*எதிரிகளின் தொல்லைகளை நீக்கும் உச்சிஷ்ட கணபதி*

 


*எதிரிகளின் தொல்லைகளை நீக்கும் உச்சிஷ்ட கணபதி*


திருநெல்வேலி - மணிமூர்த்தீஸ்வரம்


விநாயகப் பெருமான் எங்கும் இருப்பவர். அவரை எப்படி வேண்டும் என்றாலும் வணங்கலாம். நமது மனதுக்கு ஏற்ப அவர் நமக்கு அருள் தர தயாராகிவிடுவார். தெருமுனை, குளக்கரை, ஆற்றங்கரை, கோயில் கொட்டகை என எங்கும் இவர் நிறைந்திருப்பார். ஒரே ஒரு பூவைக்கொண்டு வழிபட்டாலும், அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்.


இதனால்தான் இவரை சிவன் கோயில் முழுவதும் மற்றும் கன்னி மூலையில் வைத்து அழகு பார்பார்கள். நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில், பல பெயர்களில் இவர் எழுந்தருளியுள்ளார். தாமிரபரணி நதிக்கரையில், பாண தீர்த்தம் என்ற இடத்தில் மட்டும் சித்தி புத்தி விநாயகராக காட்சியளிக்கும் இவரை, அதே தாமிரபரணி கரையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய உச்சிஷ்ட கணபதியாக சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே பிரதிட்சை செய்துள்ளார்கள்.


பிள்ளையாரை பற்றி கூறும் போது பாலும், தெளிதேனும், பாகும் பருப்பும் கலந்தளித்த அவ்வையார், இவருக்கு அகவலும் தந்தார். மும்மூர்த்திகளும், பரிதேவதைகளும், மகாயோகிகளும், சித்தர்களும் முதலில் விநாயகரை வழிபட்டே அவரவர் காரியங்களை தொடங்கி உள்ளனர். பண்டாசுரணின் கோட்டையை தகர்த்து எறிந்த அம்பிகைக்கு இவர்தான் உதவி செய்தார். சித்தி, புத்தி என்ற இரு தேவதைகளையும் கற்பித்து உபாசனைகள் செய்ய வழிவகுத்தவரும் இவரே.


மோகங்கள் எல்லாம் விலகி சித்திகள் பெற்று அறிவை வளர்க்கும் புத்தி, சித்தியோடு உபாசகர்கள் இவரை வணங்கி பிரம்மானந்தம் அடைகின்றனர். இவ்வாறு பிரம்மானந்தம் அடைந்தவர்களில் மணிக்கிரீவனும் ஒருவன். அந்த மணிக்கிரீவன் குபேரனின் மகன். முன்னொரு காலத்தில் சாவர்ண என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்போது, குபேரனுடைய புத்திரனாகிய மணிக்கிரீவன் என்பவன் அங்கு வாழ்ந்து வந்தான். அவன் எல்லா தர்மங்களும் அறிந்தவன். நீதிமான், சிவபக்தி மிகுந்தவன்.


அவன் விநாயகப் பெருமானிடமும் சுப்பிரமணியருடனும் சகோதரரை போல பழகுவான். ஒரு நாள், அவன் ஒரு நந்தவனத்தை கண்டான். அந்த நந்தவனம் பார்ப்பதற்கு அழகாகவும், மனதுக்கு இனிமையாகவும் இருந்தது. அங்கு கந்தர்வராஜாவான சித்ரசேனன் என்பவனின் மகளாகிய சித்ரலேகாவை பார்த்தான். அவள் மிகுந்த அழகுடையவள். ஆனால், மணிக்கிரீவனை பார்த்ததும், அழகில் மயங்கினாள் சித்ரலேகா.


