Monday, July 11, 2022

முற்பிறவிகளின் வினைகளை அகற்றும் நாலூர் மயானம்!

 

 

முற்பிறவிகளின் வினைகளை அகற்றும் நாலூர் மயானம்!முற்கால சோழர் ஆட்சிக்காலத்தில் மிகக் கொண்டாடப் பெற்ற மாடக்கோயில். இன்று காலத்தின் வேகத்திற்கு ஈடு தர முடியாமல் சிதைந்து சுருங்கிவிட்டதுஉலகத்திலுள்ள ஜீவர்களின் வாழ்வியல் முடியும் இடம் 'மயானம்'.  மயானம் என்ற வார்த்தையே சற்று பயம் தரக்கூடியதுதான்.‌ ஆயினும் ஜீவர்கள் சகல பற்றுகளும் விட்டொழித்து உண்மை நிலையினை உணர்ந்து மெய்ஞானம் அடையக்கூடிய இடம் இதுவே. எனவே இவ்விடம் மெய்ஞானம் எனப்பெறுகிறது. கும்பகோணம்,

திருச்சேறை அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. பொதுவாக கச்சி மயானம், கடவூர் மயானம், காழி மயானம், வீழி மயானம், நாலூர் மயானம் என ஐந்து மயானங்கள் முக்கியமானவைகளாகப் பேசப்படுகின்றன.

இவற்றுள் நாலூர் மயானம்தான் 'திருமெய்ஞானம்' எனப்பெறும் பாடல்பெற்ற தொன்மையான தலமாகும். நாலூர் சிவாலயத்திலிருந்து சற்று உள்ளடங்கி அமைந்துள்ள இது 'ஞானபரமேஸ்வர சுவாமி கோயில்' எனக் குறிப்பிடப்படுகிறது. 'செற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயம்' எனச் சோழர்களால் போற்றப்பெற்ற தலம் இது. நால்வகை வேதங்களும் சிறந்திருந்த ஊர்.


அதனால் சதுர்வேதமங்கலம் என்று அழைக்கப்பெற்றது. காலப்போக்கில் நாலூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது. உலக வாழ்க்கையை அனுபவித்து முடிவுற்று வரும் உயிர்களுக்கு, நிலைத்த உண்மையை உணர்த்தி ஈசன் மெய்ஞ்ஞானத்தினை வழங்கி அருளும் இடம் இதுவே. காலப்போக்கில் 'மெய்ஞ்ஞானம்'  என்ற சொல்லானது திரிந்து 'மயானம்' என்பதாக மருவி இருக்கலாம் என்பது ஆன்றோர் கருத்து. முதலாம் குலோத்துங்க சோழரின் படைத்தலைவராக விளங்கியிருந்த 'ஸ்ரீ பிரமாதிராஜன்' என்பாரின் சொந்த ஊர் இது எனச் சொல்லப்படுகிறது.

கோயிலைச் சுற்றிப் படியெடுக்கப்பட்ட 23 கல்வெட்டுகள் மிகப்பெரும் வரலாற்றுப் பொக்கிஷம். இத்தலத்து மூலவரை 'திருமயானத்து ஸ்ரீ மூலத்தானத்துப் பெருமானடிகள்' எனக் கல்வெட்டுகள் பேசுகின்றன. திருமெய்ஞ்ஞானத்தில் உறைந்திருக்கும்  பெருமான் தோற்றத்தில் சிறியவர். ஆனால் மெய்ஞானத்தினை அருளிடுவதில் மிகப்பெரியவர். 

இவர் 'மயானத்துப் பரமசுவாமி' எனக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளார். திருஞானசம்பந்தபெருமான் இத்தலத்து ஈசரைப் பாடி பரவியுள்ளார். ஆபஸ்தம்ப மகரிஷி வழிபட்ட சிறப்பினையுடைய தலம் இது.

இங்கு அம்மை ஞானாம்பிகையாக அருள்பாலிக்கிறாள். எம்பெருமானுக்கு இணையாக ஞானத்தினை வாரி வழங்கிடுவதில் சற்றும் சளைத்திடாத வரப்ரசாதி. உலகியல் பற்றுகளிலிருந்து விடுபட்டு ஞான மார்க்கத்தினை  விழைபவர்களுக்கு அருமருந்து இவ்வம்பிகை. இத்தலத்து ஞானதீர்த்தத்தில் நீராடி ஞானபரமேஸ்வரரை வழிபடுவோருக்கு பந்த பாசங்கள் நீங்கி, முப்பிறவி வினைகள் அகன்று, மீண்டும் பிறவா நிலை உண்டாகும் என்பது ஐதிகம்.


முற்கால சோழர் ஆட்சிக்காலத்தில் மிகக் கொண்டாடப் பெற்ற மாடக்கோயில். இன்று காலத்தின் வேகத்திற்கு ஈடு தர முடியாமல் சிதைந்து சுருங்கிவிட்டது. தொன்மையான தட்சிணாமூர்த்தி குறிப்பிடத்தக்க விசேஷ கோலத்தில் வீற்றிருக்கிறார்.

விதானத்துக் கல்நந்திகள் தொன்மை பேசிடும் சாட்சிகளாகப் புல் மண்டிய புதருக்கு நடுவே மறைந்து காட்சி தந்து கொண்டிருக்கின்றன. திருப்பணி செய்து முறையாகப் பராமரித்தால் இன்னும் வரும் தலைமுறைகளுக்கும் புராதனப் பெருமை கொண்டதோர் சோழர் கற்றளியின் வரலாற்றுப் பெருமையும், புராணப் பெருமையும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

https://www.vikatan.com/spiritual/temples

thanks

No comments: