உங்க ஃபோனில் 5ஜி சேவை

 

உங்க ஃபோனில் 5ஜி சேவை பயன்படுத்த முடியுமா? எப்படி தெரிந்து கொள்வது?


இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.

ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல் ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது. ஏர்டெல் தனது 5ஜி சேவையை இம்மாத இறுதியில் (ஆகஸ்ட்) நாடு முழுவதும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனமும் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.


ஜி இணையசேவை இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி மொபைல் போன்கள் அதிகம் அறிமுகப்படுத்தி வருகின்றன. சாம்சங், மோட்டோரோலா, ஜியாமி, ரியல்மி உள்ளிட்ட பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஒன் பிளஸ் நிறுவனம் OnePlus Nord 5G, OnePlus 8 Pro 5G போன்ற போன்களை அறிமுகப்படுத்தியது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நிறைவடைந்த நிலையில், ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல 5ஜி பேண்ட்களை (அலைவரிசையை) ஏலம் எடுத்தன. 12 அலைவரிசைகளை நிறுவனங்கள் ஏலம் எடுத்தன.

5ஜி பேண்ட் பற்றிய விவரம்

முதல் மூன்று n28, n5, n8 பேண்ட்கள் குறைந்த அளவு ஸ்பெக்ட்ரம் பேண்ட். இது குறைந்த வேகத்தில் விரிவான கவரேஜ் கொடுக்கும். விளம்பரப்படுத்தப்பட்ட 5ஜி வேகத்தை விட மெதுவாக இருக்கும், ஆனால் 4ஜி சேவையை விட வேகமாக இருக்கும்.

அடுத்த ஐந்து பேண்ட்கள் n3, n1, n41, n78, n77, இது மிட் ஸ்பெக்ட்ரம் பேண்ட். வேகமாகவும், நீண்ட தூர கவரேஜூக்கு இடையே சமநிலை வகிக்கும். கடைசியாக உள்ள mmWave உயர்தர ஸ்பெக்ட்ரம் ஆகும். ஆனால் குறைந்த பகுதிகளில் மட்டும் சேவை வழங்க முடியும். இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வரவேற்பு பெறவில்லை. எனினும் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அதானி குழுவும் n258 பேண்ட் உரிமம் பெற்றுள்ளன. வணிக நோக்கங்களுக்காக B2B சேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

உங்கள் ஃபோனுக்கு எந்த பேண்ட் சிறந்தது?

ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போன் அனைத்து 12 பேண்ட்களையும் பயன்படுத்த முடியும். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் சிறந்த 5ஜி கவரேஜை உறுதி செய்யும். இந்தியாவில் மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள எட்டு பேண்ட்கள் (n28, n5, n8, n3, n1, n41, n77, n78) பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்யும். 5ஜி சிப்செட் உள்ள ஸ்மார்ட்போன்களில் 5ஜி இணைய சேவை பயன்படுத்த முடியும்.

ஐபோன் 13 சீரிஸ், நத்திங் போன் (1), ரியல்மி GT2 Pro, சாம்சங் Galaxy S22 சீரிஸ், ஒன் பிளஸ் 10T ஆகியவற்றில் பயன்படுத்த முடியும். இன்னும் சில நிறுவன போன்களிலும் 5ஜி பயன்படுத்த முடியும்.

உங்கள் போனில் எந்த பேண்ட்களை பயன்படுத்த முடியும் என்று தெரிந்து கொள்வது அவசியம். நல்ல கவரேஜ் உள்ள பேண்ட்கள் உங்கள் போனில் பயன்படுத்த முடியும் என்றால் 5ஜி சேவை எளிதாக கிடைக்கும்.

n5, n8 பேண்ட்கள் மெட்ரோ நகரங்களில் நன்கு வேலை செய்யலாம். தொலைதூர பகுதிகளில் 5ஜி கவரேஜில் சிக்கல்கள் இருக்கலாம். உங்கள் 5ஜி போனில் n28, n5, n8, n3, n1, n41, n77 போன்ற முக்கிய பேண்ட்கள் பயன்படுத்த முடியவில்லை என்றால் 5ஜி அனுபவத்தை முழுமையாக பெறமுடியாது.

உங்க போனில் எந்த பேண்ட் பயன்படுத்த முடியும் என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

பெரும்பாலான ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் 5ஜி பயன்பாடு குறித்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இல்லை என்றால் போன் பாக்ஸில் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி இல்லை என்றால் அல்லது பாக்ஸ் தொலைத்துவிட்டீர்கள் என்றால், உங்கள் போன் நிறுவனத்தின் இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். உங்கள் போன் மாடல் குறித்து தேடி ‘நெட்வொர்க்’ பகுதிக்கு சென்று உங்கள் போனில் எந்த 5ஜி பேண்ட் பயன்படுத்த முடியும். 5ஜி சேவையை போன் அனுமதிக்கிறதா என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


courtesy:https://tamil.indianexpress.com/


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி