திரையுலகம் இருக்கும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும்
பராசக்தி படத்தில் அறிமுகமாகி பார்புகழும் நடிப்பு இமயமாக உயர்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் வெறும் கணேசனாக இருந்த அவர் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக அற்புதமாக நடித்ததால், அவருடைய நடிப்புத்திறனை பாராட்டிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த அவரது பெயர் சிவாஜி கணேசனாக மாறியது. 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.
சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத்திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிப்புத்திறமைக்காக பல விருதுகள் பெற்ற சிவாஜி கணேசனுக்கு இந்தியாவின் மிக உயரிய திரைப்படத்துறை விருதான தாதா சாகப் பால்கே விருது 1996ம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது.
திரையுலகம் இருக்கும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட நீங்காப்புகழ் பெற்ற சிவாஜி கணேசனை அவருடைய நினைவுநாளான இன்று ஜூலை 21, 2001 நினைவு கொள்வோம் !
Comments