என்னத்த கண்ணையா! 


20 ஆண்டுகளுக்கும் மேலாக கோடம்பாக்கம் வீதிகளில் வாய்ப்புக்காக அலைந்து திரிந்த காமெடி நடிகர்..!

என்னத்த கண்ணையா! 


இன்று இவருடைய நினைவு நாள்! 


காமெடி நட்சத்திரங்களில் சிறந்த நகைச்சுவை நடிகர் இவர். இவரது பிரபலமான வசனம் வரூம்…ஆனா…வராது…என்பதுதான். இந்த டயலாக்கை வடிவேலுவுடன் இணைந்த காமெடியில் தான் சொல்வார். இது இளைஞர்கள் மத்தியில் இன்று வரை ட்ரெண்ட் செட்டாக மாறிவிட்டது.


இவர் சிவாஜி காலத்திலேயே காமெடி நட்சத்திரமாக அறிமுகமாகி விட்டார் என்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அப்போதே புது வித பாணி, டயலாக்கில் ஏற்ற இறக்கம் என தனக்கே உரித்தான ஸ்டைலில் பேசி அசத்தினார். அவருக்கான ரோல் சின்னதாக இருந்தாலும் அதிலும் தனி முத்திரையைப் பதித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்வதில் வல்லவர். அவர் தான் என்னத்த கண்ணையா.


மதுரை மாவட்டம் அய்யாப்பட்டியில் 1924ல் பிறந்தார் என்னத்த கண்ணையா. சிறுவயதில் இருந்தே நடிப்பின் மேல் அளவு கடந்த ஆர்வத்துடன் இருந்தார். வைரம் நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களில் நடித்தார்.


ஒருமுறை இவரது நடிப்பைப் பார்த்த பட்சிராஜா படக்கெம்பெனியாருக்கு இவரது நடிப்பு மிகவும் பிடித்து விட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவருக்கு மாதச்சம்பளம் கொடுத்து படங்களில் நடிக்க வைத்தனர்.


1949ல் பி.யு.சின்னப்பா தேவர், எம்ஜிஆர் இணைந்து நடித்த ரத்னகுமார் படத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்தார். இது தான் அவர் அறிமுகமான படம். 1950ல் வெளியான ஏழை படும் பாடு படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்து தன்னை அடையாளப்படுத்தினார். 1955ல் இருந்து சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கினார். பொன்னி, தூக்கு தூக்கி, சதாரம் ஆகிய படங்களில் நடித்தார்.


1957ல் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான முதலாளி படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்தப்படத்திற்குப் பிறகு இவரை முதலாளி கண்ணையா என்றே அழைத்தனர். தொடர்ந்து மரகதம், பாசம், அறிவாளி, இரத்தத்திலகம், கருப்பு பணம் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார்.


1967ல் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான நான் படம் தான் இவருக்கு திருப்புமுனையானது. ராமண்ணா தயாரித்து இயக்கிய இந்தப்படத்தில் ரவிச்சந்திரன் ஜோடி ஜெயலலிதா. வெள்ளிவிழா கண்டது படம். இந்தப்படத்தில் கண்ணையா எதற்கெடுத்தாலும் விரக்தியாக என்னத்த வந்து…என்னத்த போயி…ன்னு சொல்லிக்கொண்டே இருப்பார். இதுதான் அவரது பெயர்க் 

காரணமானது.


ராமண்ணா இயக்கத்தில் வெளியான மூன்றெழுத்து படத்தில் இவர் தான் வில்லன். எம்ஜிஆருடன் ஒளிவிளக்கு, நம்நாடு, இதய வீணை, கண்ணன் என் காதலன், ரகசிய போலீஸ் 115 மற்றும் சிவாஜியுடன் சொர்க்கம், வீரபாண்டியன், மருமகள் உள்பட பல படங்களில் நடித்து அசத்தினார்.


1980களுக்குப் பிறகு பாரதிராஜா, மகேந்திரன், கே.பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன் போன்ற இயக்குனர்களின் வருகைக்குப் பின்னர் இவருக்கான வாய்ப்புகள் குறைந்தன.


இவருக்கு படப்பிடிப்பின்போதே ஸ்பாட் டயலாக் பேசும் திறன் உண்டு.


250 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். எம்ஜிஆரின் மனம் கவர்ந்த நாயகர்களில் இவரும் ஒருவர். எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,