எனக்குள் நான் சொல்லிக் கொள்கிற ஞான வரிகள் ‘வாழு, வாழ விடு



 நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் அவர்களுக்கு அஞ்சலிகள். 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னையில் அவரது வீட்டில் ஒரு நேர்காணலுக்காக சந்தித்தேன். “என்னை எதுக்கு இன்டர்வியூ பண்ணனும்னு நினைக்கறீங்க?” என்று தொலைபேசியில் கேட்டார். நான் என்ன பதில் சொன்னேன் என்று நினைவில்லை. பிறகு சொல்கிறேன் என்று போனை வைத்துவிட்டார். அன்று மாலையே திரும்ப அழைத்து நேர்காணல் தருகிறேன் என்றார். 

முதலில் அவரிடம் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தயக்கம் இருந்ததும், மிக மேலோட்டமான பதிலாக இருந்ததையும் புரிந்து  கொள்ள முடிந்தது. எனக்கு திருப்தியே வரவில்லை. என்னை அந்த நேரத்தில் காப்பாற்றியது மலையாள எழுத்தளார் சந்தோஷ் யச்சிகானம். அவரைப் பற்றிய பேச்சு வருகையில் நல்லவேளையாக ‘ஒற்றைக்கதவு’ வாசித்திருந்தேன். ‘நீங்க லிட்ரேச்சர் படிப்பீங்களா?” என்றார். அதன்பின் எந்தத் தடையும் இருக்கவில்லை.  சில கேள்விகளுக்கான பதில்களை சொல்லிவிட்டு இதை off the record ஆக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அச்சில் வந்தபிறகு அழைத்து நன்றாக இருந்தது...புத்தக வாசிப்பை விடவேண்டாம் ..ஆங்கிலத்திலும் வாசிக்க வேண்டும்” என்றார். அதன்பிறகு அவரை நான் சந்திக்கவோ, பேசவோ இல்லை.


அந்திமழையில் அவரை எடுத்த நேர்காணலைத் தந்திருக்கிறேன்


//பிரதாப் போத்தன் – மலையாள சினிமா தொடர்ந்து இவரைத் தன்பக்கம்  தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. எண்பதுகளில் தமிழ், மலையாள சினிமாக்களில் அத்தனை முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலேயே இயக்குனராகவும் மாறியவர். மேடை நாடக கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் வடிவமைத்துக் கொண்ட இவரின் சினிமா குறித்த பார்வைகள் பரந்துபட்டதாய் இருக்கின்றன. சில கேள்விகளுக்கு ஆர்வமாகவும், சிலவற்றை தவிர்த்தும் அவர் தந்த பதில்களில் இருந்து...


“சிறு வயதில் வீட்டோடு அதிகம் இருந்ததில்லை. ஊட்டி கான்வென்ட் ஒன்றில் தான் படிப்பு. படிப்பைத் தவிர வேறு எதையும் யோசிக்க வைக்காத கட்டுப்பாடு உள்ள பள்ளிக்கூடம். ஆனால் அங்கும் கூட ஒரு முறை சில சினிமாப் படங்கள் போட்டுக் காட்டினார்கள். அந்தப் படம் ஒரு அப்பா தன் பையனோடு தொலைந்து போன தனது சைக்கிளைத் தேடுகிற படமான ‘bicycle thieves’. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சத்யஜித் ரே என்கிற மகா படைப்பாளியையே சினிமா எடுக்கத் தூண்டிய படம் என்கிறபோது, என்னை அது பாதித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இப்படியும் சினிமாக்கள் இருக்கின்றன என்று நினைக்கிறபோதே பாரதிராஜாவும், மலையாளத்தில் பி.என். மேனன் படங்களும் பார்க்கக் கிடைத்தன. இரண்டு பேரின் படங்களுமே யதார்த்தத்துக்கு மிக அருகில் என்னைக் கொண்டு நிறுத்தியவை” என்கிற பிரதாப் போத்தன் சினிமாவின் 35 வருட வளர்ச்சியைக் கவனித்துக் கொண்டே இருப்பதாக சொல்கிறார்.

