விநோதமான விநாயகர்கள்*

 விநோதமான விநாயகர்கள்*


நன்றி குங்குமம் ஆன்மிகம்*பிள்ளையார் பட்டியைப் போலவே புதுக்கோட்டையில் உள்ள திருமயத்தை அடுத்த மலையக்கோயில் விநாயகர் ஆலயமும், மலையைக் குடைந்தே அமைக்கப்பட்டதாகும். இந்த மூலவரும் ‘கற்பக விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். கி.பி. 7ஆம் ‘நூற்றாண்டில் மகேந்திர வர்மப் பல்லவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.


*காஞ்சிபுரம் திருவோண காந்தன் தளி எனும் கோயிலில் கர்ப்பகிருக மண்டபத்தின் நுழைவாயில் சுவரில் விநாயகர் திருஉருவம் இருக்கிறது. இந்த விநாயகர் பக்கத்தில் சென்று காதை வைத்து கேட்டால் ‘ஓங்கார ஒலி’ கேட்கிறதாம்.


*ஸ்ரீ சைலத்தில் இருக்கின்ற விநாயகர் ஆலயத்தில், விநாயகர் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல் கையில் புல்லாங்குழலை வைத்து இசைக்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.


*வேலூர் கோட்டை ஜல கண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் குழந்தை வடிவில் காட்சி தருவதால் இவரை ‘‘குழந்தை விநாயகர்'' என்றே போற்றி வணங்குகிறார்கள்.


*அம்பாசமுத்திரத்தை அடுத்த காக்கையநல்லூர் என்ற ஊரில் உள்ள விநாயகர், வயிறு வெடித்த நிலையில் காட்சி தருவதால் இவருக்கு ‘வயிறு வெடித்த பிள்ளையார்’ என்று பெயர் விளங்கி வருகிறது.


*நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. இதனால் இவரை ‘‘நாகாபரணப் பிள்ளையார்’' என்று அழைக்கிறார்கள்.


*சேரன் மாதேவியில் உள்ள குகைகரைப் பிள்ளையாருக்கு மிளகு தடவி அபிஷேகம் செய்யும் வழக்கம் இருக்கிறது. பிள்ளையாருக்கு மிளகு தடவி அபிஷேகம் செய்தால், மழை வந்து தாமிரபரணி ஆற்றில நீர் பெருக்கெடுத்து ஓடும் என்பது ஐதீகம்! எனவே, இந்த விநாயகருக்கு ‘‘மிளகுப் பிள்ளையார்’’ என்று பெயர் வந்தது.


*இலங்கை கதிர்காமத்தில் உள்ள விநாயகருக்கு `முறிவண்டி விநாயகர்’ என்று பெயர். இவரை வணங்காமல் மாட்டு வண்டியில் போனால் அச்சு முறிந்து விடுமாம். இந்த கோயிலின் வழியாக செல்பவர்கள், வண்டியிலிருந்து இறங்கி பிள்ளையாரை வணங்கிவிட்டு செல்வார்கள்.


*திருவையாறு ஆலயத்தில் உள்ள பிள்ளையார் ‘ஓலமிட்ட விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். ஒரு நாள் இரவில் ஆற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடிவர, விநாயகர் ஓலமிட்டு ஊர் மக்களை எழுப்பி தப்பிக்க வைத்தாராம். இதனால் இவரை ‘ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கிறார்கள்.


*கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர் திருப்புறம்புயம் பிரளயம் காலத்தில் அழிவில் இருந்து, இந்த ஊரை விநாயகர் காத்ததாக வரலாறு. இதனால், இந்த விநாயகரை ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்று போற்றி வணங்குகிறார்கள். பிரளயம் காத்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தியன்று தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


*சிதம்பரத்தில் செங்கழுநீர் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர், ஒரு கை உடைந்த நிலையில் காட்சி தருவதால் இவருக்கு ‘கை உடைந்த பிள்ளையார்’ என்று ஒரு பெயர் உள்ளது. ஒருமுறை இந்த பிள்ளையாரை அகற்றி புதிய சிலை வைக்க பக்தர்கள் முயற்சி செய்த போது, ஊர்த் தலைவர் கனவில் பிள்ளையார் தோன்றி ‘‘உன் பிள்ளையின் கை உடைந்து விட்டால் வீட்டை விட்டு விரட்டிடுவாயா?’’ என்று கேட்டார். அதனால் புதிய சிலை வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.


*லால்குடியை அடுத்த அன்பில் என்ற ஊரில் உள்ள சிவாலயத்தில் இருக்கும் பிள்ளையாருக்கு ‘செவி சாய்த்த விநாயகர்’ என்று பெயர். பக்தர்களின் குறைகளை செவிமடுத்துக் கேட்டு தீர்த்து வைப்பதால் அவரை இப்படி அழைக்கிறார்கள்.


*ஆரணியை அடுத்த பழங்காமூர் என்ற ஊரில் குளக்கரையில் ஒரு விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் குளக்கரையில் புற்று ஒன்று உருவாகி அது பிள்ளையார் வடிவில் காட்சி தருகிறார். இதனால் இந்த விநாயகரை  ‘புற்று விநாயகர்’ என்று அழைத்து வணங்குகிறார்கள்.


*நாமக்கல் - சேலம் வழியில் ஒரு முருகன் கோயில் உள்ளது. இதன் அருகில், விநாயகர் ஆலயமும் இருக்கிறது. இந்த விநாயகர் சுயம்புவாக, திடீரெனத் தோன்றி காட்சி தந்தாராம். இதனால், இவருக்கு ‘மாயப்பிள்ளையார்’ என்ற பெயர் ஏற்பட்டது.


*நாகூரை அடுத்து, மூன்று மைல் தொலைவில் நரிமணம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் கோயிலில், விநாயகரின் தலையில் பக்தர்கள் குட்டி விட்டு வணங்குகிறார்கள். இதனால், இவருக்கு ‘குட்டுப்படும் பிள்ளையார்’ என்று பெயர் விளங்குகிறது.


*கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வடியில் ‘கணபதி அக்கிரஹாரம்’ உள்ளது. இங்குள்ளவர்கள் விநாயக சதுர்த்தி பூஜையை, கோயிலில் சென்றுதான் செய்கிறார்கள். மீறி வீட்டில் களி மண்ணில் பிள்ளையாரை வைத்து பூஜைசெய்தால், அங்கு பாம்பு வந்து தடுத்துவிடுகிறது!


*திருவொற்றியூர் தியாகேஸ்வரர் ஆலயத்தில், சிங்கவாகனத்தில் அமர்ந்தபடி பஞ்ச முகங்களோடு விநாயகர் காட்சி தருகிறார். அதேபோல், நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் ஆலயத்திலும் பஞ்ச முகங்களோடு விநாயகர் காட்சி தருகிறார்.


தொகுப்பு: த.சத்தியநாராயணன், அயன்புரம்...


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,