*சுதந்திரச் சுடர்கள்: வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின நள்ளிரவு*

 


*சுதந்திரச் சுடர்கள்: வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின நள்ளிரவு*



நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 14 – 15 நாள் களுக்கு இடைப்பட்ட அந்த நள்ளிரவு, சந்தேகமே இல்லாமல் நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். சுதந்திரமான இந்தியாவின் உதயத்தை அது உணர்த்தியது.


நாட்டின் சுதந்திரத்துக்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்தவர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய உச்சகட்ட நிலை அது.


பவித்திரமான வரலாற்றுத் தருணமாக மட்டும் அது அமையவில்லை, நம்முடைய சமூகத்தில் நிலவும் விநோதமான முரண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் நேரமாகவும் அது அமைந்திருந்தது.


துணிச்சலாக சிந்திப்பவர்கள் - மூடநம்பிக்கைகளுக்கு அடிமையானவர்கள், மிகுந்த நேர்மை மிக்கவர்கள் – ஊழல் செய்யும் தன்மை உள்ளவர்கள், தீவிரமான தனித்துவம் கொண்டவர்கள் – மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டே சாகசத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் ஆகியோரைக் கொண்டதுதான் நம்முடைய தேசிய ஆளுமை.


இந்தியாவுக்கான சுதந்திரத்தை இந்திய அரசமைப்பு அவையிடம் ஆகஸ்ட் 15 நள்ளிரவு வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானித்திருந்தது.


முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும்போது ஜோதிடர்களை ஆலோசிக்கும் வழக்கம் பிரிட்டிஷ்காரர்களுக்குக் கிடையாது. ஆனால், நல்ல நாள் பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர் டெல்லியில் இருந்தனர் (இப்போதும் இருக்கின்றனர்).


ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நட்சத்திரங்களின் இருப்பு எப்படி, அன்றைக்கு சுதந்திரம் பெறுவது எதிர்காலத்துக்கு நல்லதா என்று அவர்கள் பிரபல ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தினர். ‘ஆகஸ்ட் 15 சரியல்ல - ஆகஸ்ட் 14 தான் சுதந்திரம் பெறுவதற்கு மிகவும் உகந்த நாள்’ என்பதே அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து.


ஆனால், ஆகஸ்ட் 14-ல் பாகிஸ்தானுக்குத்தான் முதலில் சுதந்திரம் வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்துவிட்டதால் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு அன்றைய நாள் காலை கராச்சி நகருக்கு சென்றுவிட்டார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து பாகிஸ்தான் (கிழக்கு பாகிஸ்தானும் சேர்த்து) விடுதலை பெறுவதை அன்று காலை முறைப்படி அறிவித்துவிட்டு, பிற்பகலிலேயே விமானம் ஏறி அவர் டெல்லி வந்துவிட்டார்.


ஆனால், நட்சத்திரங்களின் சேர்க்கை சரியில்லாததால் சுதந்திரம் பெறுவதற்கான நாள் சரியில்லை என்கிற மிகப் பெரிய பிரச்சினைக்கு, அறிவாற்றல்மிக்கவரான சர்தார் கே.எம். பணிக்கர் மிக எளிதான தீர்வைக் கண்டறிந்து விட்டார் என்பதே என்னுடைய நினைவு.


மலையாள அறிஞரும் ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியவருமான பணிக்கர் இந்து மதத்தின் மறைபொருள்கள் பலவற்றைக் குறித்து ஆழ்ந்து கற்றவர், அத்துடன் நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவர்.


பிரிட்டிஷ்காரர்கள் குறித்த நாளை மாற்றாமலும், நட்சத்திர சேர்க்கையால் எதிர்கால இந்தியாவுக்கு எந்தவித தீமையும் வராமலும் இருக்க, தானொரு வழியைக் கண்டறிந்துவிட்டதாகக் கூறினார்.


இந்திய அரசமைப்பு அவையின் உறுப்பினர்கள் அனைவரும் நள்ளிரவுக்கு அரை மணி நேரம் முன்னதாக - அதாவது ஆகஸ்ட் 14 இரவு 11.30 மணிக்கே – அவையில் கூடிவிடுவார்கள். இதனால் நட்சத்திரங்கள் சாந்தியடைந்துவிடும்.


புதிய சுதந்திர இந்தியாவுக்கான விசுவாசப் பிரமாணத்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு அவர்கள் மேற்கொள்வார்கள், பிரிட்டிஷார் கணக்குப்படி அது ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கொடுத்ததாகிவிடும். இந்தத் தீர்வு எல்லோருக்கும் திருப்தியாக இருந்தபடியால், அதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கப்பட்டன.


கவலையும் வியப்பும்



அரசமைப்பு அவையின் இடைக்கால செயலாளராக நான் பொறுப்பு வகித்தேன். அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால் வரை பிரிட்டிஷ் இந்தியாவின் திட்டமிடல் – வளர்ச்சித் துறையின் செயலாளராக இருந்தேன்.


நான் செயலாளராக இருந்த துறையைக் கலைத்துவிடுவது என்று கவர்னர் ஜெனரல் முடிவெடுத்துவிட்டார் என்பதை ஒரு நாள் காலை பத்திரிகையைப் படித்தபோது தெரிந்துகொண்டு துணுக்குற்றேன்.


காலை உணவை முடித்துவிட்டு, அந்தத் துறையின் உறுப்பினரான சர் அக்பர் ஹைதரியைச் சந்தித்தேன். என்னுடைய வேலை போய்விட்டதே என்ற கவலையைத் தெரிவித்ததுடன், இப்படி என்னிடம் முன்கூட்டி சொல்லாமலேயே செய்துவிட்டார்களே என்கிற ஆதங்கத்தையும் கொட்டினேன்.


இதற்காக வருத்தப்படுவதாகக் கூறிய ஹைதரி, சுதந்திர நாள் நெருங்குவதால் அரசின் நடவடிக்கைகள் இப்படி திடீர் திடீரென எடுக்கப்பட வேண்டியிருப்பதாக சமாதானப்படுத்தினார்.


ஜின்னா எதிர்ப்பு


பாகிஸ்தானுக்குத் தலைவராகப் பொறுப்பேற்கவிருந்த முகமது அலி ஜின்னா, அப்போது வைஸ்ராயாக இருந்த வேவல் பிரபுவைச் சந்தித்தார். சுதந்திரம் வழங்கப்பட்ட பிறகு திட்டமிடல் – வளர்ச்சிக்கான துறை ஒரு நாட்டுக்காகச் செயல்படுமா அல்லது இரண்டு நாடுகளுக்கும் சேர்த்து செயல்படுமா என்று ஜின்னா கேட்டிருக்கிறார்.


ஒரு நாட்டுக்காகத்தான் (இந்தியா) என்றால், அது பாகிஸ்தானை பாரபட்சமாக நடத்துவதாகிவிடும். எனவே, இனி பிரிட்டிஷ் அரசுடன் சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தை களில் ஈடுபட மாட்டேன் என்று கண்டிப்பாக எச்சரித்திருக்கிறார்.


இதற்கு ஒரே தீர்வு அந்தத் துறையையே இத்துடன் மூடிவிடுவதுதான் என்று வேவல் பிரபு முடிவெடுத்துவிட்டார் என்பதை அறிந்தேன். இந்த வேலைக்குப் பதிலாக எனக்கு புதிய வேலை தர இரண்டொரு நாள்கள் பிடிக்கும் என்று ஹைதரி என்னிடம் கூறினார்.


புதிய பொறுப்பு


இந்தியாவுக்கான புதிய அரசமைப்பு அவையை உருவாக்கத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், புதிய அரசமைப்பை உருவாக்குவதுடன் அந்தப் பணி முடிக்கப்படும் வரை, அதுவே தேசிய சட்டப் பேரவையாக (நாடாளு மன்றத்துக்கு இணை) செயல்படும் என்றும் கூறிய ஹைதரி, அதன் நிர்வாக நடவடிக்கை களுக்குப் பொறுப்பாளராக என்னை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார். அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கத் தனியாக ஆலோசகர் பதவி ஏற்படுத்தப்பட்டது.


மிகச் சிறந்த நீதிமானான சர் பி.என். ராவ் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், அதிகம் யாருடனும் கலந்து பழகமாட்டார், எப்போதும் தன்னுடைய வேலையிலேயே மூழ்கியிருப்பார்.


அரசமைப்பு அவை தேவைப்படும் தகுதியான ஊழியர்களைத் தானே நியமித்துக்கொள்ளலாம் என்று சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்காலிக அடிப்படையில் நானும் பி.என். ராவும் நியமிக்கப்பட்டிருந்தோம்.


- கட்டுரையாளர், முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி. அரசமைப்பு வரைவுக்குழுச் செயலர், பிரதமருக்குத் தனிச் செயலர், உள்துறைச் செயலர், ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவி வகித்தவர்.


(‘தி இந்து’ ஆங்கில நாளிதழில்

15.08.1972-ல் வெளியான கட்டுரை)

நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம், கே.ஆர். நரேஷ் குமார், விபா சுதர்சன்

தமிழில்: வ. ரங்காசாரி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,