திருச்சிற்றம்பலம் / என் பார்வையில்/ திரைப்பட விமர்சனம்/அனிதா சந்திரசேகர்

 


திருச்சிற்றம்பலம்  :


என்  பார்வையில்/ திரைப்பட விமர்சனம்

BY அனிதா சந்திரசேகர்

 ஹீரோயிசம் என்ற வழக்கமான சினிமாத் தனம் இல்லாமல் நம் பக்கத்து வீட்டு பையன் போல் முதல் காட்சியிலே  என்ட்ரி ஆகிறார் தனுஷ்...உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாயாக திருச்சிற்றம்பலம் எனும் கேரக்டரில் வரும் தனுஷ் தாத்தாவுடன் கிண்டலடித்துக் கொண்டே தோழமையாக இருப்பதும், அவ்வப்பொழுது கோபக்கார அப்பாவுடன் மோதலும், தோழியுடன் கேலியும் கிண்டலும், இரண்டு காதல் நிராகரிக்கப்பட்ட ஏமாற்றத்தால் புலம்பலும் என ஹீரோயிசம் இல்லாத நடுத்தர குடும்பத்து பையனாக தன் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் தனுஷ். இது தான் தனுஷுற்கான களமும் கூட.. இப்படியான தனுஷை தான் அனைவருக்கும் ஏனோ பிடித்தும் போகிறது...


படத்தின் மிகப்பெரிய பலமே கதாபாத்திர தேர்வுகள் தான்.அனைவருமே அவரவருக்கான கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தது மட்டுமில்லாமல் கச்சிதமாக பொருந்தியுள்ளனர்..

தனுஷின் அப்பாவாக  வரும் பிரகாஷ் ராஜ், இன்ஸ்பெக்டராக, மகனுக்கு அப்பாவாக, தந்தைக்கு மகனாக சில செண்டிமெண்ட் காட்சிகளிலும்  தனக்கான கேரக்டரில்  சிறப்பாக நடித்துள்ளார்.


 மகனுக்கும் பேரனுக்கும் இடையில் அல்லாடும் பாரதிராஜாவின் உடல் மொழியும், பேரனுக்கு அடிக்கடி வாழ்க்கையின் பரிமாணங்களை புரிய வைக்கும் தாத்தாவாகவும், ஹியூமர் காட்சிகளில் சிரிக்க வைப்பதும் என அவருடைய ரசிக்க வைக்கும் பாவனைகளும் வெகு சிறப்பு.


படத்தின் மிகச் சிறந்த அம்சமே நித்யா மேனன்( ஷோபனா) தான். பார்ப்பது, சிரிப்பது, சேட்டைகள்,நட்பு, காதல் என ஒவ்வொரு காட்சியிலும் தன் வசீகரிக்கும் நடிப்பால் அனைவரையும் வசியம் செய்து விடுகிறார் நித்யா மேனன்.தனக்கு இப்படி ஒரு தோழி இல்லையே என 90's கிட்ஸ் ஏங்கும் கனவுத் தோழியை கண்முன் காட்டியிருக்கிறார் , தன்னுடைய மிக இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்து முழு படத்தையும் தாங்கி இருக்கிறார் ஷோபனாவாக.


தனுஷுக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் எதார்த்தமான நட்பும்,மனதில் காதலை ஒளித்துக் கொண்டு அதை வெளிக்காட்டாமல் மறைக்கும் காட்சிகளும்,சில சேட்டைகளும் , சிறு வயது முதல் உடனிருக்கும் தோழனை பிரிந்து செல்லும் போது ஏர்போர்ட்டில் கடைசி நிமிடம் வரை ஏங்கித் தவிக்கும் தவிப்பும், கிளைமாக்ஸில் பொங்கி அழும் அழுகையும் என நடிப்பில் தனுஷையும் மிஞ்சியே விட்டார் நித்யா மேனன்.


" காதலா...!! நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்ட" என கூறிச் செல்லும் தனுஷின் ஸ்கூல் கிரஷ், ஹை பை பெண்ணாக வரும் ராஷி கன்னாவும், "நாம ஏன் டச்சுல இருக்கனும்" என அப்பாவியாக கேக்கும் கிராமத்து பெண்ணாக வரும் பிரியா பவானி சங்கருக்கும் அதிக நடிப்பில்லை என்றாலும் தனக்கு கொடுக்கப் பட்ட கேரக்டரில் மனதில் நிற்குமளவிற்கு நடித்தே இருக்கிறார்கள்.


அனிருத் இசையில் "தாய்க் கிழவி " பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கிறது என்றால் , "மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே " பாடல்  மனதை வருடுகிறது. படத்தில் திரைக்கதையும் , கதாபாத்திரங்கள் தேர்வும் அவர்களின் தேர்ந்த நடிப்பும் என பிளஸ் நிறைய இருந்தாலும் அப்பா மகனுக்கான பத்து வருட பகைக்கான காரணம் வலுவானதாக இல்லாதது ஒரு மைனஸ் எனலாம்.


பிரமாண்டம் ஏதுமின்றி ஒரு எளிமையான கதையை, சுவாரஸ்யமான திரைக்கதையால் வலிமையானதாக்கி எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகர்த்தி ,ஒரு எதார்த்தமான குடும்பக் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மித்ரன்.


ஆண்களின் சொல்லப் படாத காதலை மட்டுமே அதிகம் சொல்லியிருக்கும் தமிழ் சினிமாவில் பெண்களின் சொல்லப் படாத,மறைக்கப் பட்ட ஒரு காதல் கதையாக சுவாரஸ்யமும், காதலுமாக  ரசிக்க வைத்திருக்கிறது திருச்சிற்றம்பலம் ❤️


-- அனிதா சந்திரசேகர்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,