Friday, July 15, 2022

மறைமலை அடிகளாரின் மாண்பென்றும் பெரியதே

 மறைமலை அடிகளின் நினைவை போற்றும் நாள். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த தந்தை என்ற அடையாளத்துடனும், எம்மொழி துணையுமின்றி தனித்து இயங்கவல்ல செம்மொழி என்ற நம்பிக்கையை தமிழுக்கு தந்தும், மொழித் தூய்மை காக்க போய் இனப் பெருமை காத்தது தான் மறைமலை அடிகளாரின் வரலாறு.


 சொல் என்பது வெறும் ஒலிச்சூட்டோடு பொருள் குறிப்போடு ஒழிந்து போவதில்லை. ஒரு சொல் துலக்கப் படும் போது மறைக்கப்பட்ட வரலாற்றின் பண்பாட்டின் மீட்டுருவாகவும் அது திகழ்கிறது என  சுட்டிக்  காட்டியது மறைமலை அடிகளாரின் எழுச்சிமிகு சிந்தனை.


 ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ் தனித்தியங்கும் ஒப்பிலக்கண நூலை கற்று, நெகிழ்வுற்று   அவர் மனம் உயர்வுற்று பின்னர் மகிழ்ந்திற்று.


 தமிழ் மொழி மீது பற்று வைத்த அவருக்கு தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்க காரணமாய் அமைந்தது. வடமொழி சொற்கள் கலப்பினை நீக்கி. அவ்விடத்திலேயே பொருள் மாறாது உரிய தமிழ்ச் சொல்லை பயன்படுத்தினார்.


 பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

 பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

 உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

 உயிரை மேவிய உடல் மறந்தாலும்

---------------------------------------

 நமச்சிவாயத்தை நான் மறவேனே


 என்னும்  வள்ளலார் பாட்டில்


 தேகம் என்ற சொல்லுக்கு பதிலாக

 யாக்கை என்னும் தமிழ்ச்சொல் பெய்யப் பெற்றிருந்தால்  ஓசை இன்பம் மேம்பட்டதாய் இருந்திருக்கும் என்றார் .


 மறைமலை அடிகளின் நடையோ தனித் தமிழை உள்வாங்கி உயிர்ப்போடு நடைபெறும் உணர்ச்சி நடை. புலமையைப் பின் னிறுத்தி கருத்தை முன்னிறுத்தும் கலை நடை.


 வேதாசலம் சுவாமி என்று தனது பெயரை மறைமலை அடிகளார் என மாற்றினார்.


 வேதம் என்றால் மறை, அசலம் என்றால் மலை, ஸ்வாமி என்றால் அடிகள்

  இப்படி தனது பெயரையும்  மாற்றம் செய்தார்


 "மகா ஜனங்கள்"

 பொதுமக்கள் ஆயினர்            

" பிரேரணை"

 தீர்மானம் ஆனது

" நமஸ்காரம்"

 வணக்கமாய் மாறியது

" முனிசிபாலிட்டி"

 நகராட்சி  எனவாயிற்று

" கார்ப்பரேஷன்"

 மாநகராட்சி இவ்வாறு வடமொழி சொல்லுக்கு நல்லதொரு தமிழ் மொழியை தந்தவர் தான் நம் மறைமலை அடிகளார்.

 தமிழ் மொழியில் பிறர் சொல் கலவாமை வேண்டும் என்பது அவரது தலையாய கொள்கை. தமிழ் ஆட்சி பெறவும், தமிழர் மீட்சி பெறவும் அவர் எழுத்தும் பேச்சும் மூச்சுள்ளவரை இயங்கின என உணர முடிகிறது


 முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை நூலுக்கு எளிய தமிழ் உரை செய்தார். காளிதாசரின் சாகுந்தலம் நூலை சகுந்தலை என தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார்.

 தமிழ் மொழி மீது பற்று வைத்து தமிழர்களின் மனமெல்லாம் இன்று நிறைந்திருப்பவர். என்றென்றும் தமிழ் மொழியால் உயர்ந்து நிற்பவர்.


 ஆம் அவரைப் பற்றி சில வரிகள் சொல்லில் உயர்ந்தது என்றென்றும் தமிழ்ச் சொல்லே


 சொல்லும்  போதெல்லாம் சுகமாக்கும் உயர் பொருளே


 இலக்கணமும் இலக்கியமும் பெற்றதெல்லாம் தவப்பயனே


 எம்மொழிக்கும் இல்லாத மேலோங்கிய இசைப்பண்னே


 மொழியின் ஆளுமையில் தனித்தன்மை பெற்றதே


 வடமொழியின் கலப்பையும் மாற்றம் செய்ததே தனித்தமிழ் இயக்கம் செந்தமிழை வளர்த்ததே


 மறைமலை அடிகளாரின் மாண்பென்றும் பெரியதே

முருக ஷண்முகம்No comments: