முதுமை தழுவல்/கவிதை./தீபா ஶ்ரீதரன்
முதுமை தழுவல்
உதிர்ந்த பல்லின் வெண்மை
கூந்தலில் படர்ந்து சிரிக்க
அழிந்த உள்ளங்கை ரேகை
முகத்தில் கோலம் வடிக்க
தேய்ந்த முழங்கால் எலும்பு
முதுகில் முண்டிக் கிடக்க
வடிந்த கன்னத்தின் சதை
கண்களில் பார்வை மறைக்க
மறந்த நினைவின் அலை
இமைகளில் தேங்கித் தவிக்க
அடங்கிய குரலின் வன்மை
நரம்புகளாய் புடைத்து நிற்க
இழந்தது ஒன்றும் இல்லை
இடம் மட்டும் பெயர்ந்து கிடக்க
முதுமை அவலம் இல்லை
மனதைத் தளர்த்தி வைக்க
தடியெடுத்து நடக்கும் போதும்
அனுபவங்கள் வழி நடத்தும்
அனுபவங்கள் சேர்த்து வைக்க
இளமையை முதலிட வேண்டும்
எல்லைகள் தாண்ட வேண்டும்
தாண்டையில் வீழல் வேண்டும்
வீழ்ந்தும் தேடல் வேண்டும்
தேடலில் வலிகள் வேண்டும்
வலிகள் உணர்த்த வேண்டும்
உணர்கையில் அச்சம் வேண்டும்
அச்சம் துறக்க வேண்டும்
துறக்கையில் முதிர்ச்சி வேண்டும்
முதிர்ந்ததும் விதைக்க வேண்டும்
விதைத்தபின் முதுமை வேண்டும்
முதுமையைத் தழுவல் வேண்டும்
தழுவையில் ரசித்தல் வேண்டும்
ரசிக்கையில் இளமை முளைக்கும்
இழந்தது ஒன்றும் இல்லை
இடம் மட்டும் பெயர்ந்து கிடக்க
முதுமை அவலம் இல்லை
மனதை தளர்த்தி வைக்க!
-தீபா ஶ்ரீதரன்
Comments