புகழ் பெற்ற டி.கே. பட்டம்மாள் நினைவு தினம்

 ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாரதியாரின் தேச பக்தி  பாடலைப் பாடி புகழ் பெற்ற  டி.கே. பட்டம்மாள் நினைவு தினம் இன்று


காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் (1919) பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் பக்திப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். சிறு வயதிலேயே மகளுக்கு பாட்டு கற்றுத் தந்தார். இயற்பெயர் அலமேலு. செல்லமாக ‘பட்டா’ என்று கூப்பிடுவார்கள். அந்த பெயரே நிலைத்துவிட்டது. நான்கு வயதில் பாடத் தொடங்கினார்.

# கச்சேரிகளில் பிரபல பாடகர்கள் பாடும் பாடல்களைக் கேட்டே திறமையை வளர்த்துக்கொண்டார். # காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது, பாரதியார் பாடலைப் பாடி அவரிடம் பாராட்டு பெற்றார். 1929-ல் முதன்முறையாக வானொலியில் பாடினார். 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் இவரது முதல் கச்சேரி அரங்கேறியது.

# நாடு விடுதலை அடைந்த அன்று இரவு முழுவதும் ‘விடுதலை, விடுதலை’, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்பது போன்ற தேசபக்திப் பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார். ஆனால், அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார். காந்தியடிகள் மறைந்தபோதும் வானொலியில் பாடியவர் ஊதியம் வாங்க மறுத்துவிட்டார்.

# முத்துஸ்வாமி தீட்சதரின் பாடல்களைப் பாடுவதில் சிறந்து விளங்கினார். பாபநாசம் சிவன் இவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். ‘தியாக பூமி’ (1939) படத்தில் முதன்முதலாக ‘தேச சேவை செய்ய’ என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடினார். அதேநேரம், பக்தி அல்லது தேசபக்தி பாடல் மட்டுமே பாடுவது என்பதில் உறுதியாக இருந்தார்.

# பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவ ரது மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தனது ஜப்பானிய சீடர் அகிகோ என்பவரை திருவையாற்றில் பாட வைத்தார்.

# பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மான் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘தேசியக் குயில்’ என்று போற்றப்பட்ட டி.கே.பட்டம்மாள் 90-வது வயதில் (2009) மறைந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி