நடிகவேள் எம்ஆர் ராதா...!

 நடிகவேள் எம்ஆர் ராதா...!



இன்றைய பிள்ளைகள்,  இவரை பற்றி  ஓரளவாவது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!


"உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்..!


யாருடனும் ஒப்பிட முடியாத, அதேசமயம், இந்தியாவின் தனித்துவம் மிக்க தைரிய கலைஞன் ராதா..!


ரொம்ப எளிமையானவர்.. ரொம்பவும் வித்தியாசமானவர்.. ரொம்பவும் துணிச்சலானவர்.. தப்பு என்று தெரிந்தால் போதும், அது யாராக இருந்தாலும் சரி, லெப்ட் & ரைட் வாங்கிவிடுவார்..!


அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!  


முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு "கலைஞர்" என்ற அடைமொழியை தந்ததும் சாட்சாத் நடிகவேள்தான்..!


இவருக்கு எழுத படிக்க தெரியாது.. யாராவது டயலாக் சொன்னால், அதை அப்படியே உள்வாங்கி கொண்டு திரும்ப சொல்லுவார்.. ஆனால், எம்ஆர் ராதா என்ற ஆளுமையின் தாக்கம் அவர் ஏற்று நடித்த எல்லா கேரக்டர்களின் மீதும் பதிந்திருந்தது.


எம்.ஆர்.ராதா முற்றிலும் முரண்பாடுகளால் நிறைந்தவர்.. ஆனால் வாழ்வின் மறுபக்கமோ நெகிழ்ச்சியால் நிரம்பியது.. பேரன்பால் விரிந்தது.. பெருங்கருணையால் நிறைந்தது..!


வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர் ராதா.. இவருக்கு அதிக அளவு உதவிகளை செய்தது கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்தான்.. அதனால்தான், தான் வசதியாக இருந்தபோது, பலருக்கு பல உதவிகளை அள்ளி அள்ளி செய்தார் எம்ஆர் ராதா... அப்படி செய்யும் உதவிகளை யாரிடமும் வெளியே சொல்லியதும் கிடையாது.


எத்தனையோ பேருக்கு வாழ்வும், சோறும் போட்டவர்.. தோழர் ஜீவாவுக்கு அடைக்கலம் தந்தவர்.. இலவசமாக நாடகங்களை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலமுறை நிதியுதவியும் செய்தவர்...!


தொண்டர்கள், நண்பர்கள் யார் உதவி என்று கேட்டாலும் உடனே மணி ஆர்டரை அனுப்பி வைத்துவிடுவார். இப்படிப்பட்ட குணாளனா,  எம்ஜிஆரை சுட்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறது..! "சுட்டான் சுட்டேன்" என்பது இன்னும் விளங்க முடியாததாகவே உள்ளது.


தந்தை பெரியாரின் ஆத்மார்த்தமான சீடர் எம் ஆர். ராதா.. கடைசி வரை நாத்திகமாக வாழ்ந்த கொள்கை வீரர்.. "பெரியாரின் போர்வாள்" என்ற பெயரை பெற்றவர்.. மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பது இவரது நாடி நரம்புகளில் முறுக்கேறி இருந்தது..!


பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கிண்டல், கேலி, நக்கல், நையாண்டிகளை செய்து யதார்த்தை சீர்படுத்தியவர் எம்ஆர். ராதா..!


நாடகம் என்பது பிறருக்கு பிழைப்பு.. ஆனால் ராதாவுக்கோ "போர்க்களம்"..!  ஒவ்வொரு நாடகத்தையும் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் அரங்கேற்றினார்.


"உயிருக்கு பயப்படாதவர்கள் மட்டும் என் நாடகத்தை பார்க்க வாங்க" என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தவர்.. சினிமாவில் நடித்து கொண்டே, "சினிமா பார்க்காதீர்கள்" என்று பிரச்சாரம் செய்தவர்..


தந்தை பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன. மிசா சட்டத்தில் கைதான ஒரே நடிகர் இவர்தான்.


"நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான்" என்று பொதுமேடையிலேயே முழங்கினார்.


"பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு.. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.. அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே.. அது ரொம்ப அசிங்கம்.. அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே.. நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.. அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்" என்றார்.


இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..  இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 


இவரது நாடகத்தை பார்க்க இலவச டிக்கெட்டுகளை வாங்கி கொண்டு, முன்வரிசையில் நிறைய விஐபிக்கள் உட்கார்ந்திருப்பார்களாம்.. ராதா மேடையில் நடித்து கொண்டே அவர்களை பார்த்து, "காசு கொடுத்தவன்லாம் தரையிலே உக்கார முடியாம தவிக்கிறான். ஆனால் ஓசியிலே வந்தவன்லாம் சேர்லே உட்கார்ந்திருக்கான்" என்று முகத்துக்கு நேராகவே சொல்லுவாராம்.


ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்ஏபி ஐயர் என்பவர் தலைமை தாங்கியதுடன், முன்வரிசையில் உட்கார்ந்து நாடகத்தை பார்த்து கொண்டிருந்தார்.. அதில் ஒரு காட்சியில், "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?" என்று ராதாவை பார்த்து ஒருவர் டயலாக் பேசுவார். அதற்கு ராதா, "பார்ப்பான் பார்ப்பான்" என்றாராம் அந்த "ஐயர்" காதில் விழும்படி சத்தமாக. 


ராதாவை ஒடுக்குவதற்காகவே தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தை தயாரிக்கும் அளவுக்கு நடுங்கி போனார்கள் என்பதே நிஜம்.. முதன்முதலாக நாடகத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது ராதாவிற்காகத்தான்... ஆனாலும், சட்டமன்ற வளாகத்திலேயே நேரடியாக போய், தனக்காக வாதாடிவர் ராதா...


பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன. மிசா சட்டத்தில் கைதான ஒரே நடிகர் இவர்தான். 


பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை கிண்டல் செய்து, கேலி செய்த சீர்திருத்த செம்மல் நடிகவேள் எம்ஆர் ராதா...  அவரது நாடகங்கள் லட்சக்கணக்கான மக்களை தட்டியெழுப்பின..!

 

அவற்றின் காட்சிகளும் கூரான அம்பு போன்ற வசனங்களும் இந்தியாவுக்கு அப்பாலும் பாய்ந்து  சென்று விழுந்தன..!!


சமூகத்திற்கு எது சரியோ அதனை நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்து சொன்னவர் ராதா.. திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு, தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது... அப்படி மீறி எழுதவும் யாருக்கும் துணிச்சல் வராது..!


ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி