நினைவில் நூலகம் வைத்திருந்த பொக்கிஷம்.
கம்பனை
நெல்லைக் கண்ணன் பேசினார். கம்பன் இதைக் கேட்கவில்லையே என வருந்தினேன் .
திருக்குறள் , சங்கம், பக்தி இலக்கியம், பாரதி என்று தமிழின் நீள அகலங்களை அவர் உரை காட்டியது.
பாடலின் பொருள் கூறினார். உரை ஆசிரிய மரபின் ஆழ உயரங்களை அதில் அறிய முடிந்தது.
புலமை அவரது குரலைக் கடைசிவரை ஒரு கம்பீரத்துடன் வைத்திருந்தது.
மேடையில் குறிப்பின்றிப் பேசும் ஒரு சிலரில் ஒருவர். சொல்லேருழவர்.
சொல்லில் உயிர் குழைத்து அமுதூட்டிய மேதை.
நினைவில் நூலகம் வைத்திருந்த பொக்கிஷம்.
காலம் எனும் பேரியக்கத்தில் எல்லாவற்றுக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கிறதே.... அதை யார்தான் மறுக்க முடியும்?
நெல்லைக் கண்ணன் விடைபெற்றார் இன்று.
நினைவில் வாழ்வார் என்றும்.
அவர் குரல் ஒலி வட்டில் உறைந்திருக்கிறது. யூ ட்யூப் இல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த அலை ஓசை ஓயாது.
தமிழ்க் கடலை இந்த மரணம் மூடாது.
ஆழ்ந்த துயரத்துடன் அவரது அன்பர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். நண்பர் சுகாவின் கரம் பற்றிக்கொள்கிறேன்.
புறப்படும் கப்பலுக்குக் கரையில் நின்று கையசைக்கிறேன்.
*
- பிருந்தா சாரதி
*
Comments