ஜோதி பாசுவின் பிறந்த நாள்
இன்று ஒரு வரலாறு பிறந்தது! 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ஐந்து முறை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றி இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்ற - இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒப்பற்ற தலைவர் ஜோதி பாசுவின் பிறந்த நாள் 1914 ஜூலை 8. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர்.
லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்தவர் ஜோதிபாசு. அன்று முதல் மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை அசைக்க முடியாத தலைவராக, இரும்பு மனிதராக கோலோச்சியவர் பாசு.
இந்தியாவின் வலிமை வாய்ந்த, கவர்ச்சிகரமான ஒரு அரசியல் தலைவராக திகழ்ந்த பெருமைக்குரியவர் ஜோதிபாசு. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் இந்திய அரசியல் அரங்கை வியாபித்திருந்த மாபெரும் தலைவர் ஜோதிபாசு.
அரசியல் கரைகளையும் தாண்டி அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட்டவர் ஜோதிபாசு என்பது அவருக்கு மிகப் பெரிய பெருமையாகும்.
மேற்கு வங்கத்தின் முதல்வராக முதல் முறையாக 1977ம் ஆண்டு பதவியேற்ற ஜோதிபாசு, 23 ஆண்டுகள் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்து பெரும் சாதனை படைத்தவர்.
தூய்மையான கம்யூனிஸவாதியாக இருந்தாலும் கூட மக்களுக்கேற்ற படி திட்டங்களை அமைப்பதிலும், தொழில் வளர்ச்சிக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும் வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கத் தயங்காதவர்.
முதல்வர் பதவியில் இருந்தபோது, தனது பதவிக்காலத்தின் கடைசிக் கட்டங்களில் மேற்கு வங்கத்தை நோக்கி பல வெளிநாட்டு நிறுவனங்களை கொண்டு வந்தார்.
1996ம் ஆண்டு மத்தியில் இவரைத் தேடி பிரதமர் பதவி வந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையால் அந்தப் பதவியை ஏற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜோதிபாசு.
ஜோதிபாசு பிரதமராகப் பதவியேற்றிருந்தால் இந்தியாவின் நிலை வெகுவாக மாறியிருக்கும். பிரதமர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்திருப்பார் என்று இப்போதும் கூறுவோர் உண்டு.
Comments