அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே./வாலி




கவிஞர் வாலி காலமான தினமின்று🥲


’நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்’ பாடலைக் கேட்கும் போதே ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள். 


‘அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே...’ பாடலும் அப்படித்தான். நம்மை நம் பால்யத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாடல் இது.


‘புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்’ பாடலாகட்டும், ‘தரைமேல் பிறக்கவைத்தான்...’ பாடலாகட்டும்... எல்லாவற்றுக்கும் மேலாக ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ பாடலாகட்டும்... பாட்டைக் கேட்டதுமே, ‘கண்ணதாசன் கண்ணதாசன்தான்யா’ என்று சொல்லிப் பெருமைப்படுத்துவோம். பெருமிதப்படுவோம்.


ஆனால்... ஒருவரின் பலம், பலவீனம் என்றெல்லாம் பேசுகிறோமே... இதிலொரு சுவாரஸ்யம் இருக்கிறது. எது பலமோ அதுவே பலவீனமாகவும் இருக்கும். இதற்கொரு உதாரணம்... கவிஞர் வாலி. இவரின் பாடல்கள் பலவற்றை, கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் என்று சொல்லிவிடுவதுதான் இவரின் பலமும் பலவீனமும். ஆனால் தன் பலவீனங்களையெல்லாம் கடந்து,  மிகப்பெரிய ராஜபாட்டையே நடத்தினார், தன் எழுத்தின் மூலமாக!


திருச்சி ஸ்ரீரங்கத்தில் மொத்தம் மூன்று ரங்கராஜன்கள் மிகபெரிய பிரபலம். முதலாவது... ஸ்ரீரங்கம் ரங்கராஜப் பெருமாள். அடுத்து... ரங்கராஜன் என்கிற சுஜாதா. குறும்பும்குசும்புமாக, அறிவியலும் ஆன்மிகமுமாக எழுதி, தனியிடம் பிடித்தவர். மூன்றாவதாக, ரங்கராஜன் என்கிற கவிஞர் வாலி. வாலிபக் கவிஞர் வாலி! 


கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கற்பகம் படத்தில் ‘அத்தை மடி மெத்தையடி’ பாடல்தான் வாலியின் முதல் பாடல். அதன் பிறகு தொடங்கியது வாலி(பால்) ஆட்டம்.


‘என்ன ஆண்டவரே...’ என்று எம்.ஜி.ஆர். வாலியை அழைப்பார். அதேபோல, ‘வாங்க வாத்தியாரே...’ என்று வாலியை சிவாஜி கூப்பிடுவார். அந்த அளவுக்கு வாலிக்கு மரியாதை தந்தார்கள். அந்த அளவுக்கு வாலியின் எழுத்துகள், அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.


கே.பாலசந்தரின் படங்களுக்கு பாடல் எழுதுவதுதான் கடினமான வேலை என்று கண்ணதாசனே சொல்லியிருக்கிறார். அவரின் படங்களுக்கு ஒருகட்டத்தில் வாலி எழுதத் தொடங்கினார். ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ என்றெல்லாம் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார் வாலி.


ஒருமுறை, கே.பி. தன் உதவியாளர்களுடன் இருக்க, எம்.எஸ்.வி.வும் தயாராக இருந்தார். வாலியின் பாடல்கள் ரெடி. பிற்பாடு வாலியும் வந்துவிட்டார். ‘பிரமாதம். அற்புதமான வரிகள். கண்ணதாசனுக்கு நிகரா இருக்கு ஒவ்வொரு வரியும்’ என்று சொல்லிக்கொண்டே, ‘இந்த வரியை கொஞ்சம் இப்படி மாத்திக்கலாமா?’, ‘அந்த வரியை ரெண்டாவதாப் போட்டு, ரெண்டாவது வரியை அங்கே போட்டுட்டு, அதை இப்படி மாத்திக்கலாம். என்ன சொல்றீங்க?’ என்று கே.பி.யும் எம்.எஸ்.வி.யும் சொல்லிக்கொண்டே இருக்க, ’சார்... அதோ... மேல இருக்கே. அது இருக்கட்டுமா? அதையும் மாத்திக்கணுமா?’ என்று சுட்டிக்காட்டினார் வாலி. அப்படி காகிதப் பகுதியின் மேலே இருந்ததை வாலி காண்பித்தது... பிள்ளையார் சுழியை!


இளையராஜாவுக்கும் வாலிக்கும் அருமையானதொரு தொடர்பும் நட்பும் மரியாதையும் உண்டு. வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு வந்ததும், தொடர்ந்து இளையராஜாவின் படங்களுக்கு வாலிதான் பாடல்களை எழுதினார். அப்படியொரு நிலையில், கமலின் படத்துக்கு இளையராஜா இசை. பாடல்கள் வாலி. ‘அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்குண்ணே. அந்த நாலாவது வரியை முதல் வரியா வைச்சா நல்லாருக்கும்ணே. ஆனா மெட்டுக்கு உக்காராது. அதனால, இப்படி மாத்திக்கலாமாண்ணே’ என்று இளையராஜாவும் கமலும் மாற்றி மாற்றிச் சொல்ல... கடுப்பாகிப் போன வாலி, கேலியும்கிண்டலுமாக, ‘ஏண்டா செல்ஃப் ஷேவிங்னு முடிவுபண்ணிட்டீங்க. அப்புறம் ஏண்டா, சவரப்பெட்டியோட என்னை வரச்சொன்னீங்க’ என்று தனக்கே உரிய பாணியில் கேட்டார். வெடித்துச் சிரித்தார்கள் அங்கிருந்தவர்கள்.


எம்.ஜி.ஆரின் படகோட்டிக்கு வாலிதான் எல்லாப்பாடல்களும்! தொட்டால் பூ மலரும் பாடல், ஆகச்சிறந்த காதல் பாடலாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது; பாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பலவும், எம்.ஜி.ஆரின் அரசியல் எதிர்காலத்துக்கு விதைகளாகவும் உரங்களாகவும் இருந்தன. இந்தப் பாடல்களைக் கொண்டே பின்னாளில் நல்ல அறுவடையென மக்கள் ஆதரவு எனும் மகசூல் கிடைத்தது எம்.ஜி.ஆருக்கு!


ஜெண்டில்மேன் படத்தில் எல்லாப் பாடல்களும் வைரமுத்து எழுதியிருப்பார். வாலி ஒரேயொரு பாடல் எழுதியிருப்பார். படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட். ஆனாலும் ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ மாஸ் ஹிட்டடித்தது. அதேபோல ஷங்கரின் காதலன் படத்தில் எல்லாப்பாடல்களும் வைரமுத்து. வாலி ஒரேயொரு பாடல்தான். ஆனாலும் வாலி எழுதிய, ‘முக்காலா முக்காபுலா’ பாட்டு ஹிட்டானதைச் சொல்லவும் வேண்டுமா?


கே.பாலசந்தருக்கும் அவரின் சிஷ்யரான கமலுக்கும் வாலி மீது அப்படியொரு காதல் உண்டு. பொய்க்கால் குதிரையில் வாலியை நடிக்கவைத்திருப்பார். அதேபோல், சத்யா படத்திலும் ஹேராம் படத்திலும் வாலி நடித்திருப்பார்.


ஒருமுறை ஷூட்டிங்கெல்லாம் முடிந்ததும் வாலி தன் சிலேடைப் பேச்சால் ரகளை பண்ணிக்கொண்டிருந்தார். கிளம்பும்போது, வாலியிடம் பேப்பரையும் பேனாவையும் கொடுத்துவிட்டு, ‘எதுனா எழுதிக்கொடுங்களேன்’ என்று கமல் ஜாலியாகச் சொல்ல... சட்டென்று எழுதி, ஒரே நிமிடத்தில் கொடுத்தார் வாலி.


அது... ‘நீ கே.பி. வளர்த்தெடுத்த பேபி’ என்று எழுதியிருந்தார்.


தமிழ் அகராதியில் ‘நன்றி’ என்ற சொல்லுக்கு வாலி என்றும் அர்த்தம் இருக்கலாம். அப்படியொரு நன்றியுணர்வு மறக்காதவர் வாலி. ஆரம்பகாலத்தில், வாய்ப்பு தேடி அலைந்த தருணத்தில், சென்னை தி,நகர் சிவாவிஷ்ணு கோயிலுக்கு அருகில் உள்ள கிளப் ஹவுஸில், ரூம் எடுத்துத் தங்கியிருந்தார் வாலி. அவருடன் சேர்ந்து தங்கி, இருவருமாக சான்ஸ் தேடி அலைந்தார்கள். இருவருமே மிகப்பெரிய கோட்டை கட்டி, கொடி நாட்டினார்கள். அந்த இன்னொருவர் ... நாகேஷ்!


அதேபோல், ‘இவன் கவிஞன். நல்லா எழுதுவான். ஒரேயொரு பாட்டு வாய்ப்பு கொடுங்க. எங்கேயோ போயிருவான். அப்புறம் ஒருபாட்டு மட்டுமே தரமாட்டீங்க. எல்லாப் பாட்டுகளும் எழுதுங்கனு சொல்லுவீங்க’ என்று காலையும் மாலையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கவிஞர் வாலியையும் நம்பிக்கையையும் அழைத்துக்கொண்டு, சினிமாக் கம்பெனிகளில் ஏறி இறங்கியவரை, வாலி நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார். அவர்... நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்.


ஊக்கு விற்பவனை


ஊக்குவித்தால்


ஊக்கு விற்பவனும்


தேக்கு விற்பான்!


என்றொரு கவிதை, வாலி எழுதிய ஆட்டோ மொழி. இன்றைக்கு பல ஆட்டோக்களிலும் வாகனங்களிலும் அந்த வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன.


எல்லாவற்றுக்கும் மேலாக, திருச்சி ஐயப்பன் கோயிலில், கல்வெட்டுகளில் வாலியின் பாடல் ஒன்று, பொறிக்கப்பட்டு, பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ விருதுகளும் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் வாலியின் வாழ்க்கையில், இதுவே பூரணம்; பரிபூரணம்.


கோயிலில், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட அந்தப் பாட்டு என்ன தெரியுமா?


அம்மா என்றைழைக்காத உயிரில்லையே


அம்மாவை வணங்காது உயர்வில்லையே!


வாலிபக் கவிஞர் வாலியின் நினைவு தினம் இன்று (18.7.18). அவரையும் அவர் பாடல்களையும் இந்தநாளில் நினைவுகூர்வோம். வாலியின் புகழ் ஓங்கட்டும். தமிழ் உலகில், அவரின் பெயர், என்றும் நிலைக்கட்டும்!.


rom The Desk of கட்டிங் கண்ணையா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,