சிம்மக் குரலோன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்:

 இன்று சிம்மக் குரலோன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்:




💥நடிப்பின் இமயம் சிவாஜிகணேசன் மறைந்தார்: தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிந்தது. தனது நடிப்பு ஆற்றலால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற சிவாஜிகணேசன் 21_7_2001 அன்று, தமது 74_வது வயதில் மரணம் அடைந்தார்.
ஏற்கனவே சிவாஜிகணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இருதய துடிப்பை சீர்படுத்த, நெஞ்சில் "பேஸ் மேக்கர்" என்ற கருவி பொருத்தப் பட்டது. பிறகு 5 ஆண்டுகள் அவர் வழக்கமான அலுவல்கள் மேற்கொண்டு வந்தார்.
2001 ஜுலை 12_ந்தேதி சிவாஜி கணேசனுக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை "அப்பல்லோ" ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 21_ந்தேதி அவரது உடல் நிலை அபாய கட்டத்தை அடைந்தது. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர மாக போராடினார்கள். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 8_10 மணிக்கு சிவாஜி கணேசனின் உயிர் பிரிந்தது. அப்போது மனைவி கமலா அம்மாள், மூத்த மகன் ராம்குமார், மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். இளைய மகன் பிரபு, சினிமா படப்பிடிப்புக்காக சுவிட்சர் லாந்து நாட்டுக்கு சென்றிருந்தார். சிவாஜி உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் செய்தி கிடைத்ததுமே, அவர் விமானத்தில் இந்தியாவுக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வந்து சேருவதற்குள்ளாகவே சிவாஜி மறைந்துவிட்டார்.
ராம்குமார் கூறும்போது, "எனது தந்தை காலை வரையில் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். கடைசி யாக எனது அக்காள் சாந்தியிடம்தான் பேசினார். அப்போது "வலி தாங்கமுடியவில்லையே அம்மா" என்று கூறினார். பிறகு படுத்துவிட்டார் தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விட்டது" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சிவாஜிகணேசனின் மரணச் செய்தி அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். "தலைவா, போய்விட்டாயே" என்று கதறியபடி தரையில் விழுந்து உருண்டு புரண்டனர். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், சத்யராஜ், அர்ஜூன், ராதிகா உள்பட நடிகர்_நடிகைகள் ஆஸ்பத்திரிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆந்திர முதல்மந்திரி சந்திரபாபுநாயுடு, கேரள முதல்_மந்திரி ஏ.கே. அந்தோணி, த.மா.கா. தலைவர் மூப்பனார் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டனர்.
பிரதமர் வாஜ்பாய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தமிழ் திரை உலகின் மாபெரும் நடிகராக திகழ்ந்த சிவாஜிகணேசன் நடிப்பின் போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும், மொழியை உச்சரிப்பதிலும் சிறந்து விளங்கியவர்" என்று புகழாரம் சூட்டினார்.
கன்னட நடிகர் ராஜ்குமார், நடிகை சரோஜாதேவி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
சிவாஜிகணேசனின் உடல் சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நீண்ட கியூவில் நின்று லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்அமைச்சர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கமலா அம்மாளுக்கு ஆறுதல் கூறினார். புதுச்சேரி முதல்மந்திரி சண்முகம், மூப்பனார், வைகோ, டாக்டர் ராமதாஸ், இல.கணேசன், ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ப.சிதம்பரம், ஏ.சி.சண்முகம், ஜெகவீர பாண்டியன் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சிவாஜியின் உடலை பார்த்ததும் அவர் கதறி அழுதார். நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் அவரை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் தனது மனைவியுடன் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார். ஜெமினி கணேசன், கே.பாலசந்தர், பட அதிபர் ஏவி.எம்.சரவணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
22_ந்தேதி முழுவதும் அலை அலையாக வந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
23_ந்தேதி காலை 8_50 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிரக் வண்டியில் சிவாஜியின் உடலை ஏற்றி வைத்தனர். `டிரக்' வண்டியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், ராம்குமார், பிரபு, சத்யராஜ், விஜய், சந்திரசேகர், இசை அமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் சந்தானபாரதி, பாரதிராஜா, சிவாஜியின் மூத்த பேரன் துஷ்யந்த் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
ஊர்வலம் சென்ற சாலைகளின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றனர்.
மாடி வீடுகளிலும், கட்டிடங்களிலும், மரங்களிலும் மக்கள் ஏறி நின்று சிவாஜி உடலை பார்த்து சோகத்துடன் நின்றனர். இறுதி ஊர்வலம் சென்ற 12 கிலோ மீட்டர் தூரமும் மக்கள் திரண்டிருந்தனர். கூட்டம் அலை மோதியதால் ஊர்வலம் மெதுவாகவே நகர்ந்தது.
ஊர்வலம் பெசன்ட் நகர் மயானத்தை சென்றடைந்தது. அங்கு அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன், எஸ்.எஸ்.திருநாவுக்கரசு, இலங்கை மந்திரி அவுலி மவுலானா, மேயர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜிகணேசன் உடல் தகனத்தை அரசு மரியாதையுடன் நடத்த முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி சிவாஜி உடல் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுத்து நின்று அஞ்சலி செலுத்தினர். வானத்தை நோக்கி 42 குண்டுகள் முழங்கின. போலீஸ் பாண்டு வாத்திய குழுவினர் சோக இசை இசைத்தனர். பிறகு இறுதி சடங்குகள் நடந்தன. சிவாஜியின் உடல் மின்சார தகன மேடையில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது.
மாலையில் `அஸ்தி' சேகரிக்கப்பட்டு பெசன்ட்நகர் கடற்கரையில் கடலில் கரைக்கப்பட்டது.💔

byகட்டிங் கண்ணையா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,