- ரவிசுப்பிரமணியன் நேர்காணல்

 


தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவரான ரவி சுப்பிரமணியன் இசை, நவீன ஓவியங்களிலும் ஈடுபாடுள்ளவர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகமாகப் பொருளாதார ஆதரவு இல்லாத ஆவணப்படத் துறையில் தமிழ் எழுத்தாளர்கள் குறித்து இவர் எடுத்த ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவை


இளம் வயதிலேயே மூத்த படைப்பாளிகளுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு உங்களுக்கு வாய்த்தது மிக அபூர்வமானது. இதுகுறித்து?


அபூர்வம்தான். எனக்கு அதெல்லாம் பெரிய யத்தனம் இல்லாமல் யதேச்சையாகத்தான் நிகழ்ந்தது. தேனுகா, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், கிருஷாங்கினி, தஞ்சை ப்ரகாஷ், சி.எம்.முத்து, நா.விஸ்வநாதன், மீரா, வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், பிரபஞ்சன், கலாப்ரியா இப்படி நீளும் பெரிய பட்டியல் அது. இப்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பழகுவதில் என்ன இருக்கிறது? அவர்களிடமிருந்து என்ன பெற்றுக் கொண்டோம் என்பதில்தான் அர்த்தம் இருக்கிறது.


கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் தொடங்கி சுஜாதா வரையிலான ஆளுமைகளிடம் நீங்கள் பெற்றுக்கொண்ட விஷயங்களைச் சொல்லுங்களேன்...


அது சொற்ப வரிகளில் சொல்லி முடிகிற விஷயமல்ல. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று நபர்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன். கரிச்சான் குஞ்சு – எத்தனை கற்றாலும் திறமை இருந்தாலும் குழந்தைமையை, மனிதாபிமானத்தை விடாதிருப்பது. எம்.வி.வெங்கட்ராம் – அர்ப்பணிப்புடன் விதவிதமாக எழுதிவிட்டு, எந்த எதிர்பார்ப்புமின்றி வித்வத்தில் தன்னையே கரைப்பது. சுஜாதா – ஷார்ப்பாக இருக்க வேண்டும், புதிதுபுதிதாகத் தெரிந்துகொண்டே இருக்க வேண்டும், நகைச்சுவையை விட்டுவிடக் கூடாது, ஜுஜ்ஜிலிபி.


கவிஞர், ஆவணப்பட இயக்குநர், விமர்சகர், பாடகர் இப்படிப் பல அடையாளங்களில் எது உங்களுக்கு நெருக்கமாக உள்ளது?


கவிஞர்தான். அதிலிருந்துதான் மற்றதெல்லாம். அது ஏன் நெருக்கமாக இருக்கிறது என்றால், கவிதை எழுதும்போது கிடைக்கும் ஒருவிதப் பரவச நிலை. ஏனென்றால், நீங்கள் பெற்ற அல்லது உள்வாங்கிய உணர்ச்சியோ சம்பவமோ மறுபடி இன்னொரு விதமாக உருமாறுகிறது. மனதைப் பாதித்த ஒன்றுதான் படைப்பாகும், இல்லையா? அந்தத் தருணமும் அதைக் கவிதையாக்கும் நேரமும் அவ்வளவு முக்கியமானது! அதன் பிறகு, வாசகர்கள் அடையும் ஆனந்ததுக்காகவும், அவர்களுடைய உற்சாக மொழிக்காகவும்தான் எழுதுகிறோம்.


சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுக் குழுவில் இருந்துள்ளீர்கள். நீங்கள் பரிந்துரைக்கும் படைப்புகளை எவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கிறீர்கள்?


கடன் வாங்கிய சிந்தனைகளாக இல்லாமல் ஒரிஜினலான, நேர்மையான இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். படைப்பாளி எழுதிய பிற இலக்கியப் படைப்புகள், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இலக்கியத்துக்காகச் செய்யும் காரியங்கள், எடுத்துக்கொண்ட விஷயத்துக்காகத் தன்னை விசுவாசமாக வரித்துக்கொண்ட விதம்... இவற்றையெல்லாம் நான் பார்ப்பேன். பிறகு, இப்போது என் இடப்பக்க நெஞ்சில் என் வலது உள்ளங்கையை வைத்திருக்கிறேன். அந்தக் கையைத் தட்டியபடி சொல்கிறேன்: ‘இங்க என்ன சொல்லுதோ அதத்தான் கேட்பேன்!


- ரவிசுப்பிரமணியன் நேர்காணல் 


நன்றி: இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,