அவள் மணிக்கிரீவனிடம் காதல் கொண்டாள். உடனே அவனை பார்த்து, ‘‘நான் உங்கள் அழகில் மயங்கி விரும்புகிறேன். நீங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றாள். அவளுடைய முறையீட்டை கேட்ட மணிக்கிரீவன், ‘‘அம்மா உன் ஆசை சரிதான். உன் தகப்பன் அனுமதி இல்லாமல் நான் உன்னை ஏற்றுகொள்ள மாட்டேன்’’ என்றான்.


அதை கேட்ட சித்ரலேகா, ‘‘நான் எனது தகப்பனார் அனுமதி பெற்று வரும் வரை நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும்’’ என்று கேட்டாள். அதற்கு மணிக்கீரிவன் சம்மதித் தான். உடனே அரசவைக்கு வந்தாள் சித்ரலேகா. தன் தந்தையிடம் விருப்பத்தை தெரிவித்தாள். மிகுந்த மகிழ்ச்சியடைந்த கந்தர்வராஜன் தங்களுடைய உறவினர்களையும் மகளையும் அழைத்து கொண்டு மிகுந்த சந்தோசத்துடன் மணிக்கிரீவனை நோக்கி வந்தார். அந்த வனத்திலேயே திருமணத்தை நடத்திவைத்தார்.


நாட்கள் கடந்தன. தம்பதிகள் வாழ்க்கை முறையாக நடத்திக்கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் மற்றுமொரு பெண் வடிவத்தில் மணிக்கிரீவனுக்கு சோதனை வந்தது. மற்றொரு கந்தர்வனின் மகளாகிய லீலாவதி என்பவள் மணிக்கிரீவனை சந்தித்தாள். அவன் அழகில் மயங்கினாள். உடனே அவனிடம் வந்து, ‘‘நானும் உன் அழகில் மயங்கியவள். என்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்’’ என்றாள்.


மணிக்கிரீவன் மறுத்தான். உடனே லீலாவதிக்கு கோபம் வந்தது. ‘‘என்னை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க உன் அழகு தானே காரணம். எனவே உன் அழகு அழியட்டும்’’ என்று அவனை சபித்துவிட்டாள். சாபம் காரணமாக மணிக்கிரீவனுக்கு அழகு அழிந்தது. அதிர்ச்சியடைந்த மணிக்கிரீவனும் ‘‘ஆணவம் பிடித்த உன் அழகு அழியட்டும்’’ என்று லீலாவதியை சபித்தான்.


இதனால் அவளுடைய அழகும் மறைந்தது. ஆனாலும் மணிக்கிரீவன் என்ன செய்வது என்று தெரியாமல் விநாயகரை நோக்கி வணங்கி நின்றான். எனக்கு ஏற்பட்ட இந்த பிரச்னை தீர்க்க வழி எதுவும் உண்டா? சாப விமோசனம் எனக்கு கிடைக்குமா? என்று அவரைநோக்கி மானசீகமாக கேட்டான். மணிக்கிரீவன் அன்பில் கட்டுப்பட்டவரான விநாயகப் பெருமான், அங்கு வந்தார். மணிக்கிரீவனின் நிலையை பார்த்தார்.


உடனே அவனுக்கு சாபவிமோசனம் கூறினார். ‘‘நீ இனி வருத்தப்பட வேண்டாம். தட்சிண பாரதத்தில் என் தாய், தாமிரபரணி என்னும் மகா நதியாக ஓடுகிறாள். அங்கு ஸ்நானம் செய்து, அங்குள்ள காலபைரவரை பூஜித்தால் உன் சாபம் தீரும். அருவருப்பு நீங்கி பழைய வடிவம் பெறுவாய்’’ என்றார்.

‘‘உன்னை அடைய வேண்டும் என்று நினைத்த லீலாவதிக்கும் அந்த சமயத்தில் சாபவிமோசனம் கிடைக்கும். சித்ரலேகாவுடன் இருக்கும் நீ லீலாவதியையும் திருமணம் செய்து கொண்டு நீங்கள் மூவரும் குபேரப்பட்டினத்திற்கு சென்று வாழ்வீர்கள்’’ என்று கூறினார்.


பின் தனது தும்பிக்கையால் மூவரையும் தூக்கி தாமிரபரணியில் சேர்த்தார். தாமிரபரணியில் ஸ்நானம் செய்த உடனேயே கால பைரவரும், விநாயகப் பெருமானும் மூவருக்கும் காட்சி தந்தார்கள். உடனே அவர்களுடைய சாபம் நீங்கியது. பின் விநாயகபெருமானின் உத்தரவின் படி மணிக்கிரீவன் லீலாவதியை திருமணம் செய்து கொண்டான். பின் அந்த மூன்று பேரையும் விநாயகப்பெருமான், குபேரபட்டிணத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த சாப விமோசனம் நடந்த இடம்தான் மணிமூர்த்திஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.


மணிக்கிரீவனுக்கு மூர்த்தியாக விமோசனம் கொடுத்த காரணத்தினால் இந்த பெயர் ஏற்பட்டது. தாமிரபரணியில் மூவரும் மூழ்கிய இடத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளது. அவை பைரவ தீர்த்தம், மணிக்கிரீவ தீர்த்தம், விக்னேஷ்வர தீர்த்தம் என அழைக்கிறார்கள்.  இந்த கோயிலில் தாமிரபரணியை நோக்கி 5 அடுக்கு ராஜ கோபுரம் உள்ளது. மிடுக்காக இருக்கும் இந்த கோபுரத்தில் பல வகையில் பிள்ளையார் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார். கோயிலுக்குள் நுழைந்தால், அங்கே முன்மண்டபம் மற்றும் கர்ப்பகிரகம் தெரிகிறது. இங்கு உச்சிஷ்ட்ட கணபதிதான் பிரதானம்.


பிள்ளையார் பக்கத்தில் மற்றுமொரு கருவறையில் சிவலிங்கப் பெருமான் உள்ளார். இச்சிவனை உளியை கொண்டு செய்த காரணத்தினால், உளிபட்ட சிவமேனி சித்த பீடம் என்று அழைப்பர். இந்த கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டு, நாயக்க மன்னர் காலத்தில் விஸ்தரிக்கப்பட்டது. இந்த கோயில் கட்டப்பட்டு 900 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இங்கு பிள்ளையாருக்கு ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் நடக்கும்.


சித்திரை மாதம் 1,2,3 ஆகிய தினங்களில் சூரியன் ஒளி விநாயகர் மீது படுகிறது. இது சூரிய பகவானே நேரடியாக விநாயகரை வணங்குவதாக ஐதீகம். தாமிரபணி ஈசான மூலையில் அமைந்த ஒரே விநாயகர் கோயில் இது தான். தமிழ்நாட்டிலே உச்சிஷ்ட கணபதிக்கான முக்கிய ஆலயமும் இதுதான். கணபதியோடு சேர்ந்த இந்தப் பெண் தெய்வத்தை நீலசரஸ்வதி அல்லது  நீலவாணி என்றும் சிலர் கூறுகின்றனர்.


தாமிரபரணியில் உள்ள மூன்று தீர்த்த கட்டங்களில் தீர்த்தமாடி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதியை வணங்கினால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பைரவரின் மகிமையால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். கல்வி ஞானம், செல்வம், முக்தி போன்றவைகள் பெருகும்.


இந்தக் கோயில், நெல்லை சந்திப்பில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பைபாஸ் ரோட்டிலிருந்து வடகிழக்கில் 1 கி.மீ தூரத்தில் உள்ளது. மேலும், நெல்லை -  குறிச்சிகுளம் சாலை வழியாக பைபாஸ் சாலையை இணைக்கும் இடம் வழியாகவும், இந்த கோயிலுக்கு செல்லலாம். நெல்லை சந்திப்பில் இருந்து ஆட்டோ வசதி மட்டுமே உண்டு.


முத்தாலங்குறிச்சி காமராசு...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,