ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) பிறந்த தினம் இன்று.
ஆகஸ்ட் 2,
பிரபல தமிழிசைக் கலைஞரும் சித்த மருத்துவருமான ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) பிறந்த தினம் இன்று.
திருநெல்வேலி மாவட்டத்தில் சாம்பவர்வடகரை என்ற சிற்றூரில் பிறந்தார் (1859). பங்களாச் சுரண்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பாட்டனார் தமிழ் மருத்துவர் என்பதால், இவரும் தமிழ் மருத்துவத்தில் பயிற்சி பெற்று, மருத்துவராகவும் பணியாற்றினார்.
மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை, இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கியது.
நாதஸ்வரம், ஆர்மோனியம், வீணை, பிடில் ஆகிய வாத்தியங்களை இசைப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ‘பரதரின் நாட்டிய சாஸ்திரம்’, ‘சாரங்க தேவரின் சங்கீத ரத்னாகரம்’ உள்ளிட்ட பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் பழந்தமிழ் இசை நூல்களையும் ஆழ்ந்து கற்றார்.
.தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என்ற இசை நூலாகத் தொகுத்து, 1917-ல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. சுமார் 1,400 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கான மூலநூலாக அமைந்துள்ளது.
ஆசிரியர், தமிழிசைக் கலைஞர், படைப்பாளி, சித்த மருத்துவர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ஆபிரகாம் பண்டிதர் 1919-ம் ஆண்டு தமது 60-வது வயதில் மறைந்தார்.
Comments