இமேஜ் பொறி
விருமாண்டி என்ற படத்தையும், இதே கதைக் களனைக் கொண்ட பருத்தி வீரனையும் எடுத்துக் கொள்வோம். உலக சினிமாவை அறிந்த கமல்ஹாசனின் ’ விருமாண்டி ’ ஒரு சராசரி கமர்ஷியல் படமாகவும், உலக சினிமா பற்றி எதுவுமே அறியாத அமீரின் ’ பருத்தி வீரன் ’ ஒரு கலைப் படைப்பாகவும் உருவானது எப்படி? சினிமாக்காரர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தையான அதிர்ஷ்டமா? இல்லை. கமல் மட்டும் அல்ல; எத்தனையோ ஆண்டுகளாக உலக சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த யாருமே அமீர் உருவாக்கியது போன்றதொரு கலைப் படைப்பை உருவாக்கியதில்லை என்பதுதான் நிஜம். அமீர் மட்டுமல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய பாரதிராஜாவும் கூட உலக சினிமா புத்திஜீவி அல்ல என்பதை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், தனக்கு இலக்கியமும் தெரியாது என்று மற்றொரு அதிர்ச்சியையும் தருகிறார் அமீர். மறுபடியும் பாரதிராஜா கதைதான். அவரும் சமகால இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் அல்ல. ஆனால் கமலுக்கு ஞானக் கூத்தனிலிருந்து மனுஷ்ய புத்திரன் வரை நண்பர்கள்.இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஒரு கலைப் படைப்புமே வெறும் அறிவினால் மட்டுமே உருவாகக் கூடியதல்ல. ’ அப்படியானால் வேறு என்ன தேவைப் படுகிறது? வாழ்க்கை பற்றிய கூரிய அவதானமா? ’ என்றெல்லாம் கேட்டால் எனக்குத் தெரியாது. ஏனென்றால் அது ஒவ்வொரு கலைஞனுக்கும் வேறு படுகிறது.
பருத்தி வீரனைப் போல் அல்லாமல் விருமாண்டி தோற்றுப் போனதற்கு மற்றொரு காரணம், கமலின் தன்முனைப்பு. விருமாண்டியில் மட்டும் அல்ல; கமலின் எல்லாப் படங்களிலுமே அவர் தன்னையே முன்னிறுத்திக் கொள்கிறார். அவரது படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்கள் அடிபட்டுப் போய் கமல்ஹாசன் என்ற பிரம்மாண்டமான நட்சத்திரமே நம் முன் ரூபமெடுக்கிறார். இதனாலேயே அவருடைய நோக்கம் வெற்றியடையாமல் போகிறது. ஹே ராம், ஆளவந்தான், தசாவதாரம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இதைத்தான் ஆரம்பத்தில் இமேஜ் பொறி என்று குறிப்பிட்டேன். இப்போது ரிதுபர்னோ கோஷுக்கு வருவோம். யாருக்குமே தெரியாத இந்த வங்காள இளைஞனின் இருப்பிடத்தை நோக்கி மும்பையிலிருந்து கொல்கொத்தா நோக்கிச் செல்கிறார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலக கேட்டைக் கூட ரிதுபர்னோ கோஷ் போன்ற ஒரு இளம் இயக்குனரால் தொட முடியுமா என்பது சந்தேகம்.கமலும் அவரது சகாவான ரஜினியைப் போலவே நடிகர் என்ற இடத்திலிருந்து நட்சத்திரம் என்ற தந்த கோபுரத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். 1978- ஆம் ஆண்டு தீபாவளி அன்று ஐந்து படங்கள் வெளியாயின. அதில் அவள் அப்படித்தான், சிவப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா? என்ற மூன்று படங்களில் கமல் ஹீரோ. ஆனால் அதே நாளில் வெளிவந்த பாலச்சந்தரின் தப்புத் தாளங்களில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் கமல் சோடா புட்டி கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளனாக வருகிறார். இதை கமல் அவரது குருநாதரான பாலச்சந்தருக்காக அப்போது செய்தார். இப்படி தனது ஹீரோ அந்தஸ்தைத் துறந்து விட்டு ஒரு நடிகனாக மட்டுமே கமல் இப்போது இதைச் செய்யத் துணிவாரா? அமிதாப் செய்கிறார்.மேலும் ஒரு விஷயம், கமலின் குருநாதர் பாலச்சந்தர் பற்றி. நேற்று வந்த ரிதுபர்னோ கோஷ் பற்றியும், ஷ்யாம் பெனகலின் சமீபத்திய படம் வெல்கம் டு சஜ்ஜன்பூர் பற்றியும், சந்தோஷ் சிவனின் தஹான் பற்றியும் உலக சினிமா அரங்கில் விவாதிக்கிறார்கள். காரணம், இவர்கள் சினிமாவை ஒரு கலையாக வெளிப்படுத்தியவர்கள். ஆனால் பாலச்சந்தர்? தமிழ்நாட்டுக்கு வெளியே யாருக்காவது இந்த இயக்குனர் சிகரத்தின் பெயர் தெரியுமா? பாலச்சந்தர் பற்றி 35 ஆண்டுகளுக்கு முன்னால் வெங்கட் சாமிநாதன் கூறினார், “பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சுதான் பாலச்சந்தர் ” என்று. இப்படிப் பட்ட ஒருவரை குருநாதராக வரித்துக் கொண்டு எங்கிருந்து சீரியஸ் சினிமாவை உருவாக்குவது?
-சாருநிவேதிதா
இந்தியா டுடேவில் 2007 இல் வந்த கட்டுரை
Comments