“மற்ற எந்த துறையைக் காட்டிலும் சினிமா தான் குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. வளர்ச்சி இருந்தால் தான் நகர முடியும், வெற்றியடைய முடியும் என்பதால் ஒரு கோட்டைப் போட்டு அதைத் தாண்டிக் கொண்டே தன்னுடைய எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

நான் இயக்குகிறபோது சில விஷயங்கள் நான் கற்பனையில் யோசித்தபடி frame–ல் வரவேண்டும் என்பதற்கு அதிகம் மெனக்கிட்டிருக்கிறேன். இப்போது தொழில்நுட்பத்தால் எல்லாம் மாறி இருக்கிறது.  இன்று எல்லாருமே படம் எடுப்பவர்கள் தான். உங்களிடம் எல்லா வசதிகளும் உள்ள மொபைல் போன் இருக்கிறதா, அப்படி என்றால் நீங்களும் இயக்குனர் தான். ஆனால் வெறும் கேமரா ஒன்றும் செய்து விட முடியாது. ஒரு அனுபவம் வேண்டும். பயிற்சி இருக்க வேண்டும். நான் தமிழிலும், மலையாளத்திலும் முக்கியமான இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தேன். அவர்களைக் கவனித்துக் கொண்டே இருப்பேன். இதனாலேயே இயக்க வேண்டும் என்கிற ஆசை இயல்பாக வந்து விட்டது. சினிமாவுக்கான இலக்கணம் தெரிவது மட்டும் நல்ல இயக்குனரைத் தந்துவிடாது. இலக்கணத்தை பிரயோக்கித் தெரிந்திருக்க வேண்டும். அது மட்டும் கூட போதாது. சில நேரங்களில் அதை மீறுவதற்கான தைரியமும் வேண்டும்.”


பிரதாப் போத்தன் தனது வாழ்நாளின் மிக முக்கியமான அனுபவமாக நினைப்பது ‘ஒரு யாத்ர மொழி’ மலையாளத் திரைப்படத்தை இயக்கிய  காலகட்டத்தை. தன்னுடைய அம்மாவை விட்டுப் போன அப்பாவைத் தேடிப் பிடித்து கொலை செய்ய நினைக்கிற ஒரு மகனுக்கு, தோழனாக தமிழ் மட்டுமே பேசுகிற ஒரு வழிப்போக்கன் கிடைக்கிறார்.  இருவருக்கும் இடையில் நடக்கிற உணர்வுப்பூர்வமான சம்பவங்களே ‘ஒரு யாத்ரா மொழி’ திரைப்படம்.


“இந்தப் படத்தில் இரண்டு ஜாம்பவான்கள் நடித்தார்கள். மோகன்லாலும் , அவருடைய ‘காட்ஃபாதராக’ சிவாஜி சாரும். நான் பாக்கியம் செய்திருக்கிறேன். சிவாஜி சார் கடைசியாக நடித்த இந்த மலையாளப் படம் நான் இயக்கியது. ‘டேய். நான் கேமரா முன்னாடி வந்துட்டேன்னா தந்துகிட்டே இருப்பேன். நீ தான் என்ன தேவையோ அத வாங்கிக்கணும்’ என்று சொன்னார். அவர் சொன்னது எத்தனை உண்மை என்பது அவர் நடிக்கத் தொடங்கினபோது தான் தெரிந்தது. அவர் அழகர். பாந்தமானவர். பிறவிக் கலைஞன் என்பது அவருக்குத் தான் பொருந்தும். நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு அவருக்கு. கேமரா முன்னால் நிற்கும்போது ‘சார் ..சார்’ என்று தான் எதையும் என்னிடம் பேசுவார். ஷாட் முடிஞ்சதும் ‘டேய்...அடேய்..போடா..போடா’ என்றபடியே வம்பிழுத்துப் போவார். அந்தப் படத்தை எப்பொழுது நினைத்துக் கொண்டாலும் உணர்வுக் கொந்தளிப்புக்குள் போய்விடுவேன்” 


நாடக மேடைகளில் நடித்துக் கொண்டிருந்த இவரின் திறமையைப் பார்த்து இயக்குனர் பரதன் தனது படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என  நூறு படங்களுக்கு மேலாக நடித்து முடித்துள்ளார். இதில் ஒரு ஆச்சர்யம் இவர் நடித்த எந்தப் படங்களையும் இவர் தியேட்டரில் போய்ப் பார்த்ததில்லை. “கூச்சம் தான் காரணம். சின்ன வயதில் இருந்தே கூச்ச சுபாவம் உண்டு, யாராவது தொடர்ந்து வற்புறுத்தினால் டிவிடியில் பார்ப்பேன். அப்போதும் கூட முழுதாக பார்ப்பதில்லை. Fast forward செய்து தான் பார்ப்பேன். மற்றபடி டப்பிங் பேசும்போது பார்பதோடு சரி”. 

இப்போது வருகிற மலையாளப் படங்களில் அவருடைய பங்களிப்பு அதிகம் இருக்கிறது. இதனாலேயே கேரளாவில் அதிகம் தங்கிவிடுவதோடு எப்போதாவது தான் சென்னைப் பக்கம் வருகிற வாய்ப்பு கிடைக்கிறது என்கிறார். “மலையாளப் படங்களில் நடிகர்களுக்கு பெரிய வசதி உண்டு. வித்தியாசமான கதாபாத்திரங்கள் அங்கே கிடைத்துக் கொண்டே இருக்கும். 22, female kottayam’ படத்தில் ஒரு rapist ஆக நடித்தேன். அடுத்த வந்த படமான ‘ஆயாளும் ஞானும்’ படத்தில் மனித நேயம் கொண்ட டாக்டர் வேஷம். அடுத்தடுத்த காட்சிகளாக ஒரே திரை அரங்கில் இந்தப் படங்களைப் போட்டாலும் கூட மக்கள் என்னை உள்ளபடியே ஏற்றுக் கொள்வார்கள். மற்ற மொழிப் படங்களில் ஒரே விதமான ரோல் மட்டும் தான் என்னால் செய்யயமுடியும் என முடிவெடுத்து விடுகிறார்கள். மலையாளத்தில் பெரிய நடிகர்கள் கூட தங்களைப் பரிட்சார்த்த முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கென்று கதையை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. அதவும் போக மலையாளப் படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படுவதால் நீங்கள் நினைத்ததை செய்து பார்க்க முடியும். துபாயில் போய் சம்பாதித்து அந்தப் பணத்தில் ஒரு நல்ல மலையாளப் படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார்கள். நல்ல கதை, நல்ல நடிகர்கள், புதிய சிந்தனைகள் எல்லாம் சேர்ந்து யாருக்கும் நஷ்டம் ஏற்படுத்தாமல் இருக்கிறது. இப்படி ஒரு சூழல் மற்ற மாநிலங்களில் சாதியப்ப்படுமா என்பது கேள்விகுறி தான்”.


“ஒரு நல்ல படம் என்பது நாலு விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் மனதைத் தொட வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும், சிந்திக்க வைக்க வேண்டும், எனக்கு பொழுதும் போக வேண்டும். ஒரு ஹீரோ கையால் ரயிலைத் தள்ளுகிறான் அது அப்படியே பின்னால் நகர்ந்து போகிறது என்பது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. இந்த அபத்தம் எனக்கு சிரிப்பைத் தருகிறது. பொழுது போகவைக்கிறது. இதற்காக இதை நல்ல படம் என்றெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. அது எனக்குள் புகுந்து என்னை என்ன செய்கிறது என்பது தான் கேள்வி.” 


புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டிருக்கும் பிரதாப் போத்தனின் சின்ன வயது கனவுகளில் ஒன்று அப்போது படித்த ஒரு காமிக் புத்தகத்தை படமாக எடுக்க வேண்டுமென்பது. “இப்போதெல்லாம் படிக்கும் பழக்கம் எனக்கு குறைந்து விட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் புத்தகத்தோடு தான் இருப்பேன். இப்போது அந்த இடத்தை என்னுடைய ஐ-பாட் பிடித்துக்  கொண்டிருக்கிறது. தற்சமயம்  எம்.டி. வாசுதேவன் நாயர் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சந்தோஷ் யச்சிகானம் நன்றாக எழுதுகிறார். 

