கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவு நாள்
இன்று ஆகஸ்ட் 7 - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும். தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவு நாள். . கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. இவர் பள்ளிப்படிப்பை திருக்குவளையிலும், பின்னர் திருவாரூரிலும் பயின்றார். இளம் வயதில் பல்வேறு தமிழ் தலைவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார் கருணாநிதி. இவரால் துவங்கப்பட்ட மாணவநேசன் என்னும் இதழ் ,தற்போது முரசொலி என்னும் நாளிதழாக உருவெடுத்துள்ளது.
இந்திய அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் தலைவர் ஆவார். முத்துவேல் கருணாநிதி 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் முதல்வராக பதவி வகித்த காலங்களில் தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்த சாதனையாளர். இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதி காத்த சமத்துவச் செம்மல், மக்கள் நல திட்டங்கள் பல தந்த தமிழினத் தலைவர், தமிழருக்காகவும் தமிழகத்திற்காகவும் தன் வாழ்நாளை செலவழித்தவர். அவர் ஓர் ஆற்றல் மிகுந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், தத்துவஞானி, கொடை அளிப்பவர், நாடகக் கலைஞர் மற்றும் நடிகராகவும் இருந்தவர். மு கருணாநிதி அவர்கள், தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே அழைக்கப்படுகின்றார். இவர் 2018 ஆகஸ்ட் 7 ஆம் நாள் தம்முடைய 94 ஆம் அகவையில் மறைவுற்றார்
Comments