நடிகர் டி.எஸ்.பாலையா பிறந்த நாளின்று..




நடிகர் டி.எஸ்.பாலையா பிறந்த நாளின்று..
குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா.
தென்னகத்தின் ஆக்ஸ் போர்ட் நகரமான திருநெல்வேலி தந்த எத்தனையோ கலைஞர்களில் பாலையா குறிப்பிடத் தக்கவர். திருநெல்வேலி சுப்ரமண்யம்பிள்ளை பாலையா என்கிற பெயரைதான் பின்னாளில் திரைக்காக டி.எஸ் பாலையா என்று சுருக்கி வைத்துக் கொண்டார். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். இவர் திரைக்கு வந்த கதையே வலியும் அதன் பின்னணியில் வலியான நகைச்சுவையும் (பிளாக் கமெடி) நிறைந்த ஒன்று.
ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒருநாள். சர்க்கஸ் பார்க்க போனார் பாலையா. அங்கு நடந்த வீரசாகச விளையாட்டுகள் அவரை வெகுவாக கவர்ந்துவிட்டன. சர்க்கஸில் சேர்ந்து புகழ்பெறவேண்டும் என்று விரும்பினார். நண்பர்களிடம் ஆலோசனை கேட்டபோது, ‘எனக்குத் தெரிந்தவர் சர்க்கஸ் கம்பெனியில் இருக்கிறார். உன்னை நான் சேர்த்துவிடுகிறேன்.. ஆனா அதுக்கு கொஞ்சம் செல்வாகுமே’ என்றான் ஒருவன். உடனே டி.எஸ். பாலையா ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக திருடி, அப்பாவின் சட்டைப்பையிலிருந்து ஒரு நல்ல தொகையை சேகரித்துவிட்டார். ‘மதுரைக்குப் போகவேண்டும்’ என்றான் நண்பன். போய்ச் சேர்ந்தார்கள். அவனுக்கு பலகாரம் வாங்கிக்கொடுப்பதே முக்கியமான வேலையாக இருந்தது. பாலையாவை அங்குமிங்கும் அலைக் கழித்த நண்பன், ‘நாம தேடி வந்தவரு இந்த ஊர்ல இல்ல, மானாமதுரைக்குப் போனா பாக்கலாம்’ என்றான். பேருந்தில் ஏறி உட்கார்ந்திருக்கும் போது உள்ளூர்க்காரர் ஒருவர் பையன்களைப் பார்த்து, என்ன, ஏது என்று விசாரித்திருக்கிறார். இரண்டுபேரும் வேறுவேறு காரணம் சொன்னதால், அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. பாலையாவின் டவுசர் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தபோது, நிறைய பணம் இருப்பது தெரிந்தது. ‘அப்பாவிடம் சொல்லாமல் இருக்கணும்னா எனக்கு கள்ளு குடிக்க காசு கொடு’ என்று வாங்கிக்கொண்டு பையன்களை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.
பின்னர் மானாமதுரைக்கு வந்த அன்று இரவு ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துத் தூங்கிய பாலையா, காலையில் எழுந்தபோது நண்பணைக் காணவில்லை. பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விட்டான் என்பது தெரியவந்தது. அறியாத ஊரில் அலைந்து திரிந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தார் சாப்பாட்டுக் கடை நடத்திவந்த ஒரு பிராமணப் பெண்மணி. தான் ஒரு மலையாள பிராமணன் என்று அவரிடம் பொய் சொல்லும் சாதுர்யம் பாலையாவுக்கு இருந்ததால், சின்னச்சின்ன வேலைகளை செய்து கொடுத்து விட்டு, மூன்று வேளையும் வயிறை நிரப்ப முடிந்தது.
அதே சாப்பாட்டுக்கடைக்குப் பக்கத்திலேயே ஒரு கசாப்புக்கடை இருந்தது. அதன் உரிமையாளர் ஒரு நாடகக்கம்பெனி ஆரம்பிக்க இருக்கிறார் என்பதை மோப்பம் பிடித்த பாலையா, சாப்பாட்டுக்கடையிலிருந்து கசாப்புக்கடைக்கு மாறினார். நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் கஷ்டப்பட்டு செய்துவந்தார். ஒருமாதம் ஆகிவிட்டது. கறிக்கடை நடக்கிறதே தவிர, கலைக்குழு நடக்கப்போவதில்லை என்ற உண்மை புரிந்தது. கோபமடைந்த பாலையா, கடையைவிட்டு வெளியேவந்து, கல்லெடுத்து கடைக்காரரின்மேல் வீசினார். ஆத்திரமடைந்த கடைக்காரர், கத்தியை எடுத்துக்கொண்டு பாலையாவை விரட்ட, சாப்பாட்டுக்கடையில் ஒளிந்து தப்பித்த பாலையா, கடைக்கார பெண்மணி தந்த பத்து ரூபாயில் ஊருக்குப்போய்ச்சேர்ந்தார்.
அதே திருநெல்வேலியில் நாடகங்கள் நடத்திவந்த நாகலிங்கம் செட்டியாரின் பாலமோகன சங்கீத சபாவில் பாலையாவுக்கு இடம் கிடைத்தது. மாதம் ஆறு ரூபாய் சம்பளம்.அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலா தி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.
எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.
பி.யூ.சின்னப்பா நடித்த ஆரிய மாலா (1941), ஜகதலப் பிரதாபன் (1944) போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார் பாலையா. மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர்தான் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.
குணச்சித்திர நடிப்பிலும் ரங்காராவ் போல உச்சத்தைத் தொட்டவர் பாலையா. பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையா விடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாலையாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது. ‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள். தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’-மாதிரியான எல்லாம் பாலையாவை என்றும் நினைவில் நிறுத்தும்.
ஐம்பதுகள் தொடங்கி பாலையா என்ற நடிகரின் திரைப்பட நடிப்பு ஒரு காலகட்டத்தில் தமிழர்களின் வாழ்க் கையில் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தி யிருந்தது. ஒப்பீட்டளவில் குள்ளமான தோற்ற முடைய நடிகர் பாலையா தனது உடல் மொழி, குரலின் வழியே, அவர் நடித்த பாத்திரங்களின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்து இழுத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த பாலையா 1914 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாளில் பிறந்தார். அவருடைய இளமைப் பருவம் பொருளாதாரரீதியில் சிரமமானது. பள்ளிக் கல்வியில் விருப்பமற்ற பாலையா சிறுவனாக இருந்தபோது வீட்டைவிட்டு வெளியேறினார். உணவகத்தில் வேலை செய்த பாலையா, பின்னர் பால மோஹன சங்கீத நாடக சபா என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் திரைப் படத்தில் நடிக்க வந்த நடிகர்களில் பலர் நாடகப் பின்புலத்தினர். நாடகமேடை தந்த அனுபவங் களினால் காமிராவின் முன்னால் நடிப்பது பாலை யாவிற்கு எளிதாயிற்று. வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என பாலையாவின் முகம் பன்முகத்தன்மை கொண்டது. அத்துடன் அவர் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர். இத்தகைய ஆளுமையின் தனித்துவம் ஒளியோடு கரைந்து போய் விடாமல், அடுத்த தலைமுறைக்குத் தெரிய வேண்டுமென திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன் ‘நூற்றாண்டு கண்ட நடிகர் டி.எஸ். பாலையா’ என்ற நூலைத் தந்துள்ளார். அரசியல் சாராத நிலையில், ஒரு காலகட்டத்தில் சாதனை யாளராக விளங்கிய பாலையா பற்றிய நூலானது தகவல்களின் சுரங்கமாக விரிந்துள்ளது.
1936-இல் வெளியான ‘சதி லீலாவதி’ படத்தில் வில்லன் ராமநாதனாக பாலையாவின் திரையுலக நுழைவு தொடங்கியது. அன்றிலிருந்து 1972-இல் இறக்கும்வரை தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த பாலையா தனக்கென தனித்த ரசிகர் கூட்டத்தினை உருவாக்கியிருந்தார். அன்றைய திரைப்படங்களில் கதாநாயகனுக்குச் சமமாக வில்லன் பாத்திரம் உரு வாக்கப்பட்டிருந்தது. சில படங்களில் வில்லனுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். இரு வேறு எதிரெதிர் முனைகளில் நடைபெறும் மோதல்கள் பார்வையாளருக்கு சுவாரசியம் தந்தன. ஹீரோ விற்கு எனத் தனியே ஒளி வட்டம் எதுவும் தராத நிலையில் கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எனவேதான் பாலையாவிற்குத் தனது திறமையை வெளிப்படுத்தும்
அருமையான
வாய்ப்புகள் கிடைத்தன.
வில்லன் கேரக்டரில் மிடுக்கும் மெல்லிய நகைச்சுவையும் எடுத்தெறிந்து யாரையும் துச்ச மாகப் பார்க்கும் கண்களும் என, பாலையாவின் நடிப்பினை ரசித்தவர்கள்கூட, அவர் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். கதாநாயகனின் மேன்மையான குணங்களை வெளிப்படுத்த பாலையா போன்ற வில்லன்கள் பெரிதும் பயன்பட்டனர். சில திரைப் படங்களில் கதாநாயகனைவிட வில்லனின் பாத்திரம் வலுவானதாக இருந்தது. இராஜகுமாரி (1947) படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன், வில்லன் ஆல காலன் வேடத்தில் பாலையா. சுழலும் விழிகளும் நெளியும் உடலும், அடங்கியொடுங்கிப் பேசும் பேச்சும் என பாலையாவின் வில்லத்தனத்தில் பகடியும் பின்னியிருந்தது என சந்தானகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஜூபிடர் பிக்ஸர்சின் மோகினி (1948) படத்தில் பாட்டு புத்தகத்தில் கதாநாய கனான எம்.ஜி.ஆரின் பெயருக்கும் மேலே பாலை யாவின் பெயர் காணப்படுவதிலிருந்து அன்றைய காலகட்டத்தில் அவருக்கு இருந்த ஸ்டார் மதிப் பினைப் புரிந்து கொள்ளலாம். அதே படத்தில் பாலையா “உண்மையும் இது இல்லையா ஒருக் காலும் மறுக்காதே” என இனிமையாகப் பாடி யுள்ளார்.
சி.என். அண்ணாதுரையின் வேலைக்காரி கதை திரைப்படமாகியபோது வில்லன் மணியின் பாத்திரத்தில் நடித்த பாலையாவின் புகழ் உச்ச நிலையை அடைந்தது. கவுண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ ஆங்கிலப் படத்தில் வரும் ஆப் மாண்டி கிறிஸ்டோ பாத்திரம் போல தமிழ்ப்படத்திலும் கொண்டு வரவேண்டுமென்ற தனது விருப்பம் வேலைக்காரியின் மூலம் நிறைவேற்றியதாக பாலையா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். வேதாச்சல முதலியாரைப் பழி வாங்க நினைக்கும் ஆனந்தனின் நண்பன் மணியாக வரும் பாலையாவின் சதித் திட்டங்கள் கொடூரமானவை. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பெண்கள் “பாவி படுபாவி” என மணியைத் திட்டிக்கொண்டே போனார்கள். வில்லன் என்றால் பாலையா என்பது தமிழகத்தில் வலுவாக நிலை பெற்று விட்டது.
பாலையாவின் நடிப்பில் நகைச்சுவை மிளிர வெளியான தூக்கு தூக்கி (1954) அவரது நடிப்பில் திருப்புமுனை. வட நாட்டு சேட்டு நக்ராமாக வரும் பாலையா தில்லுமுல்லு திருட்டு முழி, புளுகு மூட்டை என சகல சேட்டைகளும் செய்து மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார். “ஹரே சேட் ஜல்ஸா பண்றான். சைத்தான். சைத்தான் குறுக்கே வர்றான்” என்ற பாலையாவின் பேச்சு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
பாலையாவின் நகைச்சுவை நடிப்பு காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் உச்சத்தைத் தொட்டது. சின்னமலை எஸ்டேட் உரிமையாளரான பாலை யாவின் நிலக்கிழாருக்கே உரித்தான திமிரான இயல்பு. பேச்சு இன்றளவும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. கதைச்சூழலுக்கேற்ப வேறுபட்ட முக பாவங்களுடன் ஏற்றஇறக்கமான குரலில் பாலையா நடிக்கும்போது பார்வையாளர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. குறிப்பாக நாகேஷ் சொல்லும் மர்மக்கதையும் அதைக் கேட்ட பாலையா அடைந்த பயத்தினை வெளிப்படுத்தும் முகபாவமும் இன்றளவும் ரசிக்கலாம்.
‘ஊட்டி வரை உறவு’ திரைப்படத்தில் பயந்த சுபாவமுள்ள பணக்காரர் வேடத்தில் வந்த பாலை யாவின் அஞ்சித் தவிக்கும் நடிப்பு நகைச்சுவை யோடு அற்புதமாக வெளிப்பட்டது. முன்னர் செய்த தவறான செயலை மனைவி, மகனிட மிருந்து மறைப்பதற்காக பாலையா படுகின்ற பாடுகள், படத்தை முழுநீள நகைச்சுவைச் சித்திர மாக்கின.
மதுரை வீரன் படத்தில் நரசப்பன், தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் வித்துவான், திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதர், பாமா விஜயம் படத்தில், மூன்று பிள்ளைகளின் அப்பா எனப் பாலையா நடித்த பாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளன.
எந்தவொரு சிறிய பாத்திரமானாலும் அதை மனதில் உள்வாங்கிக்கொண்டு, அந்தப் பாத்திர மாகவே மாறி நடிக்கும் திறன் பாலையாவிற்கு இயல்பிலே இருந்தது. எனவேதான் அவர் நடித்த படங்களில் உடன் யார் நடித்தாலும் தனது நடிப்பின் மூலம் தனது அடையாளத்தைப் பதித்து விடுவார்.‘ரீப்ளேஸ்மெண்ட்’ என்றொரு வார்த்தை உண்டு. பாலையா எனும் மகத்தான கலைஞனுக்கு ‘ரீப்ளேஸ்மெண்ட்’ இதுவரை எவரும் வரவில்லை. அதுதான் பாலையா ஸ்பெஷல்.
1914ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பிறந்த டி.எஸ்.பாலையா, 1972ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி காலமானார்.
அந்த பாலையா பிறந்த தினமின்று



 From The Desk of கட்டிங் கண்ணையா!

🔥

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,