அன்னை ஸ்ரீ சாரதா தேவி (Sri Sarada Devi) மறைந்த தினம் இன்று
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (Sri Sarada Devi) மறைந்த தினம் இன்று 🥲
மேற்குவங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் (1853) பிறந்தார். தந்தை கோயில் பூசாரி. பள்ளிக்குச் சென்று பயின்றதில்லை. இளம் வயதிலேயே தனித்தன்மையுடன் விளங்கினார். கழுத்து வரை நிற்கும் தண்ணீரில் இறங்கி, பசுக்களுக்குப் புல் வெட்டி வருவார். வயலில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பார். பருத்தித் தோட்டத்தில் தாயுடன் சேர்ந்து பருத்தி எடுப்பார்.
ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்த அரிசியை எடுத்து சமைத்து, ஏழைகளுக்குப் பரிமாறி, பசியாற்றினார். வீட்டில் தெய்வீகச் சூழல் நிலவியதால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் கற்றார். ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பின்னாளில் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.
அந்நாள் வழக்கப்படி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இவரை பால்ய விவாகம் செய்து வைத்தனர். ஆன்மிகத் தேடலில் மூழ்கிய பரமஹம்சரைப் புரிந்துகொள்ளாத கிராமத்து மக்கள், ‘பாவம் இந்த அப்பாவி சிறுமியை, மனநிலை சரியில்லாதவருக்கு கட்டிவைத்துவிட்டார்களே’ என்று பரிதாபப்பட்டனர். அதனால் அச்சமடைந்தார்.
நேரில் சென்று கணவரைப் பார்த்த பிறகு, அவர்கள் கூறியது உண்மையல்ல என்று தெளிந்தார். கணவர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றார். தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார்.
இவரை உலக நாயகியான அம்பிகையாகப் போற்றி, பூஜித்தார் பரமஹம்சர். சாதாரண கிராமத்துப் பெண்ணாக கணவனைத் தேடி வந்த இவர், ‘அன்னை சாரதாதேவி’யாக மாறினார்.
சீடர்கள், பக்தர்களுக்கு தானே சமைத்து பரிமாறுவார். அவர்கள் சாப்பிடும்போது அருகில் அமர்ந்து விசிறிவிடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது, ஆச்சார நியமங்களைவிட தூய்மையான பக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். இறுதி நாட்களில் ராமகிருஷ்ணர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பணிவிடை செய்தார். பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு, சீடர்களை சிறப்பாக வழிநடத்தினார்.
ஒருமுறை கயாவுக்கு சென்றவர் அங்குள்ள மடங்களில் துறவிகளுக்கு இருந்த வசதிகளையும், ராமகிருஷ்ணரின் சீடர்கள் சிரமப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். ‘என் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் வேண்டும். அவர்கள் அலைந்து திரிவதைக் காண சகிக்கவில்லை’ என்று பரமஹம்சரிடம் மானசீகமாக பிரார்த்தித்தார். இதுதான் ராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கான அஸ்திவாரம்.
அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் 1898-ல் தொடங்கப்பட்டது. ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர்.
‘மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதீர்கள்.
உங்கள் தவறுகளைப் பாருங்கள்.
மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டு பழகுங்கள்.
யாருமே அந்நியர் அல்ல. அனைவரும் என் குழந்தைகளே. மொத்த உலகமும் உங்கள் சொந்தம்’ என்று உபதேசித்தார்.
அனைவருக்கும் அன்பு, கருணை, ஆசியை வாரி வழங்கிய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 67-வது வயதில் (1920) மறைந்தார்.
Comments