அதிசய ராகம்’

 ‘அபூர்வ ராகங்கள்’ படத்திலே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த ‘அதிசய ராகம்’ என்ற பாடலுக்கான ராகத்தை விஸ்வநாதன் அவர்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது பாலமுரளிகிருஷ்ணா அவர்கள்தான் என்பது திரையுலகில் மிகச் சிலரே அறிந்த ஒரு செய்தி. 



‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் பாடல் கம்போசிங்கின்போது அதுவரை யாரும் பயன்படுத்தாத ஒரு ராகத்திலே அந்தப் படத்திலே ஒரு பாட்டு இடம் பெற  வேண்டும் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கூறினார் படத்தின் இயக்குநரான கே.பாலச்சந்தர்.


அதாவது அந்த ராகம் அபூர்வ ராகமாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்திலே அந்த ராகத்தை அதுவரை யாரும் சினிமாவில் பயன்படுத்தி இருக்கவும் கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது.


அப்படி ஒரு ராகத்தை தீவிரமாக தேடிக் கொண்டிருந்த விஸ்வநாதன் தெலுங்கு புத்தாண்டு நிகழ்ச்சிக்காக வானொலியில் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்ய அகில இந்திய வானொலி நிலையத்திற்கு சென்றார். அந்தப் பாடலை பாட இருந்தவர் பிரபல சங்கீத வித்வானான பாலமுரளி கிருஷ்ணா.  


அவரைப் பார்த்தவுடனேயே தான் கடந்த இரண்டு நாட்களாக மனதுக்குள் கேட்டுக் கொண்டு இருந்த கேள்விக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை விஸ்வநாதனுக்கு பிறந்தது.


 “இதுவரை இசையமைப்பாளர்கள் யாரும் பயன்படுத்தாத புதிய ராகம் ஒன்றை சொல்லுங்கள்” என்று  அவரிடம் கேட்டார் எம்.எஸ்.வி. 


“க ப நி என்று மூன்று ஸ்வரத்தில் ஒரு ராகம் இருக்கிறது. அந்த ராகத்திற்கு மகதி என்று பெயர்” என்று சொன்ன  பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் சொன்னதோடு நில்லாமல் அந்த ராகத்தைப் பாடியும் காட்டினார்.


அதைக் கேட்டவுடனே அளவில்லாத ஆனந்தம் அடைந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அந்த மேதை கூறிய அந்த ‘மகதி’ என்ற அபூர்வ ராகத்தில் அமைத்த பாடல்தான் ‘அதிசய ராகம்; ஆனந்த ராகம்’ என்று தொடங்கும் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் பாடல்.  ஜேசுதாஸ் அந்த  பாடலைப் பாடியிருந்தார்.


பாலமுரளி கிருஷ்ணாவை ஒரு இசைக் கடல் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இசைக் கடல் நம்மிடையே இன்று இல்லை என்றாலும், அவரது இசை அலைகள் என்றும் ஓயாது.


நன்றி: டூரிங் டாக்கீஸ்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி