன்று.
ஹரியானா மாநிலம் கால்கா நகரில் (அப்போது பஞ்சாப் மாநிலம்) பெங்காலி குடும்பத்தில் (1909) பிறந்தவர். தந்தை ஹோட்டல் நடத்திவந்தார். லாகூர் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு நைனிடாலில் பயின்றார்.
. உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதால் ஓராண்டு காலம் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.
டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட இவர், பெண் அரசியல் கைதிகளின் உணர்வுகளை மதிக்காத சிறை அதிகாரிகளுக்கு எதிராக போராடினார்.
1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னணி தலைவராக இருந்து போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார்.
பம்பாய் கோவாலியா குள மைதானத்தில் தடையை மீறி காங்கிரஸ் கொடியை ஏற்றினார். இதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். ஒருமுறை இவரைப் பிடிக்க ரொக்கப் பரிசுகூட அறிவிக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸில் இருந்து வெளியேறி சோஷலிச இயக்கங்களில் இணைந்தார். சமூக சேவைகளில் ஈடுபட்டார். நலிவுற்ற பெண்கள், மாணவர்கள் நலனுக்காகப் பாடுபட்டார். மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்றார்.
டெல்லியின் முதல் மேயராக 1958-ல் நியமிக்கப்பட்டார். அப்போது நகரின் சுத்தம், சுகாதாரம், வளர்ச்சிக்காக பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். பொருளாதாரம், ஜாதி மற்றும் ஆண்-பெண் பாகுபாடுகளைப் போக்க முனைப்புடன் பணியாற்றினார்.
அமைதிக்கான லெனின் பரிசும் 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. நேர்மை, தன்னலமற்ற சேவை, நாட்டுப்பற்று ஆகியவற்றுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய அருணா ஆசஃப் அலி 87 வயதில் (1996) மறைந்தார். அவருக்கு 1998-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
Comments