அண்ணா .சம்பத்
திரு.சம்பத் அவர்களும் நானும் ஒரு மனப்பட்டுப் பழகினோம். நாங்கள் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்த போது அண்ணா அவர்கள்தான் அதனை வரவேற்று, திருமண்ததை நடத்தி வைக்கிறவரை தனது இல்லத்துத் திருமணம் போலக் கருதி எல்லா ஏற்பாடுகளையும் நிறைவேற்றி வைத்தார்.
எங்கள் திருமணத்தை தந்தை பெரியார் அவர்களும் முத்தய்யா முதலியார் அவர்களும், அண்ணா அவர்களும் முன்னின்று நடத்தி வைத்தார்கள். அண்ணா அவர்கள் மிகவும் உரிமையோடு மாப்பிள்ளைத் தோழரைப்போல் எங்கள் திருமணத்தில் உரிமையோடும் செயல்பட்டதை இப்போதும் எண்ணி எண்ணி மகிழ்வதுண்டு.
எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது, குழந்தையோடு 10 நாட்கள் வந்து காஞ்சிபுரத்தில் தமது இல்லத்தில் தங்கியிருந்துவிட்டுச் செல்லலாம் என்று அண்ணா அவர்கள் அழைத்தார்கள். அப்படித் தங்கிவிட்டு புறப்பட்டபோது உனக்கு என்ன வேண்டும்! வாங்கித் தருகிறேன் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். எனக்கு சினிமா சூட்டிங் பார்க்க வேண்டும். இவரை பல முறை கேட்டு மறுத்து விட்டார் என்றேன். அதனைக் கேட்ட அண்ணா உடனேயே சென்னையில் நெப்டியூன் ஸ்டுடியோவுக்கு எங்களை அழைத்து வந்தார். போரறிஞர் அண்ணா அவர்களும், சம்பத் அவர்களும் நன்றாகவே சாப்பிடுவார்கள். இருவரும் ஒரே இலையில் உண்ட காட்சிகளும் உண்டு. இலையில் சம்பத் அவர்கள் எதை விரும்பி உண்பாரோ, அதையெல்லாம் அவருக்கே விட்டுவிட்டு, அவர் விரும்பாததை தாம் உண்டு, தம்பியை உண்ண வைத்து மகிழ்ந்த பாசமிகு காட்சிகள் இன்றும் இதயத்தில் நிழலாடி கண்களைப் பனிக்கச் செய்கின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள், சில நேரங்களில் கூட்டங்களுக்குச் சென்று திரும்பும்போது கோடம்பாக்கதில் (அப்போது குடியிருந்தோம்) எங்கள் வீட்டிற்கு வந்து, சாப்பிடுகிறேன், என்ன இருக்கிறது என்பார்.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி விட்டேன், எல்லாமே தீர்ந்து விட்டது, சமைத்துப் போடுகிறேன் என்பேன். சாததில் தண்ணீர் ஊற்றி விட்டால் என்ன? மோர் இருக்கிறதல்லவா? ஊறுகாய் இருக்கிறதல்லவா? போதும் வை என்று சாப்பிட்டு விட்டு பேசிவிட்டுப் போவார், என் பிள்ளைகளுடன், இப்படி பல சந்தர்ப்பங்கள்.
எனது துணைவர் சம்பத் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தில்லி தலைநகருக்கு வருகை தந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அங்கிருந்த எங்களது இல்லத்தில் பத்து நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார்கள். அப்போது தனது தம்பி (சம்பத் அவர்களைப்) பற்றி எவரிடமும் தெரிவிக்க முடியாத மனச்சுமையை, மனம்விட்டு என்னிடம் எடுத்துக் கூறுவார். தனக்கும், தன் தம்பிக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை மூட்டிவிடுவோர் மீது எச்சரிக்கையாக இருக்கச் செல்லி, என்னிடம் பல தகவல்களைச் சொன்னதுண்டு.
(ஈ.வெ.கி. சுலோசனா சம்பத்)
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments