எனக்கு `சொல்லின் செல்வர்' பட்டம் ஏன்?'' - - - -கிருபானந்த வாரியார்

 


னக்கு `சொல்லின் செல்வர்' பட்டம் ஏன்?'' - - - -கிருபானந்த வாரியார்

மல்லையதாசர், கனகவல்லி தம்பதிக்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்தவர் காங்கேயநல்லூர் கிருபானந்த வாரியார். தந்தையே இவரின் கல்வி குரு. 8 வயதில் கவி பாடி, பன்னிரு வயதில் பதினாயிரம் பண்களை மனப் பாடம் செய்து, பதினெட்டு வயதில் சொற்பொழிவு வித்தகராக உருவானார்.
வாரியார் சுவாமிகள், அவையறிதலில் பரமஞானி. யாருக்குத் தக்கன என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என நொடியில் கணித்துவிடும் திறன், இறையருளால் இவருக்குக் கிடைத்திருந்தது. தீவிரமான முருக பக்தர். ஆன்மிக எழுத்தாளரும்கூட. `திருப்புகழ் அமுதம்' எனும் திங்கள் இதழை நடத்திவந்தார். 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சொன்ன குட்டிக் கதைகள், பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு என 150-க்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார். எல்லோராலும் அறியப்பட்டவர், சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார்தான். `சைவ சித்தாந்தம்', `பக்திநெறி', `இறையருள்' பற்றி மணிக்கணக்கில் பிரசங்கம் நிகழ்த்தி எப்பேர்ப்பட்டவரையும் ஈர்த்துவிடும் திறன்கொண்டவர். இசைப் பேரறிஞர் என்பதால், தேவாரம், திருமந்திரம், திருப்புகழ் என பக்திச்சுவை சொட்டும் பதிகங்கள் பாடியும், அவற்றை விளக்கியும் மெய்யன்பர்களுக்கு ஆசியுரை வழங்குவார்.
அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே அந்தக் காலத்தில் இல்லை. இப்போது நாம் சொல்லுகிற `டைமிங்' என்பதன் மொழிவடிவம்தான் வாரியார் சுவாமிகளின் உரை. ஒருமுறை மேடையில் வாரியார் சுவாமிகள் பேசிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், கூட்டத்திலிருந்து சிலர் எழுந்து செல்லத் தொடங்கியிருக்கின்றனர். அதைப் பார்த்துவிட்ட சுவாமிகள், தான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு இடைவேளை விட்டு, ``எனக்கு எதுக்காக `சொல்லின் செல்வர்' பட்டம் கொடுத்தாங்கன்னு, தெரியுமா? பட்டம் வாங்கும்போது புரியலை, இப்போ தெளிவா விளங்குது" என்று கூறியிருக்கிறார்.
கூட்டம் திருதிருவென விழித்திருக்க. சுவாமிகளே தொடர்ந்திருக்கிறார். ``நான் பேசிக்கொண்டிருக்கிறேன், அவர்கள் புறப்படுகிறார்களே. `நான் சொல்லின், அவர் செல்வர்'. அதைக் குறிப்பிட்டுத்தானே எனக்கு அந்தப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள்'' என சுவாமிகள் சொன்னதும் கூட்டம் முழுவதிலும் சிரிப்பலை. இந்தத் தகவலை வாரியார் நினைவு பகிர்தலின்போது பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறியிருக்கிறார். நகைச்சுவையை தேவைப்படும் இடங்களில் மட்டும் நறுக்காகப் பயன்படுத்துவதில் வல்லவர், வாரியார் சுவாமிகள்.
1993-ம் ஆண்டு லண்டன் பயணம் முடித்து தமிழகம் திரும்பும்போது, இதே நாளில் விமானத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவரின் சொற்பொழிவுகள் 80-க்கும் அதிகமான குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. அதைக் கேட்க, செவிக்கும் மனத்துக்கும் இன்பம் உறுதி.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,