மார்க்வெஸ் சல்மான் ருஷ்டி போன்றவர்கள் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள். மாஜிக்கல் ரியலிசப் புத்தகங்களைத் தேடி தேடி படிப்பேன். ஒரு நாவலை படமாக எடுப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் அதை சரியாக செய்தவர்கள் இருக்கிறார்கள். Dr. Zhivago நாவல் எனக்குப் படிக்கும்போது பிடிக்கவில்லை. ஆனால் டேவிட் லீன் அதை படமாக எடுக்கும்போது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் விரும்புகிற படங்களின் வரிசையில் எப்போதுமே Dr. Zhivago இருக்கும். ‘வெற்றி விழா’ படம் கூட ‘THE BOURNE IDENTITY’  நாவலைப் படித்ததன் பாதிப்பில் எடுக்கப்பட்டது தான். வெற்றி விழாவுக்குப் பிறகு தான் ‘THE BOURNE IDENTITY’ படம் ஹாலிவுட்டில் வெளிவந்தது.


ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, வெற்றிவிழா தொடங்கி மலையாளப் படங்களிலும் இவருடைய படங்களின் பாடல்கள் பெரும் வெற்றிப் பெற்றிருக்கின்றன. “எனக்கு அமைந்த இசையமைப்பாளர்கள் தான் காரணம். அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இளையராஜா எனக்கு அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார். ஆதித்யா, மலையாளத்தில் மாஸ்டர் ஷ்யாம் என என் படங்களுக்கு சிறப்பான இசையைத் தந்திருக்கிறார்கள். அதிகமும் மேற்கத்திய இசைகளையும், ஏ.ஆர். ரஹ்மான் இசைகளையும் அடிக்கடி கேட்பேன். எனக்கு இசைத் தெரியாது. ஆனால் நான் நல்ல ரசிகன். அதுவும் கூட எனது பாடல் வெற்றிகளுக்கு காரணம்.”


பிரதாப் போத்தனின் குடும்பம் கேரளா மாநலத்தில் பிரபலமானது. இவரது அப்பா கொலத்திங்கள் போத்தன்  அரசியல்வாதி மட்டுமல்லாமல் வெற்றிகரமான தொழிலதிபராகவும் இருந்திருக்கிறார். “என்னுடைய அப்பா கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்ததில் ஒருவர். அந்தக் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். சில காரணங்களினால் கட்சியை விட்டு விலகி தொழிலதிபரானார். எனக்கு இரண்டு அண்ணன்கள். இப்போது இருவருமே உயிரோடு இல்லை. இரண்டு அக்காக்கள். அதில் ஒருவர் மட்டும் தான் இருக்கிறார். இத்தாலி நாட்டில் இருக்கும் அவள் ஓவியரும் கூட. அவள் வரைந்த ஓவியங்கள் தான் இவை” என அறையைச் சுற்றிலும் மாட்டப்பட்டுள்ள ஓவியங்களைக் காட்டுகிறார். “எனக்கு ஒரே பெண். பிரபலமான விளம்பர கம்பெனியில் நல்ல பொறுப்பில் இருக்கிறாள். எல்லா சந்தோசங்களையும், இழப்புகளையும் கடந்து வந்தாகிவிட்டது. ஆனாலும் அலுக்காமல் தான் வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது.” என்கிறவர் சிறுது நேர மௌனத்திற்கு பிறகு தொடர்கிறார். 

“இப்போது தான் வாழ்க்கை குறித்த தெளிவு கிடைத்திருப்பதாக தோன்றுகிறது. ரொம்ப தூரம் கடந்து வந்துவிட்டேன். ஆனால் கடக்க வேண்டிய தூரத்தை மட்டும் தான் இப்போது சிந்திக்கிறேன். இப்போது எனக்குள்ள  பக்குவம் முதலிலியே இருந்திருந்தால் எத்தனையோ பிரச்சனைகளை கையாண்டிருப்பேன். ஆனாலும் வாழ்க்கை ஒரு அற்புத ஆசான். அதனிடமிருந்து பொறுமையாகத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இத்தனை வருடங்களில் வெவ்வேறு அனுபவத்தில் வாழ்க்கை தத்துவங்களைத் தேடித் தேடித் படிக்கிறபோது  எனக்குள் நான் சொல்லிக் கொள்கிற ஞான வரிகள் ‘வாழு, வாழ விடு’. என்பது தான்.”

நன்றி :தீபா ஜானகிராமன்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,