ராஜ்கிரண்
ஹேப்பி பர்த் டே ராஜ்கிரண் சார்
நம்முடைய மனசு என்ன நினைக்கிறதோ அது தான் நிகழும். போராடினால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். நமக்கான இடம், நிச்சயம் நமக்காகக் காத்திருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் நடிகர் ராஜ்கிரணுடன் பொருத்திப் பார்க்கலாம். ரசிகர்களுக்கு சினிமா பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் சினிமா ஒரு வாழ்க்கை. சினிமா எத்தனையோ பெயரை வாழவைத்திருக்கிறது. அப்படி, சினிமாவால், சினிமாவுக்காக வாழும் நடிகர் ராஜ்கிரணுக்கு இன்று பிறந்த நாள்.
“சினிமா என்னுடைய லட்சியம். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றே ஊரிலிருந்து ஓடிவந்தேன்” என்கிற சீனெல்லாம் ராஜ்கிரணிடம் இல்லை. இராமநாதபுரத்துக் காரரான இவருக்கு நன்றாக படித்து ஐபிஎஸ் எழுதி போலிஸாக வேண்டும் என்பதே ஆசை. ஆனால், வீட்டில் சூழல் இவரை 16 வயதிலேயே வேலை செய்ய சென்னைக்கு அழைத்து வருகிறது. எங்கெங்கோ வேலை தேடிப் பிறகு, சினிமா விநியோக கம்பெனி ஒன்றில் பணியில் சேர்கிறார். 4.50 ரூபாய்க்கு தினக்கூலியாக வேலை. கொஞ்சம் கொஞ்சமாக சினிமா விநியோகத்தில் எக்ஸ்பெர்ட் ஆகிறார்.முதலாளிகளின் உதவியோடு தனியாக அலுவலகம் போட்டு, திரைப்பட விநியோக வேலையைத் துவங்குகிறார். 70களில் கோடம்பாக்கத்தில் ‘ஏசியன் காதர்’ என்றால் எல்லோருக்கும் தெரியும். இவர் படத்தை கையில் எடுத்தாலே வெற்றிதான் என பேசப்பட்டது. ஆனால், சரியாக நிர்வாகம் செய்ய முடியாமல் போக, எல்லாவற்றையும் இழக்கிறார். தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறார் ராஜ்கிரண்.
ராஜ்கிரண் முதலில் பணியாற்றிய முதலாளிகளே, மீண்டும் உதவி செய்கிறார்கள். இந்த முறை விநியோகம் இல்லை, படத்தைத் தயாரிக்க நினைக்கிறார். ஏசியன் காதர் ராஜ்கிரணாக அறிமுகம் ஆகிறார். ஏசியன் பிக்சர்ஸ் நிறுவனம், ரெட் சன் ஆர்ட் நிறுவனமாக உயிர்பெற்றது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தானே தயாரித்து, ஹீரோவாகவும் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர் மட்டுமல்ல, ஆல் டைம் காமெடி கிங்காக இருக்கும் வடிவேலுவை இந்தப் படத்தில் அறிமுகம் செய்ததும் இவர் தான். சமூகம் சார்ந்த எதாவது ஒரு கருத்தை தன்னுடைய படத்தின் மூலம் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பார் ராஜ்கிரண். குடி ஒருவனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்பதை சொல்லும் படமே என் ராசாவின் மனசிலே. இப்படி இவரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு கருத்து சார்ந்த கதை ஒன்றிருக்கும்.
விநியோகஸ்தராக சினிமா வாழ்க்கையை துவங்கியவர் தயாரிப்பாளராக சில படங்கள், பிறகு நடிகராக படங்கள் நடிக்க ஆரம்பித்தார். அடுத்த நகர்வாக, அரண்மனைக் கிளி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே என 90களில் சில படங்கள் நடித்தவரை, இன்னும் உச்சாணியில் கொண்டு வைத்தது 20களில் வெளியான சில முக்கிய படங்களே. அப்படி இவர் நடிப்பில் மிக முக்கியமான படம் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா. பெரியவர் கதாபாத்திரத்தில் உறுதியான நடிப்பைக் கொடுத்தார். ‘அக்கிரமத்தைப் பார்த்து கொதிச்சு எழுற அத்தன பேரும் சாமிதாண்ட’ என சூர்யாவுடன் இவர் பேசும் வசனங்களே அந்த உறுதியான நடிப்புக்குச் சான்று. அதே 2001ல் மீண்டும் ஒரு படம். நந்தாவில் பயமூட்டிய பெரியவராக வந்தார், அடுத்து பாண்டவர் பூமியில் சாதுவான மனிதர்.
சிம்புவுடன் ‘கோவில்’, விஷாலுடன் ‘சண்டக்கோழி’, விஜய்யுடன் ‘காவலன்’, தனுஷுடன் ‘வேங்கை’ என இந்தப் படங்களில் எல்லாமே, ஒரே மாதிரியான கேரக்டர் போல தோன்றும். ஆனால் எல்லாவற்றிலும் வித்தியாசமான நடிப்பு இருக்கும். தொடர்ந்து இந்தமாதிரியான கதாபாத்திரம் அவர் மீதான மதிப்பையும் உயர்த்தியதென்றே சொல்லலாம். நந்தாவின் பெரியவருக்கு, பாண்டவர் பூமி தனசேகருக்கு, சண்டக்கோழி துரை அய்யாவுக்கு என சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார். இவரின் கிராஃபில் எல்லா படங்களுமே, ஹிட் ரகம் தான். ஒன்று, படு சீரியஸான கேரக்டராக இருக்கும், இல்லையென்றால் ரொம்ப மிருதுவான ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இப்படி இரண்டு விதத்தில் நடித்தவரை சிரிப்பு வெடியாக ரசிக்க வைத்த படம் ரஜினிமுருகன். ரஜினிமுருகனும், அய்யங்காளையும் செய்த சேட்டைகளை மறக்க முடியாது.
ராஜ்கிரணுக்கு கிடைத்த அற்புத நிகழ்வு பா.பாண்டி படம் தான். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்த பா.பாண்டியில் ராஜ்கிரண் மீண்டும் ஹீரோ! வாவ்..!60 வயது முதியவர் படத்துக்கு ஹீரோவா? அதெப்படி சாத்தியமாகும். படமெல்லாம் தேறாது என்று நினைத்தவருக்கு ஒரு சர்ப்ரைஸ் அதிர்ச்சி.. பவர் பாண்டி பெரிய ஹிட். 60 வயதில் காதலிலும், ஆக்ஷனிலும், சென்டிமென்டிலும் என ஒட்டுமொத்தமாக படம் ரொம்பவே அழகாக வந்தது.
இப்படியான சினிமா ராஜ்கிரணுக்கு மட்டுமே கிடைத்த ஒன்று. படத்தில் தான் படு சீரியஸ். ஆனால் ரொம்ப சாந்தமான மனிதர். சினிமா இவரை உச்சாணிக் கொம்பிலும் வைத்தது, நடுத்தெருவிலும் நிறுத்தியது. ஆனாலும் சினிமாவை எப்போதும் காதலிப்பவர். ரசிகர்களுக்கு நல்ல படங்களைத் தந்தவர். இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்
Raj Kiran Raj சார்! From The Desk of கட்டிங் கண்ணையா!
Comments